3/03/2013

மக்கத்துக் காபிர்களின் கொள்கை கப்ரு வணங்கிகளின் கொள்கையை விட மேலானது

(இன்னொரு கோணத்தில் பார்த்தால்),
மக்கத்துக் காபிர்களின் கொள்கை இன்றைய கப்ரு வணங்கிகளின் கொள்கையை விட , ஒரு படி மேலானது
என்று கூற முடியும்.
இது சொந்த அபிப்பிராயம் அல்ல. அல்லாஹ்வின் திருவசனத்திலிருந்தும், இன்றைய நடைமுறையிலிருந்தும் விளங்க முடிகின்றது.
முதலில் வசனங்களைப் பார்ப்போம்.

“அவர்கள் கப்பலில் ஏறி ஆபத்தில் சிக்கிக் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனத்துடன் அவனை அழைக்கின்றனர். அவன் அவர்களைக் கரையில் (இறக்கி!) இரட்சித்துக் கொண்ட பின்னர், (அவனுக்கே) அவர்கள் இணை வைக்கின்றனர். (அல்குர்ஆன் 29 : 65)
இந்தத் திருவசனம் மக்கத்துக் காபிர்கள் துன்ப நேரங்களில் தூய மனத்துடன் அல்லாஹ்வையே அழைப்பார்கள் என்பதை பறை சாற்றுகின்றது. இது எவரது சொந்த அபிப்பராயமும் அல்ல. இந்த ஆயத்து நேரடியாகவே சொல்கின்ற கருத்து தான்.
நம்மவர்களில் சிலரது நம்பிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதை விடவும் மோசமாகவே உள்ளதை நாம் காண்கிறோம். கஷ்ட காலங்களில் அல்லாஹ்வை அழைக்க வேண்டியவர்கள், ‘யாமுஹையத்தீன்’ என்று அழைக்கின்றனர்.
கப்பலில் செல்லும் அவர்களை (புயல் காற்றடித்து நாலா பக்கங்களிலிருந்தும்) அலைகள், மேல்முகடுகளைப் போல் சூழ்ந்து கொள்ளும் சமயத்தில், அல்லாஹ்வுக்கு வழிபட்டு கலப்பற்ற மனத்துடன் அவனை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர். அவன் அவர்களைக் கரையில் இறக்கி இரட்சித்துக் கொண்டாலோ அவர்களில் சிலர் நேர்மையாக நடந்து கொள்கின்றனர்.
(அல்குர்ஆன் 31 : 32)

இந்த வசனமும், மக்கத்துக் காபிர்கள் இக்கட்டான நிலையில் அல்லாஹ்வையே அழைத்து வந்தனர். நம்மவரோ இருட்டில் அமர்ந்து கொண்டு அல்லாஹ்வின் அடியார்களை அழைத்துக் கொண்டிருந்தனர். மக்கத்துக் காபிர்களின் இறை நம்பிக்கையை இன்னும் தெளிவாக்கும் மற்றொரு வசனம்:-

நீங்கள் தரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் சிக்கி (மிக்க கஷ்டத்துக்குள்ளாகி விட்ட சமயத்தில்) “எங்கள் இதிலிருந்து இரட்சித்துக் கொண்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோர்களாகி விடுவோம்” என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களை இரட்சிப்பவன் யார்? என்று (நபியே!) நீர் (அவர்களைக்_ கேட்டு , இதிலிருந்தும், மற்றெல்லாக் கஷ்டங்களிலிருந்தும் உங்களை இரட்சிப்பவன், அல்லாஹ் தான் (இவ்வாறெல்லாமிருந்தும்) நீங்கள் அவனுக்கு இணை வைக்கிறீர்களே! என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6 : 64)
இந்தத் திருவசனத்தில் , மக்கத்துக் காபிர்கள், துன்ப நேரங்களில் பணிவா கவும், மறைவாகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வந்துள்ளனர் என்பதை தெளிவு படுத்துகின்றது. ஆனால். நம்மவர்களில் சிலர் துன்ப நேரங்களில் அல்லாஹ்வை அழைக்கின்ற காட்சியைக் காணுகிறோம்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையே கப்ருகளின் பெயரால் தகர்க்கப்பட்டு கொண்டுள்ள மோசமான காலத்தில், கப்ரு வணக்கத்தில் ஆர்வமூட்டும்   கட்டுரைகளை எழுதவும், வெளியிடவும் சிலர் இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.
அனாச்சாரங்களுக்கு எதிராகப் போராடக் கூடியவர்கள் போராடாவிட்டாலும், அனாச்சாரங்களுக்கு துணை நிற்காமல் இருக்கலாம்!
என்று தான் திருந்துவார்களோ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்