"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

2/26/2015

வலிமார்கள் இறந்த பின்னும் கராமத் நிகழ்த்த முடியுமா?

 பதில் : முடியாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

நின்று நிலைத்திருக்கும் வகையில் செய்த தான தர்மங்கள், (பிறருக்குக் கற்றுத்தந்த) பயனுள்ள கல்வி, நல்லொழுக்கமுள்ள மக்கள் ஆகிய இம்மூன்றைத் தவிர மற்ற காரியங்கள் மனிதன் இறந்துவிடும்போது முடிவு பெற்று விடுகின்றன. (நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா)

இந்த நபிமொழியிலிருந்து, மரணித்துவிட்டால் உலகில் மனிதன் செய்கின்ற எல்லாக் காரியங்களும் முடிவுக்கு வருவதை உணரலாம். மரணத்திற்குப் பின் எவரும் கராமத் செய்ய இயலாது. மேலும் மரணம் என்பதே இந்த உலகில் மனிதனின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதுதானே!

தர்ஹாக்களில் சில அதிசயங்கள் நடக்கின்றனவே என்றால் தர்காவில் மட்டுமல்ல, கோவில்கள், சர்ச்சுகளிலும் தான் நடக்கின்றன. ஓரிறை வணக்கத்திலிருந்து மக்களைத் திசை திருப்பி வழி கெடுப்பதற்காக, ஷைத்தான் செய்யும் திருவிளையாடல்தான். உண்மையான ஈமான் உள்ளவர்கள் இதுபோன்ற சித்து விளையாட்டுக்களில் தங்கள் ஈமானை இழந்துவிட மாட்டார்கள்.

  அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?

இந்தப் பிரச்சனையில் சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பின்னும் உயிருடன் இருக்கின்றனர் என்றும் வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர். இதில் எது சரியானது என்பதைத் தெளிவாக ஆராய்ந்தாலே இதன் உண்மையை விளங்க முடியும்.

முதலில் (மரணித்த பின்னும்) “உயிருடன் இருக்கிறார்கள்” என்ற கருத்துக் கொண்டோரின் வாதங்களைப் பாாப்போம்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ண வேண்டாம், அவாகள் உயிருடன் உள்ளனர். இறைவனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த பேருபகாரங்களை எண்ணி மகிழ்ச்சியல் திளைத்தவர்களாக உள்ளனர்” (அல்குர்ஆன் 169, 170)

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென கூறாதீாகள்! அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் அதனை நீங்கள் உணர இயலாது” (அல்குர்ஆன் 2 -154)

மேற்கூறிய இரண்டு ஆயத்துகளும் (திருக்குர் ஆன் வாக்கியங்களும்) அவர்கள் உயிருடன் உள்ளனர், என்ற கருத்தை மிகத் தெளிவாக பறை சாற்றுகின்றன. திருக்குர்-ஆனே இவ்வளவு தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி மறுக்க இயலும்? என்பது முதல் சாராரின் வாதம். மேலும் கப்ருகளை (மரித்தவர்களின் அடக்க ஸ்தலங்களை) நாம் காணும்போது, “அஸ்ஸாலாமு அலைக்கும்” என்று கூற வேண்டும், என்று ஹதீஸீல் வருகின்றது. “ஸலாம்” உயிருள்ளவர்களுக்குத்தானே சொல்ல முடியும்! அதனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது என்று கூறுகின்றனர்.

‘இந்த ஆதாரங்கள் சரியானது தானா?’ என்பதை நாம் ஆராய்வோம். மேற்கூறிய ஆயத்துகள் எப்பொழுது, எதற்காக இறங்கியது என்பதைக் கவனித்தால் தான் அதன் முழுப் பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பத்ருப் போர்க்களத்தில் சில சஹாபாக்கள் (நாயகத்தோழர்கள்) ஷஹீதாக்கப்பட்ட (வீர மரணம் அடைந்த) நேரத்தில் காபிர்கள் “இந்த முகம்மது அப்பாவி மக்களை தேவை இல்லாமல் பலி கொடுக்கிறாரே, எந்தவித பயனுமில்லாமல் அவர்களின் வாழ்வு வீணடிக்கப்படுகின்றதே” என்று குறை கூறியபோது அவர்களுக்கு பதில் தரும் விதத்தில் இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான். “நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. உங்களால் உணரமுடியாத வேறொரு விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள்” என்ற பொருள்பட கூறுகிறான். இரண்டாம் ஆயத்தில் “அஹ்யாவுன் இன்தரப்பிஹிம்” என்ற சொல்லை இணைத்திருக்கிறாாகள். அதாவது இறைவனின் கண்ணோட்டத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர் (உங்கள் கண்ணோட்டத்தில் அல்ல என்ற பொருள்பட)

