"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/07/2014

மக்காவில் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்ட காபிர்களின் நம்பிக்கையும், இன்று கந்தூரி உரூஸ் விழாக்களில் பங்கேற்பவர்களின் நம்பிக்கையும்

உமது இறைவனுக்காக தொழுவீராக! (அவனுக்காகவே) அறுப்பீராக (108:02)

மரணித்துப்போன மகான்களின் பெயரால் கால்நடைகளை அறுத்து உணவு சமைத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வை கந்தூரி என மக்கள் அழைக்கின்றனர்.
முதலில் கந்தூரி என்ற வார்த்தை அறபு மொழி வார்த்தை அல்ல. இஸ்லாத்தின் பரம விரோதியாக வாழ்ந்து மடிந்த அபூஜஹ்ரலுக்குக் கூட 'கந்தூரி' என்ற வார்த்தை தெரியாது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இந்தக் கந்தூரியைத் தெரியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கந்தூரி கொடுத்ததாகவோ அருமைத் தோழர்கள் 'நார்ஸா' வினியோகம் செய்ததாகவோ 'இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்' கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில், தனக்கு முன் வாழ்ந்து மறைந்த போன இறைத்தூதர்களை நினைவு கூர்ந்து எந்த விருந்தும் படைக்கவில்லை. வருடாந்தக் கந்தூரி என்ற பெயரில் மஸ்துந்நபவியை அலங்கரிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணித்து பல நூறு வருடங்கள் கழிந்ததன் பிற்பாடு மார்க்க அறிவற்றவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட அநாச்சாரமே 'கந்தூரி' ஆகும்.
குத்பு நாயகம் என்ற பெரியாருக்காக கால்நடைகளை அறுத்துக் கொடுத்தால் அக்கந்தூரிக்கு குத்பிய்யாக் கந்தூரி என்று சொல்லப்படும். ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தீ என்ற பெரியாருக்காக ஆடு மாடுகளை அறுத்துக் கொடுத்தால் அக்கந்தூரிக்கு ஹாஜாஜீ மகா கந்தூரி என்று சொல்லப்படும்.   ஜௌஹர் ஷாஉல் என்பவருக்காக மாடுகள் அறுத்துக் கொடுத்தால் ஹாஜா மக்காம் கந்தூரி என்று சொல்லப்படும். ஷாகுல் ஹமீது பாதுஷா என்பவருக்காக கல்முனையில் அறுத்துக் கொடுத்தால் கடற்கரைக் கந்தூரி என்று சொல்லப்படும். இன்னும் 'புஹாரி கந்தூரி, குருந்தையடி அப்பா நாயகம் கந்தூரி, கோட்டமுனை அப்பா கந்தூரி' என்று பல கந்தூரிகளை நடாத்த ஆங்காங்கே சங்கங்களும் திருச்சபைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு உணவு வழங்குவதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால் மகான்களின் பெயரால் அறுத்துக் கொடுப்பதை இஸ்லாம் மறுக்கின்றது. அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவற்றை உண்ணலாகாது என திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (02:173)
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன (05:03)
தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக் கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (06:145)
இந்த வசனங்கள் அனைத்தும் 'அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவற்றை' உட்கொள்ளக்கூடாது என்பதை எமக்கு அழுத்தமாகப் போதிக்கின்றன. அல்லாஹ், பன்றியின் இறைச்சியைத் தடை செய்யும் வரிசையிலேயே அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட உணவையும் சேர்த்துள்ளான்.
ஆதலால் கந்தூரியில் வினியோகம் செய்யப்படும் நார்ஸாக்களை உட்கொள்வது பன்றி இறைச்சியை உட்கொள்வதற்குச் சமனாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கந்தூரியினால் பலர் இலாபம் அடைகின்றனர். கந்தூரி நடாத்தும் போலிகள் பொதுமக்களை நோக்கி 'உங்கள் நேர்ச்சைகளைக் கொடுங்கள்' 'உங்கள் காணிக்கைகளை வழங்குங்கள்' என்று கூறி பல இலட்சங்களை வசூலித்து விடுகின்றனர். இஸ்லாம் பற்றிய போதிய அறிவில்லாத அப்பாவிகள் அன்றாடம் உழைப்பதில் பெரும் பங்கை 'கந்தூரி காணிக்கை' எனக் கூறி தனியாக எடுத்து வைத்து பின்னர் பெருந்தொகையாக அள்ளிக் கொடுத்து விடுகின்றனர். இதன் மூலம் தமக்கு அவ்லியாவின் அருள் கிடைப்பதாக நம்புகின்றனர். கந்தூரிக்கு காணிக்கைகளை அள்ளிக் கொடுத்தால் அவ்லியா நமது கஷ்ட நஷ்டங்களை அல்லாஹ்விடம் எடுத்துரைப்பார் என்ற குருட்டு நம்பிக்கையே இன்னும் கந்தூரிகள் உயிர்வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாகும்.
