"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

2/22/2013

பள்ளிவாசல் என்றால் என்ன?

சிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம், சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல்,உருவப்படங்களை வரைதல், உருவப்படங்களை மாட்டி வைத்தல், சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதையும் அறிவோம்.
நபியவர்கள், "இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே'' என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது. மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும், தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.

சமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது.
அதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும். இது பற்றி விரிவாகக் காண்போம்.

பள்ளிவாசல் என்றால் என்ன?
இன்றைக்கு முஸ்லிம்கள் பாங்கு சொல்லி ஐங்காலத் தொழுகைகளை  ஜமாஅத்தாக நிறைவேற்றும் இடத்திற்குப் பள்ளிவாசல்கள் என்று  குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டைக் கண்டித்து உரையாற்றும் போது நாம் "யூத கிறிஸ்தவர்களின் மீது  அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தங்களின் நபிமார்களின் சமாதிகளையெல்லாம் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர்'' என்ற ஹதீஸைக் குறிப்பிடும் போது தர்ஹா  வழிபாட்டை  ஆதரிப்பவர்கள்,  நாங்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை.   பள்ளிவாசல்களில் பாங்கு கூறுவார்கள். நாங்கள் சமாதிகளில் பாங்கு கூறவா செய்கிறோம்?  பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத்  தொழுகிறார்கள். நாங்கள் சமாதிகளில் ஜமாஅத்தாகத் தொழவா செய்கின்றோம்?' என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். களியக்காவிளை விவாதத்தின் போது கூட சில கோமாளிகள் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்தனர்.

பள்ளிவாசல் என்றால் என்ன? என்பதைத் திருக்குர்ஆன் ஒளியில் நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுப்பது என்றால் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
பள்ளிவாசல் என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கும் வார்த்தைக்கு  அரபியில் மஸ்ஜித்' என்பதே மூலச் சொல்லாகும். மஸ்ஜித்' என்றால் பணியுமிடம் என்று பொருளாகும். அது போன்று தலையை பூமியில் வைத்து ஸஜ்தா செய்யுமிடம் என்றும் பொருள்படும்.
அதாவது அல்லாஹ்வாகிய ஒரே இறைவனை எவ்வாறு பணிய வேண்டும் என்பதை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இவ்வாறு பணிவதற்காகக் கட்டப்படும் ஆலயத்திற்குப் பெயர் தான் மஸ்ஜித்' அதாவது பள்ளிவாசல் ஆகும்.
இதன் காரணமாகத் தான் கஅபாவைக் கட்டுமாறு இபுறாஹிம் நபிய வர்களுக்கு இறைவன் கட்டளையிடும் போது பின்வருமாறு  கூறுகிறான்.
"எனது ஆலயத்தை தவாஃப் செய்வோருக்காகவும்,  இஃதிகாஃப் இருப்போ ருக்காகவும், ருகூவு,  ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்!''  என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி    மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

"எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும்,  நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது  ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை  நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 22:26)

தவாஃப் (கஅபா ஆயத்தை மட்டும்) செய்தல், நிலையில் நிற்பது, குனிதல்,  ஸஜ்தா செய்தல் போன்று இறைவனுக்குப் பணிவைக் காட்டும் செயல்களைச் செய்வதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் தான் பள்ளி   வாசலாகும். 
மேலும் இறைவனை உயர்த்தி அவனுடைய பெயர்களை  திக்ர்'  நினைவு   கூர்வதற்காக எழுப்பப்படும் ஆலயமும் பள்ளிவாசலாகும்.
(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும்  அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும்,  மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். (அல்குர்ஆன் 24:36)

மனிதர்களில் ஒருவர்மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 22:40)

பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி  இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை  அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்,  மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)
மேற்கண்ட வசனங்களில் இறைவனுடைய பெயர்கள் காலையிலும் மாலையிலும் எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யப்படுவதற்காக உருவாக்கப்பட்ட  ஆலயமே பள்ளிவாசல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
மேலும் பிரார்த்தனை செய்வதற்காக உருவாக்கபட்ட ஆலயமும் பள்ளிவாசலேயாகும்.
"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே  மீள்வீர்கள்! (அல்குர்ஆன் 7:29)

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன்72:18)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ,  மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளப்படாது.
(குறிப்பு: இறையில்லம் கஅபா அமைந்துள்ள பள்ளியே மஸ்ஜிதுல் ஹராம் ஆகும். மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியே மஸ்ஜிதுந் நபவீ எனப்படுகிறது. ஜெரூசலேமிலுள்ள புனிதப் பள்ளிவாசலே  மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்.)அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1189
மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸிலிருந்து பள்ளிவாசல் என்பதன் அர்த்தத்தை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம்.

இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக்கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர்  செய்வதற்காகவும்,  பிரார்த்தனை  செய்வதற்காவும்,  நன்மையை  நாடிப் பயணம் செய்வதற்காகவும் (கஅபா, மஸ்ஜிதுந் நபவீ, அக்ஸா ஆகிய மூன்று மட்டும்) ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.
இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் கட்டளையிடுகின்றான்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன்72:18)

ஒரு சமாதியை மையமாக வைத்து அதற்குப் பணிவைக் காட்டுவ தற்காகவும், அதில் அடங்கியுள்ளவரை திக்ர் செய்து நினைவு  கூர் வதற்காகவும், சமாதியில் அடங்கப்பட்டவரிடம் பிரார்த்தனை  செய்வதற்காகவும், நன்மையை நாடித் தங்குவதற்காகவும் ஒரு கட்டடம் கட்டப்பட்டால் அது சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசலாகும். அல்லது சமாதியே இல்லாமல் மனிதனையோ  அல்லது இறைவனல்லாத ஏதாவது  ஒன்றையோ  மகத்துவப்படுத்துவதற்காகக் கட்டப்பட்டகட்டடமும் பள்ளி  வாசலேயாகும்.   அதாவது மேற்கண்ட நோக்கத்தில் இறைவனுக்காக மட்டும் தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் கட்டப்படக்கூடாது.
எனவே யூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி  வாசல்களாக எடுத்துக் கொண்டனர் என்று நபியவர்கள் கூறியதன் கருத்து யூத கிறிஸ்தவர்கள் சமாதிகளில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுதார்கள் என்பதல்ல. பாங்கு என்பதும் ஜமாஅத்தாகத் தொழுதல் என்பதும் நபியவர்களின் உம்மத்திற்கு மார்க்கமாக்கப்பட்டதாகும். நபியவர்களுக்கு முந்தைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு  பாங்கு  கூறி ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது கிடையாது. அப்படியென்றால் அவர்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள் என்பதன் விளக்கம் ,இறைவனுக்காக ஆலயங்களை  எழுப்பி என்னென்ன காரியங்களைச்செய்ய வேண்டுமோ  அதேகாரியங்களை  சமாதி  களுக்காக        ஆலயங்களை  எழுப்பிச் செய்தார்கள் என்பதேயாகும்.
இதன் மூலம், பள்ளிவாசலில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுவார்கள். தர்ஹாக்களில் பாங்கு கூறி நாங்கள் ஜமாஅத்தாகத் தொழவில்லை. எனவே நாங்கள் சமாதிகளை பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை. பள்ளிவாசல் வேறு, தர்ஹா வேறு' என்று கூறுவது போலியான வாதம் என்பதை யாரும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப்  போன்று சமாதிகளை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் தர்ஹாக்கள். நாகூர் தர்ஹாவை நாகூர் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும், பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும் மேலும் ஒவ்வொரு ஊராரும் தங்கள் ஊரின் தர்ஹாக்களை பள்ளிவாசல்கள் என்றும் குறிப்பிடுவதே இதற்குத் தெளிவான சான்றாகும்.
இவ்வாறு சமாதிகளைப் பள்ளிவாசல்களாக்கிய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றியும் அவ்வாறு நபியவர்களின் உம்மத்துகள் செய்து  விடக்கூடாது  என்பதையும் நபியவர்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் சாபம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத் துணி  ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது  அதைத் தம் முகத்திருந்து விலக்கி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! தம் இறைத்தூதர்கன் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்''  என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: புகாரி 436

حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ النَّجْرَانِيِّ، قَالَ : حَدَّثَنِي جُنْدُبٌ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ وَهُوَ يَقُولُ : ” 
أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ ، أَلَا فَلَا تَتَّخِذُوا
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை  வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை   விதிக்கிறேன்''   என்று கூறுவதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925

நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள்,நபியவர்களைப் பொது  மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே   தெளிவுபடுத்துகின்றார்கள்.

عن عائشة - رضي الله عنها - أنها قالت: قال رسول الله - صلى الله عليه وسلم - في مرضه الذي لم يقم منه: "لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد". قالت: ولولا ذلك أُبرز قبره، غير أنه خشي أن يُتَخَذَ مسجداً. صحيح البخاري (1390)، وصحيح مسلم (529).
நபி (ஸல்) அவர்கள் (தமது கடைசிக் காலத்தில்) நோயுற்றிருந்த போது, "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது  அடக்கத்தலங்களை  வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டார்கள்'' எனக் கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடமும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்;அல்லது அவர்களின் அடக்கவிடமும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடும் என்ற பயம் அவர்களுக்கு  ஏற்பட்டிருக்கிறது.  அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: புகாரி 1390

நபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்கு பணிதல். அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை  செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு  அதனை  வணக்கத்தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப்படவில்லை. இன்றளவும் நபியவர்களின் கப்ரை  அது  வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.
"இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி  விடாதே! என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி  விடாதீர்கள்'' என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும் ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.
மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்
உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்து விடுவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்''  என்று  சொன்னார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ர), நூல்: முஸ்லிம் 918

கப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை  மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை  வணக்க தலமாக்குவதாகும். இன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை  மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை  முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப்படுத்துகிறது.
 கப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது
இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ் விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு  யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.
அப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா? என்ற கேள்வி நம்மிடம் எழலாம்.
இது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது  பிற்காலங்களில் கப்ரை பள்ளிவாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம்.
இதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ  தடை செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது  உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை   செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610
சாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்தெறியுமாறு  கட்டளையிட்டுள்ளார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!''  என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்), நூல்: முஸ்லிம் 1764
நபியவர்களின் பார்வையில் சமாதிகள்
கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது  என்பதை  நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு  படுத்தியுள்ளார்கள்.
இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே  நமக்கு  வழிகாட்டி  யுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகல் சிலவற்றை  உங்களுடைய இல்லங்கலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள். அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1430)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அடக்கத் தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) நூல்: முஸ்லிம் (1768, 1769)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறையையும் குளியலறையையும் தவிர
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: அஹ்மத் (11801)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். என்னுடைய கப்ரை கந்தூரி கொண்டாடுமிடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: அபூ தாவூத் (1746)
மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் சமாதிகளை, தொழுதல்,  ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே  நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
சபிக்கப்பட்ட பெண்கள்
கப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (976)
பெண்கள் என்றாவது ஒருநாள் மறுமை சிந்தனைக்காக பொது  மையவாடிக்குச் சென்று விட்டு வந்தால் அது தவறு கிடையாது. ஆனால் கப்றுகளுக்கு அதிகமாகச் செல்லும் பெண்களை நபியவர்கள் சபித்திருக்கின்றார்கள்.
சமாதிகள் வணங்குமிடங்களாக மாற்றப்படுவதில் பெண்கள் பெரும் பங்கு வகித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் தான் நபியவர்கள் இவ்வாறு சபித்திருக்கின்றார்களோ என்று நாம் எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இன்று தர்ஹாக்கள் கொடிகட்டிப் பறப்பதற்கு 90 % சதவிகிதம் பெண்களே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. 
 கோமாளிக் கூத்து
தமிழகத்தைச் சார்ந்த மவ்லவிகள் சிலர், கப்ருகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குதல் என்றால் ஒரு மய்யித்தை அடக்கி அந்தக் கப்ருக்கு மேல் பள்ளிவாசலைக் கட்டுவது தான் இதன் பொருள் எனக் கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கோமாளித்தனமானது என்பதை நபியவர்களின் வார்த்தைகளிலிருந்தே தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகல் சிலவற்றை  உங்களுடைய இல்லங்கலும் நிறைவேற்றுங்கள். உங்களுடைய இல்லங்களை கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (432), முஸ்லிம் (1427)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.   அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1430)
வீடுகளில் மய்யித்துகளை அடக்கம் செய்தால் மட்டும் தான் வீடுகளை  கப்ருகளாக மாற்றிவிட்டோம் என்பதல்ல. மாறாக, வீடுகளில் குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்ற காரியங்களைச் செய்யாமலிருப்பதும்     வீடுகளைக் கப்ருகளாக மாற்றுவது தான். ஏனென்றால் கப்ருகளில் தான் இது போன்ற காரியங்கள் நடைபெறாது. அவ்வாறு  ஒரு வீடு  இருக்குமென்றால் அது மண்ணறைக்குச் சமம் என்பதையே  நபியவர்கள் விளக்குகிறார்கள்.
அது போன்று தான் "யூதர்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தங்களின் நபிமார்களது  அடக்கத்தலங்களை  வணக்கத்தலங்களாக ஆக்கி விட்டார்கள்''  என்று நபியவர்கள் கூறியிருப்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசலில் தான் பிரார்த்தனை செய்தல், குர்ஆன் ஓதுதல்,  ஸஜ்தா செய்தல், நன்மையை நாடி தங்கியிருத்தல் இதுபோன்ற இன்னும் பிற வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும். இவைகளைச் செய்வதற்குரிய இடம் கப்ருஸ்தான் அல்ல. ஒருவன் கப்ருஸ்தானில் இது  போன்ற காரியங்களைச் செய்வான் என்றால் அவன் சமாதியை  வணகத்தலமாக, மஸ்ஜிதாக எடுத்துக் கொண்டான் என்பது தான்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்