“காபிர்களே! நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. மாறாக! அவர்களுக்கு வேறுவிதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த மகிழ்க்சியில் அவர்கள் திளைத்துள்ளனர் என்ற பொருள்பட அல்லாஹ் அவர்களுக்கு பதில் கூறுகிறான். (திருக்குர்ஆனுக்குப் பொருள் கொள்ளும் போது எதற்காக எப்போது அந்த வசனம் இறங்கியது என்பதையும் கருத்தில் கொண்டு தான் விளக்கம் தர வேண்டும் தஃப்ஸீரின் வீதி)

எனவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நம்மில் சிலர் நினைப்பது போல் “நாம் பேசுவதை கேட்பார்கள், நமக்கு பதில் தருவார்கள், நாம் அங்கே செல்வதை உணர்ந்து கொள்வார்கள்” என்பதும் அதன் பொருள் அல்ல.

அந்த காஃபிர்கள் நினைத்தது போல் “மறுஉலக வாழ்க்கை கிடையாது, அவர்கள் மரணித்தவுடன் எல்லாமே முடிந்துவிட்டது

மறு உலக சுகங்கள் கிடையாது” என்பதுவும் அதன் பொருள் அன்று.

மாறாக, மனிதர்கள் கண்ணோட்டத்தில் ‘உலகத்துடன் உள்ள தொடர்பைப் பொறுத்தவரையில் அவர்கள் மரணித்துவிட்டால் அல்லாஹ்விடம் வேறொரு விதமான வாழ்க்கை அவர்களுக்கு உண்டு என்பது தான் இந்த ஆயத்துகளின் உண்மைப் பொருள்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த நல்லவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவை ரூபத்தில் சுவர்க்கத்தில் திரிகின்றன”. (முஸ்லிம்) என்று விளக்கம் தந்தனர். நம்மில் பல எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளில் அல்ல என்பதை இந்த ஹதீது மூலம் தெரியலாம்.

கப்ருகளைக் காணும்போது சலாம் சொல்லுவது அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற பொருளில் அல்ல, ஏனென்றால் இந்த சலாம் அவ்லியாக்களுக்கு மட்டும் உரியது அல்ல. எந்த முஸ்லிமின் கப்ரைக் காணும்போதும், இப்படிச் சொல்ல வேண்டும் என்பது தான் ஹதீஸின் கருத்து. அதுவும் “கப்ருவாசிகளே! உங்கள் மீது சலாம் உண்டாகட்டும்! நீங்கள் முந்தி விட்டீர்கள். நாங்களும் உங்களுடன் வந்து சேரக் கூடியவர்கள் தான்” என்று இந்த வசனத்தையும் சேர்த்து சொல்ல வேண்டும். நாம் நம் மரணத்தை நினைவுப்படுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்ல வேண்டும். நம்முடைய ஸலாம் அவர்கள் செவியில் கேட்கும் என்பது அதன் பொருள் அல்ல. “தென்றல் காற்றே! கொஞசம் நில்லு!” என்று இலக்கியமாக நாம் அழைக்கிறோம் என்றால் தென்றல் காற்றுக்கு இந்த அழைப்பு புரியும் என்பது அதன் பொருள் அல்ல. தென்றல் காற்றை அழைப்பது போல் பாவனை செய்கிறோம், அது போன்ற இலக்கியம்தான் இதுவும்.

அதனால் முதல் கூட்டத்தினரின் வாதம் மிகவும் பலவீனமானது என்பது நமக்கு நன்கு புலனாகிறது. இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் முற்றிலும் அந்த வாதத்தை முறியடித்து விடுகின்றது. அவர்களின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைக் கட்டாயம் சுவைத்தே கீர வேண்டும்”. (அல்குர்ஆன் 3-185, 21-35, 29-57)