அன்று மக்காவில் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்ட காபிர்களின் நம்பிக்கையும், இன்று கந்தூரி உரூஸ் விழாக்களில் பங்கேற்பவர்களின் நம்பிக்கையும் ஒன்றாகவே உள்ளன. அல்லாஹ் திருமறையில் கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (39:03) என்றும் அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! (10:18) என்றும் கூறுகின்றான்.
இவ்விரு வசனங்களும் அன்றைய இறைநிராகரிப்பாளர்களின் நம்பிக்கையைக் கூறினாலும் இதே நம்பிக்கையில் தான் இன்று கந்தூரிக்கு நேர்ச்சை கொடுப்பவர்களும் உள்ளனர். கந்தூரியில் நாங்கள் மாட்டை அறுக்கும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று தான் கூறுகின்றோம் என கந்தூரியை நியாயப்படுத்துவோர் கூறிவருகின்றனர். இஸ்லாத்தில் ஒரு பிராணியை அறுக்கும் போது இரு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். இரண்டாவது 'அல்லாஹ்வுக்காக மட்டுமே அறுக்க வேண்டும்' இவ்விரு நிபந்தனைகளில் ஒன்று மீறப்பட்டாலும் அதனை உட்கொள்ள முடியாது. இவர்களைப் பொருத்தமட்டில் 'பிஸ்மில்லாஹ்' என்று சொன்னாலும் அவ்லியாவின் பெயராலேயே அறுத்துக் கொடுக்கின்றனர். கந்தூரியில் அறுக்கப்படும் இறைச்சியை பொதுமக்களுக்கு தர்ஹா நிருவாகம் வினியோகித்தாலும் அதன் மூலம் அவ்லியாக்களிடம் (பறகத்) புண்ணியத்தை எதிர்பார்க்கின்றனர். இவர்களின் நோக்கம் சரியில்லை என்பதே நமது வாதமாகும். கந்தூரியில் விநியோகிக்கப்படும் நார்ஸாவுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே இவர்களின் நோக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இந்துக்கள் தங்கள் கோவில்களில் உட்சவ விழாக்களின் போது பிரசாதம் வழங்குவார்கள். பிரசாதம் என்பது சக்கரை போன்ற பதார்த்தங்களை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருளாகும். மிகச் சாதாரண பொருளாக கடைகளில் விற்பனைக்கு இருந்த சக்கரை சாமிக்கு முன் பூஜிக்கப்பட்டவுடன் புண்ணியம் பொருந்திய பொருளாக மாறிவிடுகின்றது. அத்துடன் அதன் பழைய பெயர் மறைந்து 'பிரசாதம்' என புதிய பெயர் வந்து விடுகின்றது. ஜனாதிபதி உட்பட பெரும் பெரும் அரசியல்வாதிகள் வரை வரிசையில் நின்றே அதை வாங்கும் காட்சிகளை கோவில்களில் நாம் காணுகின்றோம். இதே தோரணையிலேயே கந்தூரி நார்ஸாவும் தயாராகின்றது.
