"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/01/2013

மூதாதையர்களைப் பின்பற்றிய மக்கத்துக் காபிர்கள்!

'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்!' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (02:170)

இந்த வசனத்தை மேலெழுந்த வாரியாகப் படிக்காமல் சிந்தனையோடு வாசித்துப் பாருங்கள்! அல்லாஹ் அருளிய வேதத்தின்பாலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின்பாலும் வாருங்கள் என நாம் இன்றைய முஸ்லிம்களுக்கு அழைப்புக் கொடுத்தால் அவர்களில் எத்தனை பேர் அதனை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள்? அடுக்கடுக்கான வேத வசனங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தாலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அவர்கள் முன் குவித்தாலும்
“மூதாதையர் வழியே எங்கள் வழி” எனக் கூறி விட்டு தனது வேலைகளைக் கவனிக்கும் முஸ்லிம்களைப் பார்க்கும் போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.
மார்க்கத்தின் பெயரால் இவர்கள் செய்யும் சடங்கு சம்பிரதாயங் களுக்கு எவ்வித ஆதாரங்களையும் இவர்களால் அறவேகாட்ட முடியாது. யாராவது இவர்களை அணுகி ஆதாரம் கேட்டால் முன்னோர்களின் தலையில் போட்டு விட்டு மெல்ல நழுவி விடுவார்கள்.
குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றாமல் முன்னோர்களைப் பின்பற்றிய மக்கத்துக் காபிர்களிடம் அல்லாஹ் பின்வருமாறு கேள்வி எழுப்புகிறான்.

அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா? (அவர்கள் பின்பற்றுவார்கள்?) '

முன்னோர்களைப் பின்பற்றுதல்' என்பது ஒரு குருட்டுச் சித்தாந்தமாகும். முன்னோர்களின் செயற்பாடுகளில் தவறுகள் அறவே வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அல்லாஹ்விடம் நாம் வெற்றி பெற வேண்டுமாயின் அல்லாஹ் அருளியதை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும்.

மூதாதையர்களுக்கு அல்லாஹ் எதையும் அருளவில்லை. அவர்களே அல்லாஹ் அருளியதைப் பின்பற்றும் கடமை நிலையில் இருக்கும் போது அவர்களின் வழியைப் பின்பற்றுவது சுத்த மடமைத்தனமாகத் தெரியவில்லையா?
ஆக திருமறைக் குர்ஆனின் மேற்கண்ட இறை வசனம் 'நமது முன்னோர்கள் எந்த வழியோ அந்த வழியே நமது வழி' எனக் கூறுவோருக்கு சம்மட்டி அடியாக அமைந்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா? என்று யாருக்காவது சந்தேகம் வருமானால் இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்