“ஒவ்வொரு” என்ற பதம் எந்த மனிதரையும் இந்த முடிவிலிருந்து நீக்க முடியாத, விதிவிலக்குப் பெற முடியாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, எனவே எல்லோரும் இறந்து விட்டவர்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு வாதத்திற்காக, சிலரை இந்த விதியிலிருந்து நீக்கலாம் என்றால் அந்தஸ்தில், வலிமார்கள் எட்ட முடியாத உன்னதமான உயர்வு பெற்ற நபிமார்களுக்கு அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனே மிகத் தெளிவாக நபிமார்களும் மரணித்தவர்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றது. அந்த வசனங்களை நாம் பார்ப்போம். நபி சுலைமான் (அலை) அவர்கள் ‘பைத்துல் முகத்தஸ்’ கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும்போது மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்தது தெரியாமல் ஜின்கள் அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பல நாட்கள் கைத்தடியை ஊன்றியவராக அவர்கள் மரணித்த நிலையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கைத்தடியை கரையான்கள் அரித்துக்கொண்டு வந்தபோது, தீடிரென அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்து விழுகிறார்கள். அப்போதுதான் ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார்கள் என்ற உண்மை தெரிகிறது. இதனை குர்ஆன் சுலைமான் மீது நாம் மவ்த்தை விதித்தபோது, அவர் இறந்துவிட்டார் என்பதை கரையான்களத் தவிர வேறெவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை.” (அல்குர்ஆன் 34 -14)

இந்த வசனம் சுலைமான் நபிக்கு மரணம் சம்பவித்தது என்பதை “மவ்த்து” என்ற வார்த்தையின் மூலம் தெளிவாக்குகின்றது.

“யஃகூபிற்கு மரணம் வந்தபோது” (அல்குர்ஆன் 2 – 133) என்ற வசனத்திலும் “மவ்த்து” என்ற பதத்தை அல்லாஹ் பிரயோகம் செய்திருக்கிறான். மிகப் பெரும் இரண்டு நபிமார்களும் இறந்து விட்டனர் மவ்தாகி விட்டனர் என்றால், வலிமார்கள் எம்மாத்திரம்?

மேலும் நபிமார்களின் தலைவராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி “நபியே நீயும் மரணிக்கக்கூடியவர். உமக்கு முன் வந்த நபிமார்களும் மரணித்து விட்டார்கள்,” (அல்குர்ஆன்29 -30)

ஹழரத் ரசூல் (ஸல்) அவர்களே மரணித்து விட்டவர்கள் என்றால் வேறு யார்தான் (நம்மவர்களில் சிலர் நினைக்கின்ற பொருளில் உயிருடன் இருக்க முடியும்?)

நபிகள் நாயகம் இறந்துவிட்டபோது, பலரும் “அவர்கள் இறக்கவில்லை” என்று எண்ணியபோது அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் “முஹம்மதை வணங்குபவர்கள் யாரேனுமிருந்தால் (அவர்கள் புரிந்து கொள்ளட்டும்!) முஹம்மது நிச்சயம் இறந்து விட்டார்கள்.” என்று சொன்னதும் இங்கே நினைவு கூரத்தக்கது.

அந்நஜாத்: ஜுலை,1986
--------------------------------------------------------------------------------------------------------------------------

2/25/2015

கூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா?

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

சகோதர, சகோதரிகளே! இன்றைய காலகட்டத்திலும் சரி இதற்கு முந்தைய காலக் கட்டங்களிலும் சரி உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக இருப்பது இஸ்லாம் மட்டுமே! இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களில் அல்-குர்ஆனின் வசனங்களால் கவரப்பட்டும் அதை அடிபிறழாது பின்பற்றியொழுகிய சத்திய சீலர்களின் நற்பண்புகளைக் கண்டும் எண்ணற்றோர் இஸ்லாத்தைத் தழுவினார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்களின் வாழ்க்கை முறையோ குர்ஆனிலிருந்து வெகு தூரமாகவே இருக்கிறது. ஆயினும் மேலை நாடுகளிலும் தூர கிழக்கு நாடுகளிலும் இஸ்லாமே வேகமாக வளரும் மார்க்கமாக இருக்கிறது. இதற்கு காரணம் தற்போதுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை முறையைப் பார்த்தா என்றால் நிச்சயமாக இல்லை!

அருள்மறையாம் அல்-குர்ஆனின் அற்புத வசனங்களைக் கண்டு அதில் ஈர்க்கப்பட்டே ஏராளமானவர்கள் இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். இதை அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு, தாம் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணமாக அவர்கள் குறிப்பிடும் காரணங்களில் தலையானதும் முக்கியமானதுமாக திருக் குர்ஆன் விளங்குகிறது. நாம் பேட்டி கண்ட பலரும் அல்-குர்ஆனே தாம் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது என்று கூறுகின்றனர். ஆனால் இஸ்லாமிய பெற்றோர்களுக்கு பிறந்த நம்முடைய சகோதர, சகோதரிகளின் நிலையோ குர்ஆனைக் கூட ஓதத் தெரியாமல் கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதவேண்டிய மிக பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

குர்ஆன் என்பது பட்டுத் துணியில் சுற்றி பரணியில் பத்திரமாக வைப்பதற்கோ அல்லது வீட்டில் இழவு (மரணம்) விழுந்தால் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து ஓதுவதற்காகவோ அருளப்பட்டதன்று!

