"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

4/12/2015

யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குக் குர்ஆனில் இன்னொரு வசனத்தையும் இவர்கள் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

"எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!'' (எனவும் கூறினார்) நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். "நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?'' என்று அவர் கூறினார்.  அல்குர்ஆன் 12:96

யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை இழந்த தனது தந்தையின் முகத்தில் தனது சட்டையைப் போடுமாறு கொடுத்து விடுகிறார்கள். சட்டையைப் போட்டவுடன் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

பார்வை இல்லாமல் இருந்த யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை கிடைக்க உதவியுள்ளார்கள். ஒரு நபி இன்னொரு நபிக்கு உதவி செய்ய முடியும் என்பதால் அவ்லியாக்களும் நமக்கு உதவி செய்வார்கள். எனவே நாம் அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பது இவர்களின் தரங்கெட்ட வாதம்.

முதலில் யூசுஃப் (அலை) அவர்களுக்கும் யஃகூப் (அலை) அவர்களுக்கும் இடையே நடந்த இந்தச் சம்பவம் உலகத்தில் இருவரும் உயிருடன் இருக்கும் போது நடந்தது.
யஃகூப் (அலை) அவர்கள் யூசுஃப் (அலை) அவர்களிடம் கண் பார்வையை எனக்குத் திருப்பி அளியுங்கள் என்று பிரார்த்தனை செய்யவில்லை.

எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்த பிறகும் அவ்லியாக்கள் உதவி செய்வார்கள் என்ற வாதத்திற்கும் இந்த நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவர்கள் செய்யும் ஷிர்க்கை நிலைநாட்ட குர்ஆன் வசனத்துடன் அநியாயமாக விளையாடுகிறார்கள்.

நபிமார்கள் எந்தக் காரியத்தையும் சுயமாகச் செய்ய மாட்டார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தமது சட்டையை தந்தையின் முகத்தில் போட வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதால் அவ்வாறு யூசுஃப் (அலை) அவர்கள் செய்தார்கள். யஃகூப் (அலை) அவர்களுக்கும் பார்வை கிடைத்தது.

யஃகூப் (அலை) அவர்களுக்கு இவ்வாறு பார்வை கிடைக்கும் என்பதை யஃகூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் முன்கூட்டியே அறிவித்துள்ளான். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம்.

நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். "நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?'' என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:96

அல்லாஹ் ஏற்படுத்திய ஏற்பாட்டின் படியே யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது. நபி யூசுஃப் (அலை) அவர்கள் சுயமாக இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்கள். அவ்வாறு செய்திருந்தால் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வையும் கிடைத்திருக்காது. எங்கிருந்து கொண்டும் குணமளிக்க முடியும் என்றால் தனது சட்டையைக் கொடுத்தனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்து அதன் படி அவர்கள் செய்த காரணத்தினாலேயே பார்வை கிடைத்தது.

அய்யூப் (அலை) அவர்கள் நோய்வாய்பட்டிருந்த போது புல்லை எடுத்து உடலில் அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அய்யூப் (அலை) அவர்கள் அல்லாஹ் கூறியவாறு செய்தார்கள். நோய் குணமாயிற்று. இதை அல்லாஹ் குர்ஆனில் விவரிக்கின்றான்.

இந்நிகழ்விலிருந்து நோயை நீக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு இருந்தது என்று புரிவோமா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் நோயை குணப்படுத்தும் சக்தி பெற்றிருந்தார்கள் என்று புரிவோமா?

மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது. அந்த கைத்தடி மூலம் அவர்கள் கடலை பிளந்தார்கள். இவையெல்லாம் கைத்தடியின் மகிமையினாலோ மூசா (அலை) அவர்களின் ஆற்றலினாலோ நடக்கவில்லை. அல்லாஹ் கைத்தடிக்கும் அதை வைத்திருந்த மூசா (அலை) அவர்களுக்கும் உத்தரவிட்ட காரணத்தாலே இவ்வாறு நடந்தது.

இதே போன்று தான் யூசுஃப் (அலை) தனது சட்டையை யஃகூப் (அலை) அவர்களின் முகத்தில் போட வேண்டும் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. இதன் மூலம் அல்லாஹ் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை தர விரும்பியுள்ளான். இதை அல்லாஹ் குர்ஆனில் சொன்னதால் நாம் நம்புகிறோம்.