பெருநாள் காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் வீடுகளில் சமைத்து உட்கொள்ளும் விஷேட உணவுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை நார்ஸாவுக்கு மக்கள் கொடுக்கின்றனர். வீடுகளில் சமைக்கப்படும் உணவு எவ்வளவு ருசியாக இருந்தாலும் அதற்கு 'நார்ஸா' என்று யாரும் சொல்வதில்லை. வீடுகளில் சமைத்த உணவைச் சுட்டிக் காட்டி 'பறகத்திற்காக இதைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்' என யாரும் யாருக்கும் கூறமாட்டார்கள். வீட்டில் சமைத்தது போன்ற உணவை தர்ஹா வளாகத்தில் சமைத்தால் அதற்குப் பெயர் புர்யாணி அல்ல. மாறாக 'நார்ஸா' என பெயர் மாறிவிடுகின்றது. சாதாரணமாக இருந்த சக்கரை சாமிக்குப் பூஜிக்கப்பட்டவுடன் 'பிரசாதமாக' மாறியது போல், சாதரணமாக இருந்த சோறு கந்தூரியில் சமாதிக்காக சமைக்கப்பட்டவுடன் 'நார்ஸா' என மாறி விடுகின்றது. அதனைப் பெற்றுக் கொள்ள மக்கள் வரிசையில் நிற்கின்றனர். சிலர் கந்தூரிச் சோற்றை எடுத்து வெயிலில் காய வைத்து அதனை வருடம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு நோய் நிவாரணம் தேடுகின்றனர்!!! (பைத்தியங்கள் பலவிதம்) ஹாஜாஜீ கந்தூரி என்றால் ஹாஜாவை மையப்படுத்தியே சமையல் முதல் விநியோகம் வரை அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படுபவற்றையும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பூஜிக்கப்படுபவற்றையும் முஸ்லிம்கள் உட்கொள்ளக் கூடாது. பௌத்தர்கள் விநியோகிக்கும் தன்சலையையும் இந்துக்கள் விநியோகிக்கும் பொங்கல் படையலையும் தவிர்க்கும் முஸ்லிம்கள் அத்வைதிகள் விநியோகிக்கும் 'கந்தூரி நார்ஸாவை' மட்டும் 'இரணம்' என்றும் 'உணவை வீசக் கூடாது' என்றும் கூறி உட்கொள்வது கொடுமையிலும் பெரும் கொடுமையாகும்.
அவ்லியாவுக்காக அறுத்தால் அல்லாஹ்வின் சாபம் கிடைக்கும்!
அபுத்துபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (கலீபா) ஆலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக என்ன கூறி வந்தார்கள்?' என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மேலும் 'நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்' என்றார்கள். நான், 'அவை யாவை, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!' என்று கேட்டேன். அலீ (ரலி) அவர்கள், 'தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் பிராணிகளை அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல், மைல்கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்.' என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 4002
பயங்கர எச்சரிக்கை!
'புவானா' என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தெய்வங்கள் ஏதும் உள்ளனவா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இல்லை' என்று கூறினார்கள். 'அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சையை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும் மனிதனுடைய கை வசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக்(ரலி) நூல்: அபூதாவூத் 2881
அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்படும் தர்ஹா, கோவில், தேவாலயம் போன்ற இடங்களில் 'அல்லாஹ்வுக்காகக் கூட அறுக்க அனுமதியில்லை' என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது. 'அல்லாஹ்வுக்காக மட்டுமே பலிப்பிராணிகளை அறுக்கச் சொன்ன மார்க்கம் அல்லாஹ் அல்லாதவர்களுக்காகப் பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் வந்தாலே அறுக்க வேண்டாம்' எனக் கூறுகின்றது. இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும் அவற்றை கொஞ்சம் கூட கவனத்திற் கொள்ளாமல் 'அல்லாஹ் அல்லாதவர்களுக்காக' என தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் குர்ஆனில் யூத, கிறிஸ்தவர்களின் பண்பைப் பற்றிக் கூறும் போது 'அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல் உண்மையான மார்க்கத்தைக் கடைபிடிக்காமல் இருப்போர்' எனக் கூறுகின்றான். (09:29) அல்லாஹ் விலக்கியதை விலக்கிக் கொள்வதே உண்மை முஸ்லிம்களின் பண்பாக இருக்க வேண்டும். இலவசமாக சோறு கொடுக்கின்றார்கள் என்பதற்காக விலைமதிப்பற்ற சுவனத்தை நாம் இழந்து விடக் கூடாது. அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டு மகான்களின் பெயரால் நேர்ச்சை செய்யப்பட்ட கந்தூரிச் சாப்பாட்டை உட்கொள்வது ஹராமாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்வோமாக!
 நன்றி ..http://ntjweb.com