அல்குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கத்தை அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 16 வசனம் 89 ல் கூறுகிறான்: –

“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.”

அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் அவனுடைய படைப்பினமான மனித குலம் முழுமைக்கும் நேர்வழி காட்டுவதற்காக அருளிய சத்திய திருமறையில், அனைத்து மனிதர்களையும் நோக்கி இந்தக் குர்ஆனைக் குறித்து சிந்தனை செய்து ஆராய்சி செய்யுமாறு பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

இறைவன் கூறுகிறான்: – “அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா?” (4:82)

“(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்” (38:29)

சாதாரண பாமர மக்களால் கூட புரிந்துக்கொள்ளும் எளிமையான முறையில் அல்-குர்ஆனை அருளியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

இஸ்லாமிய பெயர் தாங்கிய மத புரோகிதர்களை கூலிக்கு அமர்த்தி அல்-குர்ஆனை ஓதுவதால் இறந்தவருக்கோ அல்லது அவ்வாறு கூலி கொடுத்து ஓத வைப்பவருக்கோ இறைவன் மேற்கண்ட வசனங்களில் கூறிய நல்லுணர்வும் அல்-குர்ஆனைப் புரிந்துக் கொள்ளும் பாக்கியமும் எவ்வாறு கிடைக்கும்? கூலிக்கு ஆட்கள் வந்து ஓதி விட்டுப் போனால் நாம் எவ்வாறு அல்குர்ஆனின் வசனங்களை கவனித்து சிந்தித்து ஆராய முடியும்? மேலும் கூலிக்காக வந்து ஓதுபவர்களிடம் இன்று இந்த வீட்டில் என்ன சாப்பாடு கிடைக்கும்? எவ்வளவு பணம் தருவார்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் என்பதல்லாது அந்தப் புரோகிதர்கள் உண்மையில் இவ்வாறு ஓத செய்பவர்களின் இறந்த உறவினர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றா நினைப்பார்?

அப்படியே அவர்கள் நன்மையையே நினைத்தாலும் கூட அது இஸ்லாம் காட்டித்தரும் வழிமுறையில்லையே! மாறாக இஸ்லாத்தில் இல்லாத புதுமையான செயல்களைச் செய்த பாவம் அல்லவா கிடைக்கும்? ஏனென்றால் கூலிக்கு ஆள் அமர்த்தி குர்ஆன் ஓதும் பழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்திலோ அல்லது அவர்களை அப்படியே பின்பற்றி வாழ்ந்த சகாபாக்கள் காலத்திலோ இல்லாத, ஒரு பிற்காலத்தில் வந்தவர்களால் மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட ஒரு நூதன செயலாகும்.

மார்க்கத்தில் நுழைக்கப்பட்ட செயல்கள் அனைத்தும் பித்அத்துக்கள். பித்அத்துக்கள் அனைத்தும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குர்ஆனை ஓதி அதன் நன்மைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும் என்றும் அதற்கான கூலியை பிறரிடம் எதிர்பார்க்க கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் தங்களின் சுனனில் அறிவிக்கிறார்கள் : (இம்ரான் இப்னு ஹூஸைன் (ரலி)) அவர்கள் குர்ஆன் ஓதும் ஒருவரை கடந்து சென்றார்கள். அப்போது அவர் அவர்களிடம் (ஏதோ சிலதை தருமாறு) கேட்டார். அதற்கு அவர் ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’. நான் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்:

“யாராவது குர்ஆன் ஓதினால் அதனைக் கொண்டு அல்லாஹ்விடமே கேட்கட்டும். பிற்காலத்தில் ஒரு சமூகத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதிவிட்டு அதன் மூலம் மக்களிடம் (பலனை) எதிர்பார்ப்பார்கள்” ஆதாரம் : திர்மிதி.

மேற்கண்ட ஹதீஸின் படியும், கூலிக்கு ஓதுவது கூடாது என்பதும் அறியமுடிகிறது.

