"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

கருத்து மோதல்

முஸ்லிம்களில் முன்னோர்களையும், இமாம்களையும் கண்மூடிப் பின்பற்றுபவர்கள் ஒருபக்கம்.
குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம்.

இரு சாரருக்கும் பத்திரிகைகள் இருக்கின்றன. அவர்களுடைய அபிமான பத்திரிகையை மட்டும் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தப் பத்திரிகை சொல்வதுதான் இஸ்லாம்; கிணற்றுத் தவளைக்குக் கிணறுதான் உலகம். மனிதர்கள் தவறிழைப்பவர்கள். பத்திரிக்கை இஸ்லாத்திற்கு முரணான கருத்தையும் போதிக்கும். அதைச் செயல்படுத்தினால் மறுமையில் அவர்களைப் பாதிக்கும். கருத்தை உரசிப்பார்க்க உரைகல் தேவை.
அதற்கு நேர் முரணான பத்திரிக்கைதான் உரைகல். அப்போதுதான் சத்தியத்தையும், அசத்தியத்தையும் இனம் காண முடியும். இவர்கள் கண்களை மூடிக்கொண்டு அசத்தியத்திற்குக் கால் பிடிப்பார்கள். சத்தியத்தை காலால் மிதிப்பார்கள். இப்படியே இவர்களது வாழ்க்கைப் பயனம் முடியும்; கால கடந்த ஞானம் பெறுவார்கள் மறுமையில்
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் ஆ, கை சேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே என்று கூறுவார்கள்.
எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்.
எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களை பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக (என்பர்) (அல்குர்ஆன் 33:66-68)

வழிகேட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றொருவர் முரண்பட்ட இரு கருத்துகளை செவியுறுகிறார். இவர்கள் சொல்வதுதான் என்ன? என்ற எண்ணம் முதலில் தோன்றுகிறது. விளைவு குர்ஆன், ஹதீஸ் ஒளியில் சத்தியம் ஒளிர்கிறது. அசத்திய இருள் அகல்கிறது. இறுதியில் தான் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார். இவர்களைப் பார்த்து அல்லாஹ் நன்மாராயம் கூறுகிறான்.
(என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயம் கூறுவீராக! அவர்கள் சொல்லை உபதேசங்களைச் செவியேற்று அவற்றிலுள்ள அழகானவற்றைப் பின்பற்றுகிறார்கள். அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தான். இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.  (அல்குர்ஆன் 39:17,18)
ஒரு விஷயத்தைப் பற்றிய பலருடைய பேச்சுகள், எழுத்துகள் நம்மை சிந்திக்க வைத்து சுய சிந்தனைக்கு வழி வகுக்கும்.
பல்வேறு பத்திரிகைகளைப் படிக்கும்போது ஒரு விஷயத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களை சமுதாயம் தெரிந்து கொள்ளும். சிந்திக்கத் தலைப்பட்டு சுய சிந்தனைக்குத் தயாராகும். சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறிந்து கொள்ளும் சமுதாயம் இதன் அடிப்படையில் உருவாகி விட்டால் யாரும் எதைச் சொல்லியும் ஏமாற்ற முடியாது.
கருத்து மோதலால் சுய சிந்தனை வளர்கிறது; தக்லீத் (கண்மூடிப் பின்பற்றல்) தேய்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்