"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/08/2013

அவ்லியாக்களின் அற்புதங்கள்!



நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் உள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டுமகான்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்; எனவே அவர்களிடம் நமது தேவைகளைக் கேட்கலாம்; பிரார்த்திக்கலாம்என்று சிலர் வாதிடுகின்றனர்.
அற்புதங்கள் பற்றி அவர்களுக்கு முழுமையான விளக்கமில்லாத காரணத்தால் தான் இத்தகைய வாதத்தை முன் வைக்கின்றனர்.
அவ்லியாக்கள் அற்புதங்கள் நிகழ்த்துவார்கள்என்ற இந்த நம்பிக்கை தான் தர்கா வழிபாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
அற்புதங்கள் அல்லாஹ்வின் கையில்
நபிமார்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அற்புதங்கள் நிகழ்த்தியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே அதை மறுப்பவர் குர்ஆனை மறுத்தவராவார்.
ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது அவர்களிடமிருந்து மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது. அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும் தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 13:38
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நஷ்டமடைவார்கள்.
(அல்குர்ஆன் 40:78)
நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 14:11)
அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) ‘என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(அல்குர்ஆன் 17:90-93)
மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகத்தை நம்புவதாகவும் கூறினார்கள்.
மனிதன் என்றும் இறைவனின் தூதர் என்றும் வாதிடும் என்னிடம் இறைவனிடம் கேட்பதை எப்படிக் கேட்க முடியும்? என்ற கருத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதிலில் அடங்கியுள்ளது.
அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும் போது மனிதர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஆதாரங்கள் போதுமானவையாகும்.
அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.
நபிமார்கள் கொல்லப்பட்டது ஏன்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.
அல்லாஹ்வின் உடன்படிக்கையும், மனிதர்களின் உடன்படிக்கையும் இருந்தால் தவிர அவர்கள் எங்கிருந்த போதும் அவர்களுக்கு இழிவு விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். அவர்களுக்கு வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் ஏற்க மறுத்ததும், நபிமார்களை அநியாயமாகக் கொலை செய்ததுமே இதற்குக் காரணம். மேலும் அவர்கள் பாவம் செய்ததும் வரம்பு மீறியதும் இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் 3:112
அல்குர்ஆன் 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களிலும் நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொலை செய்ததை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நினைத்த மாத்திரத்தில் அன்றாடம் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.
அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும் போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதன்று என்பதை இதிலிருந்து அறிய முடியும்.
நபிமார்கள் துன்பப்பட்டது ஏன்?
நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.
சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.
அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.
நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.
திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ‘அல்லாஹ்வின் உதவி எப்போது?’ என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2:214
முடிவில் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணிய போது நமது உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியோர் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரிந்த கூட்டத்தை விட்டும் நமது வேதனை நீக்கப்படாது.
திருக்குர்ஆன் 12:110
அல்லாஹ்வையே சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்களின் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ (என்றும் கூறினர்.)
திருக்குர்ஆன் 14:12
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான் என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்! (எனக் கூறினோம்).
திருக்குர்ஆன் 38:41,42
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர்.
திருக்குர்ஆன் 6:33
(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.
திருக்குர்ஆன் 6:34
அப்படியல்ல! உங்கள் உள்ளங்கள் ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டி விட்டன. எனவே அழகிய பொறுமையைக் கடைப் பிடிக்கிறேன். அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் சேர்க்கக் கூடும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர் (யஃகூப்) கூறினார். அவர்களை விட்டும் அவர் ஒதுங்கிக் கொண்டார்! யூஸுஃபுக்கு ஏற்பட்ட துக்கமேஎன்றார். கவலையால் அவரது கண்கள் வெளுத்தன. அவர் (துக்கத்தை) அடக்கிக் கொள்பவராக இருந்தார். ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமது உடல் மெலியும் வரை, அல்லது இறக்கும் வரை நீர் யூஸுஃபை நினைத்துக் கொண்டேயிருப்பீர் (போலும்)’ என்று அவர்கள் கூறினர். ‘எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்என்று அவர் கூறினார்.
திருக்குர்ஆன் 12:83-86
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
அல்குர்ஆன் 6:17
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் 7:188
நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் கட்டாயம் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.
எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இதெல்லாம் தேவையில்லை. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.
நபிமார்கள் மூலம் சில அற்புதங்கள் நிகழ்ந்தவுடன் அதை அவர்கள் தமது ஆற்றலால் செய்கிறார்கள் என்று தவறாக விளங்கிக் கொள்கின்றனர்.