எனதருமை சகோதர, சகோதரிகளே! அல்-குர்ஆன் அருளப்பெற்றதன் காரணம் அறிந்து அதை பொருளுடன் படித்து வருவோமேயானால் அது கூறும் நற்பலன்களை இன்ஷா அல்லாஹ் நாம் பெற முடியும். திருமறையை நாம் பொருளுடன் ஓதி வருவதால் ஏற்படும் நன்மைகளை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்: –

    – குர்ஆன் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான் – (42:52)
    - குர்ஆன் மனிதர்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கொண்டதாகவுள்ளது – (45:20)
    - குர்ஆன் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழிவழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது - (45:20 , 27:77)
    - குர்ஆன் நேர்வழி காட்டுகிறது – (17:9 , 46:30 , 45:11)
    - குர்ஆன் முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது - (27:2)
    - குர்ஆன் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது - (41:4 , 44:3)
    - குர்ஆன் அகப்பார்வை அளிக்கிறது – (50:8)
    - குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசம் செய்கிறது - (50:8 , 81:27-28)
    – குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்பவருக்கு படிப்பினை இருக்கிறது – (50:37)
    - குர்ஆன் அறிந்துணரும் மக்களுக்கு தெளிவாக்கப்பட்டுள்ளது - (41:3)
    - குர்ஆன் அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமாகும் – (68:52, 69:48, 73:19, 76:29-30, 80:11-12)
    - குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது - (86:13-14)
    - குர்ஆன் ஈமான் கொண்டவர்களுக்கு வழிகாட்டியும், மருந்துமாகும் – (41:44)
    - குர்ஆன் பிரித்து அறிவிக்கக் கூடியது: வீணான வார்த்தைகளைக் கொண்டது இல்லை - (86:13-14)
    - குர்ஆனில் எத்தகைய சந்தேகமும் இல்லை – (2:2)
    - பயபக்தியுடையோருக்கு குர்ஆன் நேர்வழிகாட்டியாகும் - (2:2)

எனவே திருமறை கூறும் மேற்கூறிய நற்பலன்களை நாம் பெற வேண்டுமெனில் அதை பொருளுணர்ந்து நாம் படித்தால் தான் முடியுமே தவிர கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஓதுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.

இறந்தவர்களுக்கு அவர்களுடைய வாரிசுகளாகிய நாம் நன்மைகள் செய்து அவர்களுக்கு சேர்த்திட விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைகள் ஏராளம் உள்ளன. அவற்றையறிந்து அதன்படி நடந்தால் நமக்கும் நபிவழியைப் பின்பற்றிய நன்மைகள் கிடைப்பதோடு அல்லாஹ்விடம் சேர்ந்து விட்ட நமது உறவினர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் நன்மைகள் கிடைக்கும்.

அதற்கு மாறாக மாற்று மதத்தவர்கள் தங்களின் இறந்தவர்களுக்காக செய்கின்ற சடங்குகளைப் போல் கூலிக்கு மத புரோகிதர்களை வரவழைத்து குர்ஆன் ஓத வைத்தால் நாம் மேலே கூறப்பட்டுள்ள நற்பலன்களை இழந்து விடுவதோடு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி ஒழுகிய சஹாபாப் பெருமக்களின் வழிமுறைகளில்லாத பித்அத்துகளைச் செய்த பாவம் நமக்கு வந்து சேரும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாகவும்.

அல்லாஹ் கூறுகிறான். – குர்ஆனை பின்பற்றாதவனுக்கு ஷைத்தான் நண்பனாக்கப்படுவான் – (43:36-39)
    - அறிவுடையோர் தாம் குர்ஆனைப் பின்பற்றுகின்றனர் – (39:9)
    - கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்கள் குர்ஆன் நேர்வழிவழியில் சேர்க்கிறது என்று காண்கிறார்கள் – (34:6)


எனவே சகோதர, சகோதரிகளே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகள் வலியுறுத்துவது போல நம் வாழ்க்கை நெறிமுறைகளை குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளுக்கேற்ப அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும். ஆமீன்.


2/16/2015

ஆதம்(அலை) தவறு செய்தபோது?

முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் தவறு செய்தபின்னர்,
என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு! என்று பிரார்த்தனைன செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ் “ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் “என்னை நீ படைத்த உடனே, என் தலையை உயாத்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின் பெயரையும் நீ எழுதியுள்ளதால், அவர் உனக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று நான முடிவு செய்து கொண்டேன்” என்று பதில் கூறினார்கள். உடனே அல்லாஹ் “முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னைநான் மன்னிக்கிறேன்” என்று கூறினான்.
அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற, மார்க்க அறிஞர்களால், அடிக்கடி கூறப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியைத்தான் நாம் மேலே எழுதி இருக்கிறோம். கடந்த காலத்திலேயே இதை சில அறிஞர்கள் எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இமாம் ஹாகீம், இமாம் பைகஹீ, இமாம் துப்ரானி ஆகியோர் இதனை தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.
இது சரிதானா? என்ற ஆராய்ச்சி கடந்த காலங்களிலேயே முற்கொள்ளப்பட்டு, “அது திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி” என்று கடந்த காலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்கள் முடிவு செய்திருக்கின்றனர். அதனை நாம் விரிவாகப் பார்ப்போம்.
அறிவிப்பாளர்களின் தகுதி
ஹதீஸ் என்ற பெயரில் ஒன்றைச் சொல்லப்படுமானால், அதனை அறிவிக்க கூடியவரின் தகுதியை அடிப்படையாக வைத்தே, அதனை ஏற்பதா? ஏற்கக் கூடாதா? என்ற முடிவை ஹதீஸ் கலை வல்லுனர்கள் எடுக்கின்றனர்.
ஒரு ஹதீஸை அறிவிக்கக் கூடியவர், பொய் சொல்பவராகவோ, தீய செயல்கள் புரிபவராகவோ, அல்லது நினைவாற்றல் குறைந்தவராகவோ இருந்தால், அதனை ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஏற்பதில்லை. ஹதீஸ் கலையின் மாமேதைகளாம் இமாம் புகாரி, முஸ்லிம் ஆகியோரும், இமாம் மாலிக், இமாம் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா போன்றோரும், ஏனைய ஹதீஸ் கலை வல்லுனர்களும், அறிவிப்பாளரின் தகுதியை வைத்தே ஒரு ஹதீஸை ஏற்கத் தக்கது என்றோ, ஏற்கத் தகாதவை என்றோ முடிவுக்கு வருகின்றனர். இது நபிமொழி ஆய்வாளர்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட ஒரு அளவுகோலாகும்.
இந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தகுதி எத்தகையது என்பதை நாம் பாாப்போம்.
அப்துர் ரஹ்மான் இப்னுஜைது இப்னு அஸ்லம்
“முஸ்தக்ரக்” என்ற நூலில் இமாம் ஹாகிம் அவர்களும், “தலாயிலுன்னுபுவ்வத்” என்ற நூலில் இமாம் ைபஹகீ அவர்களும், “முக்ஸமுஸ்ஸகீர்” என்ற நூலில் இமாம் தப்ரானி அவர்களும் இதனை பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய மூவருமே, அப்துர் ரஹ்மான் இப்னு ஜைது இப்னு அஸ்லம்” என்பவர் மூலமாகவே அதனை அறிவிக்கின்றனர்.
இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் பைகஹீ அவர்கள் ” இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது அவர் பலவீனமானவர், ஏற்கத்தக்கவர் அல்ல.” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஹதீஸை தனது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள் .
இந்த சம்பவத்தைப் பரிசீலனை செய்ய வந்த ஹதிஸ் கலையின் மாமேதைகள், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பேரறிஞர்கள், இமாம் அல்லமமா அல்ஹாபிழ் தஹபீ அவர்களும் அல்லாமா அல்ஹாபிழ் இப்னு ஹஜகுல் அஸ்கலானி அவர்களும், முறையே தங்களின் “மீஸானுல் இஃதால்” “அல்லிஸான்” என்ற நூல்களில் ” இந்த அப்துர்ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்ல. இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்கள். அறிஞர் இப்னு கஸீர் அவர்கள் தனது சரித்திர நூலில் அப்துர் ரஹ்மானைப் பற்றி, இப்படியே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அறிஞர் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அப்துர் ரஹ்மானை ஹதீஸ்கலை வல்லுநர்கள் அனைவருமே ஏகோபித்து பலவீனமானவர்” என்று கூறியதாக குறிப்பிடுகின்றார்கள். அலி இப்னுல் மதீனீ இப்னா இஃது தஹாபீ போன்ற அறிஞர்கள் இந்த அப்துர் ரஹ்மான் மிக, மிக பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள்.
“இவர் செய்திகளைத் தலைகீழாக மாற்றக்கூடியவர்” என்று இமாம் இப்னு ஹப்பான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம், ஷைகுல் இஸ்லாம் அறிஞர் இப்னு தைமிய்யா அவர்களும் அப்துல் ரஹ்மானைப்பற்றி இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.