இது போன்ற அற்புதங்களை நபிமார்களானாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நிகழ்த்த முடியும் என்று குர்ஆன் தெளிவாகப் பல இடங்களில் கூறுகின்றது. நபிமார்கள் அற்புதம் நிகழ்த்தினாலும் அதன் அதிகாரம் முழுவதும் அல்லாஹ்விடம் தான் உள்ளது.

நபியானாலும் விரும்பிய நேரத்தில் விரும்பிய அற்புதங்களைச் செய்ய முடியாது. எந்த நேரத்தில் எந்த அற்புதத்தைச் செய்ய அல்லாஹ் நாடுகிறானோ அப்போது தான் அது நடந்தேறும். இந்த அடிப்படையில் தான் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

இந்நிகழ்வை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். எனவே நம்புகிறோம். நம்ப வேண்டும். ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா, அப்துல் காதிர் ஜீலானீ இன்னும் இவர்களின் அவ்லியா பட்டியலில் வரக்கூடியவர்கள் இது போன்ற அற்புதங்களைச் செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இவர்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்று அல்லாஹ் நம்பச் சொல்கிறானா? ஈமான் கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா?

ஒரு பேச்சிற்கு இவர்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய ஆற்றல் இவர்களுக்கு இருந்தது என்று குருட்டுத்தனமாக நம்பினாலும் இன்றைக்கு இறந்துவிட்ட இவர்களை உயிருடன் இருக்கும் நாம் எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் நமது அழைப்பை ஏற்று உதவி செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

மறுமையில் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்லவர்கள் பரிந்துரை செய்ய முடியும். ஆனால் பரிந்துரை செய்பவர்கள் யார்? அவர்கள் யாருக்கு பரிந்துரை செய்வார்கள் என்பவை அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. இதை யாரும் அறிய முடியாது.

ஆனால் மக்கத்து காஃபிர்கள் தாங்களாக சிலரை, இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பி அவர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். இத்தகையவர்களைத் தான் அல்லாஹ் முஷ்ரிக்குகள் என்று குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மக்கத்து காஃபிர்களின் இந்தச் செயலுக்கும் இந்தப் பரேலேவிகளின் செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அல்லாஹ்வுடைய அதிகாரங்களில் அவன் கூறாமல் இவர்களாக இந்த அவ்லியாவுக்கு (?) அனைத்து ஆற்றலும் உள்ளது என்று நம்பி மக்கத்து இணைவைப்பாளர்களைப் போல் உதவி தேடுகிறார்கள்.

பரேலேவிகளே! உங்களின் கற்பனையும் மனோ இச்சையும் கட்டுக்கதைகளும் தான் மார்க்க ஆதாரமா? நீங்கள் யாருடன் மோதுகிறீர்கள்? யாரது அதிகாரத்தில் கை வைக்கின்றீர்கள்? அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்வதால் உங்களுக்கு என்ன கேடு வரப்போகின்றது? என்பதை சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகளைக் கூட அவ்லியாக்களின் (?) பொய்யான ஆற்றலை நிறுவுவதற்கு முடிச்சுபோடுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அல்லாஹ்வின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மாறாக இவர்களுக்கு அவ்லியா பைத்தியம் பிடித்துவிட்டது என்பது தான் உண்மை.

இந்த பரேலேவிகள் இறந்துவிட்ட அவ்லியாக்கள் (?) உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு இது போன்ற சொத்தை வாதங்களைத் தவிர்த்து எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. இவர்கள் சம்பந்தமில்லாத இதுபோன்ற வசனங்களைத் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் கொள்கை வழிகேட்டின் உச்சியில் உள்ளது என்பதையே இவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

இவர்கள் குர்ஆனிலிருந்து காட்டிய ஒரு  வசனம் தொடர்பாக மட்டுமே இந்தக் கட்டுரையில் பதிலளித்துள்ளோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய பதிலை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் அறிந்துகொள்வோம்.

நன்றி : http://www.onlinepj.com

இதுபற்றிய விடியோ
விடியோ 1

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்