10/27/2013

வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?


அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது.

பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும்.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் இதழ் சரியான சாட்டையடிகளையும் சம்மட்டி அடிகளையும் கொடுத்து வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக, இவ்விதழில் வஸீலாவைப் பற்றிப் பார்க்கவிருக்கிறோம்.

இறந்து போன நபிமார்கள், நல்லடியார்களை வைத்து அல்லாஹ்விடம் வஸீலா தேடலாம் என்பது பரேலவிகளின் நிலைப்பாடு.

முஹம்மது நபியின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை நிறைவேற்று, முஹ்யித்தீனின் பொருட்டால் எனக்கு இந்தக் காரியத்தை வழங்கு என்று ஆளை வைத்து வஸீலா தேடலாம் என்பது இவர்களது வாதம்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் வஸீலா என்பது ஆட்களை வைத்துத் தேடுவதல்ல. ஒருவர் செய்கின்ற அமல்களை வைத்துத் தான்.

இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 5:35

இவ்வசனத்தில் "இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது.
வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் "வஸீலாவாக' - சாதனமாக உள்ளது என்பர்.

"
வஸீலா என்பது இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்வது'' என்று மார்க்க அறிவு இல்லாத சிலர் கருதுகின்றனர்.

"
நாம் நல்வழியில் நடக்கத் தேவையில்லை; எந்த நல்லறமும் செய்யத் தேவையில்லை; எந்தத் தீமையிலிருந்தும் விலகத் தேவையில்லை; ஏதாவது ஒரு மகானைப் பிடித்துக் கொண்டால் போதும்; கடவுளை நெருங்கிடலாம்'' என்ற நம்பிக்கை உலகில் உள்ள பல மதங்களிலும் இருக்கிறது.

இஸ்லாம் இந்த நம்பிக்கையை நிராகரிக்கின்றது. இறைவனை நெருங்க நினைப்பவர்கள் நல்லறங்கள் எனும் "வஸீலாவை' சாதனத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகின்றது.
இறைவனை நெருங்க வேண்டுமானால் ஒவ்வொருவரும் நல்லறங்கள் செய்து அதன் மூலமே நெருங்க வேண்டும். அவ்வாறின்றி மகான்களை இடைத் தரகர்களாகப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாது என்பதே "வஸீலா தேடுங்கள்!' என்பதன் கருத்தாகும்.

இடைத் தரகர்களை அறவே ஒழித்துக் கட்டும் வகையில் அமைந்த இவ்வசனத்தை "இடைத்தரகர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்று நேர்மாறாக விளங்கிக் கொள்கிறார்கள்.

இவ்வசனத்தின் (5:35) துவக்கத்தில் "நம்பிக்கையாளர்களே' என்று அழைக்கப்படுகிறது. இந்த அழைப்பில் மகான்கள் என்று கருதப்படுவோரும் அடங்குவார்கள். "மகான்களும் வஸீலா தேட வேண்டும்'' என்பது தான் இவ்வசனத்தின் பொருள்.

நம்பிக்கையாளர்களே என்ற அழைப்பில் முதலில் அடங்கக் கூடியவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம். அவர்களுக்கும் வஸீலா தேடும் கட்டளை உள்ளது. அவர்கள் எந்த மகானைப் பிடிப்பார்கள்? என்று சிந்தித்தால் இப்படி விளங்க மாட்டார்கள்.

இவ்வசனத்தில் மூன்று கட்டளைகள் உள்ளன. மற்ற இரண்டு கட்டளைகள் எவ்வாறு மகான்கள் உள்ளிட்ட அனைவரையும் கட்டுப்படுத்துமோ, அது போல் தான் வஸீலா தேடும் கட்டளையும் அனைவரையும் கட்டுப்படுத்தும்.

மகான்கள் கூட வஸீலா தேடுகிறார்கள் என்று மற்றொரு வசனம் தெளிவாகவே கூறுகிறது.
இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.
அல்குர்ஆன்
17:57வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?  இதன் அடுத்த பகுதியை காண இங்கே கிளிக் செய்யவும்


Article Copied From: www.onlinepj.com ,