நாம் நமது முறை வாழ்க்கையில், ஒரு மனிதன் சொல்வதை ஏற்பதென்றால், அந்த மனிதனை அவனது தகுதிகளை எடைபோட்டுப் பார்த்தே ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக ஒன்றை அறிவிப்பவரின் தகுதி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.
எவன் நான் சொல்லாததை நான் சொன்னதாகக் கூறுகின்றானே அவன் தனது தங்குமிடமாக நரகத்தைப் பெறுவான்” என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்குப்பின் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரிகின்றது.
கேட்டதை எல்லாம் (ஆராயாமல் அப்படியே) அறிவிப்பது, ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கும் போதிய சான்றாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்
என்ற நபி மொழியும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இதற்கு விளக்கமாக பின்வரும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
அபூமூஸா(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களின் அழைப்பை ஏற்று உமர்(ரழி) வீட்டிற்கு வந்து மூன்றுமுறை ஸலாம் கூறியும் பதில் வராததால், திரும்பிச் செல்ல எத்தணிக்கிறார்கள். பின்னர் உமர்(ரழி) அவர்கள் “ஏன் நீர் வரவில்லை?” என்று அபூமூஸா(ரழி) அவர்களிடம் கேட்க, அதற்கு அபுமூஸா(ரழி) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்றுமுறை அனுமதிகேட்டும் பதில் வராவிட்டால் அவர் திரும்பி விடட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அதனால்தான் திரும்பி விட்டேன் என்று பதில் கூறினார்கள். அதனைக் கேட்ட உமர்(ரழி) அவர்கள் (நான் நம்ப முடியாது) “இதற்காக ஆதாரத்தோடு நிரூபித்துக் கூறு” என்று கேட்கிறார்கள். “உடனே நான் அபூமூஸாவுக்கு சார்பாக அதனை உண்மைப்படுத்தினேன்” என்ற அபூசயீதுல் குத்ரி(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த நிகழ்ச்சியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் பெயரால் ஒன்று கூறப்படும் போது, அவர்கள் அப்படிக் கூறினார்களா இல்லையா? என்று பரிசீலனை செய்வது அவசியம் என்பதை தெரியலாம்.
இந்த செய்தியை அறிவிப்பவராகிய அப்துர் ரஹ்மானைப் பற்றி எல்லா அறிஞர்களும் ஒருமித்து பொய்யரென்றும். இட்டுக்கட்டக் கூடியவர் என்றும், பலவீனமானவர் என்றும் கருத்துக் கூறி இருக்கும் போது அவர் வழியாக அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்? அதிலும் குறிப்பாக மாமேதைகள் தஹபீ, இப்னுஹஜர் ஆகிய இருவரும் இவரைப்பற்றி கூறி இருக்கும்போது, ஹதீஸ் கலையில் ஞானமுள்ள எவர்தான் இதனை ஏற்றுக் கொள்ள முடியும்?
பூமியில் இறங்கியய பின் :
ஆதம்(அலை) அவர்கள் பூமியில் இறங்கிய பின், ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து பாங்கு சொல்கின்றனர். அதில் “அஷ்ஹது அன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்” என்று கூறியபோது, “ஜிப்ரிலே! நீங்கள் முஹம்மத் என்று குறிப்பிட்டீர்களே, அவர் யார்? என்று கேட்டனர்” என்ற ஒரு ஹதீஸை, இப்னு அஸாகிர் அவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த ஹதீஸும் பலவீனமானதுதான், எனினும் மேற்கூறிய அந்த ஹதீஸை எல்லா அறிஞர்களும் பலவீனமானது என்று கூறியது போல், இந்த ஹதீஸை எல்லோரும் ஒட்டு மொத்தமாக பலவீனமானது என்று குறிப்பிடவில்லை, ஆகவே, இந்த ஹதீஸ் அந்த ஹதீஸை விட ஓரளவு தரமானது என்று கொள்ளலாம்.
இந்த ஹதீஸின் படி “பூமியில் ஆதம்(அலை) இறங்கியபின்பும், முஹம்மது(ஸல்) அவர்களை அறிந்திருக்கவில்லை. பாங்கோசை கேட்ட பின்பே ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள் என்பது தெரிய வருகின்றது. அந்த ஹதீஸின்படி படைக்கப்பட்ட உடனேயே, சுவர்க்கத்தில் வைத்தே ஆதம்(அலை) அவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களைப்பற்றி அறிந்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது. இங்கே இரண்டு கருத்துக்களும், ஒன்றோடொன்று நேரடியாகவே மோதிக் கொள்கின்றன.
இந்த இரண்டில் ஓரளவு சுமாராக உள்ள ஹதீஸின் கருத்துக்கேற்ப, ஏற்கத்தகாதவை என்று எல்லோரும் தள்ளிவிட்ட ஹதீஸின் கருத்து சரியானது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரலாம். அறிவுடையோர் இப்படித்தான் முடிவு எடுக்க இயலும்.
திருக்குர்ஆனின் தீர்ப்பு
அப்போது ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்றுக்(அறிந்துக்) கொண்டார். (அந்த சொற்கள் மூலம், மன்னிப்புக்கேட்டார்) அவரை அவன் மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)