இதை எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிமார்கள் மூலம் மட்டுமின்றி மாற்றார்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. வாயில்லா ஜீவன்கள் வழியாகவும் அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியது, அப்பறவை இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். ‘அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. ‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்என்று கூறியது. ‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது. அவளும், அவளது சமுதாயமும் அல்லாஹ்வையன்றி சூரியனுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். அவர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டி, அவர்களை (நல்) வழியை விட்டும் தடுத்துள்ளான். அவர்கள் நேர் வழி பெற மாட்டார்கள் (என்றும் கூறிற்று.) வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்தும் அல்லாஹ்வுக்கு ஸஜ்தாச் செய்ய மாட்டார்களா? நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் மகத்தான அர்ஷுக்கு அதிபதி. ‘நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்என்று அவர் கூறினார். ‘எனது இந்தக் கடிதத்தை நீ கொண்டு சென்று அவர்களிடம் அதைப் போடு! பின்னர் அவர்களை விட்டும் விலகி என்ன பதில் தருகிறார்கள் என்று கவனி!’ (என்றார்).
அல்குர்ஆன் 27:20-28
ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். சுலைமான் நபிக்காக ஒரே ஒரு பறவைக்கு ஒரே ஒரு தடவை அந்த ஆற்றலை அல்லாஹ் அளித்தான் என்று தான் விளங்க வேண்டும். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்று புரிந்து கொள்ளாமல் அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்பது தான் இதன் பொருள்.
சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.
அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போதுஎறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாதுஎன்று ஓர் எறும்பு கூறியது.
அல்குர்ஆன் 27:18
அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
எறும்பு, ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளான்.
பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகள் வழியாகவும் அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான்.
ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். இந்த விபரங்களைப் பின் வரும் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.
அவர்களுக்காக உடலுடன் கூடிய காளைக் கன்றை (ஸாமிரி) வெளிப்படுத்தினான். அது சப்தமும் போட்டது. உடனே அவன்இதுவே உங்கள் இறைவன். மூஸாவின் இறைவன். அவர் வழி மாறிச் சென்று விட்டார்என்றான். ‘அது எந்தச் சொல்லுக்கும் பதிலளிக்காது என்பதையும், அவர்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அது அதிகாரம் பெற்றிருக்கவில்லைஎன்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? ‘என் சமுதாயமே! இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்! அளவற்ற அருளாளன் தான் உங்கள் இறைவன். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! எனது கட்டளைக்குக் கட்டுப்படுங்கள்!’ என்று இதற்கு முன் அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்
அல்குர்ஆன் 20:88-90
மூஸா நபியின் சமுதாய மக்கள் எந்த அளவு உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் விதமாக அல்லாஹ் இந்த அற்புதத்தை ஸாமிரி மூலம் நிகழ்த்திக் காட்டினான். என் சமுதாயமே! ‘இதன் மூலம் சோதிக்கப்பட்டுள்ளீர்கள்என்று ஹாரூன் நபி கூறியதிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
நினைத்த மாத்திரத்தில் நினைத்த அற்புதத்தை ஸாமிரி செய்வான் என்று புரிந்து கொள்ள முடியாது. இது போலவே எதிர் காலத்தில் தஜ்ஜால் என்பவனும் சில அற்புதங்களை நிகழ்த்துவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் அவன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்யும் ஆற்றலுடையவனாகி விட்டான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.
இறந்தவரை ஒரு தடவை அவன் உயிர்ப்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) தெளிவுபடுத்தி விட்டனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 6599, 1749
ஷைத்தான் கூட எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான். நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி அவர்களது எண்ணங்களையே மாற்றி விடுகிறான்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? நம் கண் முன்னே ஒருவர் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டினால் உடனே அவரை மகான் என்றும் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார் என்றும் கருதி விடக் கூடாது. மனிதர்களைச் சோதித்துப் பார்க்க கெட்டவர்களுக்கும் அல்லாஹ் அற்புதம் வழங்குவான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு சான்றுகளை அல்லாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துக் காட்டிய பின்னரும் தங்கள் பழைய நம்பிக்கை விட்டு விட தயக்கம் காட்டுவோர் இருக்கத் தான் செய்கின்றனர்.
அடக்கத்தலங்களில் போய் அற்புதங்களை எதிர்பார்க்கின்றனர். எவ்வளவோ அற்புதங்கள் தர்காக்களில் நடக்கின்றனவே என்று தங்கள் கூற்றை இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
அற்புதங்கள் பல நிகழ்த்திய ஈஸா நபியை அழைக்கும் கிறித்தவர்களைக் காஃபிர்கள் என்று கூறும் இவர்களுக்கு, ஈஸா நபிக்குச் சமமாகாத மற்றவர்களை அழைப்பது ஈமானாகத் தோற்றமளிப்பது ஆச்சரியமாகவுள்ளது.
பல நபிமார்கள் மூலம் அல்லாஹ் அற்புதங்கள் நிகழ்த்தியதாக நாம் முன்னர் குறிப்பிட்டோம். அவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போது தான் நடந்தன. அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் வழியாக அற்புதங்கள் நிகழ்ந்தன என்று குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவே இல்லை.
ஆனால் இவர்களோ இறந்தவர்களுக்கு அற்புதங்கள் நடப்பதாகக் கூறுகின்றனர்.
மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்பாடுகளும் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்ம் 3084
உயிரோடு இருக்கும் போதே நினைத்த அற்புதங்களை யாரும் நிகழ்த்த முடியாது; இறந்த பின் அறவே எந்தச் செயல்பாடும் கிடையாது என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை.


அப்படியானால் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றனவே? இதை நாங்கள் பார்த்திருக்கிறோமே என்ற வாதத்துக்கு என்ன பதில்?
இதற்கான பதிலை காண  இங்கே கிளிக் செய்யவும்



நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்