இந்தத் திருக்குர்ஆன் வசனத்தில் இறைவனிடமிருந்து ஆதம்(அலை) அவர்கள், சில சொற்களைக் கற்றுக் கொண்டதாக இறைவன் குறிப்பிடுகின்றான். ஆதம்(அலை) அவர்கள் இறைவனிடமிருந்து கற்றுக்கொண்ட அந்த சொற்கள் எவை என்பதை நாம் ஆராய வேண்டும். திருக்குர்ஆனில் ஒரு இடத்தில் கூறப்பட்ட வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் “திருக்குர்ஆனை, நாம் புரட்டிக் கொண்டே வரும்போது, ஒரு இடத்தில் “அவ்விருவரும் (ஆதம் & ஹவ்வா) “எங்கள் இறைவா! நாங்கள் எங்களுக்கே தீங்கிழைத்துக் கொண்டோம், நீ எங்களை மன்னித்து அருளவில்லையாயின் நிச்சயமாக நாங்கள் நஷ்மடைந்தவர்களாவோம்” என்று கூறினார்கள் (அல்குர்ஆன் 7 : 23) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அதாவது இறைவனிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட சொற்கள், இதுதூன், இதைத்தான் அவர்கள் கூறி மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்று நாம் தெரிய முடிகின்றது. பெரும்பான்மையான திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் இதனையே சொல்கின்றனர்.
அல்குர்ஆன் 7:23ல் அல்லாஹ் குறிப்பிடும் சொற்களில் முஹம்மதின் பொருட்டால் என்று ஆதம்(அலை) கூறியதாக குறிப்பிடவில்லை. மாறாக தங்களின் தவறை உணர்ந்து, தங்களின் இயலாமையை எடுத்துக்காட்டி இறைவனின் வல்லமையை மறைசாற்றி அவனிடம் மன்னிப்புக் கேட்டதாகத்தான் அந்த வசனத்திலிருந்து விளங்க முடிகின்றது. இந்த அடிப்படையிலும் அந்த நிகழ்ச்சி சரியானதல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.
மேலும் அதே 2: 37 வசனத்தில் இறைவனிடமிருந்து சில சொற்களைக் கற்றுக் கொண்டு, அதனடிப்படையில் மன்னிப்புக் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஆதாரமற்ற ஹதீஸில் ஆதம்(அலை) அவர்கள் தானாகவே அர்ஷை பார்த்து தானாகவே மன்னிப்புக் கேட்கும் முறையை அறிந்து கொண்டார்கள், என்றும் அதனால்தான் அல்லாஹ் மன்னித்தான் என்றும் கூறப்படுகிறது. திருக்குர்ஆனுடன் நேரடியாகவே மோதுகின்றது அல்லவா?

எனவே இந்த அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஆதம்(அலை) அவர்கள் தமது மன்னிப்புக்காக (7:23) வனத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள் என்றும், இந்த கற்பனை நிகழ்ச்சியில் கூறப்பட்டது போல் அல்ல என்றும் தெரிந்து கொள்கிறோம்.
மேலும் சமுதாயத்தில் மக்கள் “நல்ல அமல்கள் செய்ய வேண்டும்” என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு எந்தப் பெரியோரையாவது பிடித்துக் கொண்டால் போதுமானது என்ற தவறான நம்பிக்கைக்கும் இந்தக் கதை வித்திட்டது. அல்லாஹ் இது போன்ற நம்பிக்கைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றி, நல் அமல்கள் மூலம் அவனது அன்பை – திருப்தியைப் பெற அருள்வானாக! ஆமீன்.

நன்றி பி ஜே



வீடியோ  வடிவில்  காண ...     http://www.myu-ba.com/multisearch/yt_v/キーワード/UuH8EZe1bdo.html