"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

4/12/2015

யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?

இறந்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதற்குக் குர்ஆனில் இன்னொரு வசனத்தையும் இவர்கள் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

"எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!'' (எனவும் கூறினார்) நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். "நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?'' என்று அவர் கூறினார்.  அல்குர்ஆன் 12:96

யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை இழந்த தனது தந்தையின் முகத்தில் தனது சட்டையைப் போடுமாறு கொடுத்து விடுகிறார்கள். சட்டையைப் போட்டவுடன் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

பார்வை இல்லாமல் இருந்த யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுஃப் (அலை) அவர்கள் பார்வை கிடைக்க உதவியுள்ளார்கள். ஒரு நபி இன்னொரு நபிக்கு உதவி செய்ய முடியும் என்பதால் அவ்லியாக்களும் நமக்கு உதவி செய்வார்கள். எனவே நாம் அவ்லியாக்களிடம் உதவி தேடலாம் என்பது இவர்களின் தரங்கெட்ட வாதம்.

முதலில் யூசுஃப் (அலை) அவர்களுக்கும் யஃகூப் (அலை) அவர்களுக்கும் இடையே நடந்த இந்தச் சம்பவம் உலகத்தில் இருவரும் உயிருடன் இருக்கும் போது நடந்தது.
யஃகூப் (அலை) அவர்கள் யூசுஃப் (அலை) அவர்களிடம் கண் பார்வையை எனக்குத் திருப்பி அளியுங்கள் என்று பிரார்த்தனை செய்யவில்லை.

எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எத்தனை பேர் அழைத்தாலும் இறந்த பிறகும் அவ்லியாக்கள் உதவி செய்வார்கள் என்ற வாதத்திற்கும் இந்த நிகழ்வுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவர்கள் செய்யும் ஷிர்க்கை நிலைநாட்ட குர்ஆன் வசனத்துடன் அநியாயமாக விளையாடுகிறார்கள்.

நபிமார்கள் எந்தக் காரியத்தையும் சுயமாகச் செய்ய மாட்டார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தமது சட்டையை தந்தையின் முகத்தில் போட வேண்டும் என்று இறைவன் அவர்களுக்குக் கூறியதால் அவ்வாறு யூசுஃப் (அலை) அவர்கள் செய்தார்கள். யஃகூப் (அலை) அவர்களுக்கும் பார்வை கிடைத்தது.

யஃகூப் (அலை) அவர்களுக்கு இவ்வாறு பார்வை கிடைக்கும் என்பதை யஃகூப் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் முன்கூட்டியே அறிவித்துள்ளான். பின்வரும் வசனத்திலிருந்து இதை அறியலாம்.

நற்செய்தி கூறுபவர் வந்து, அதை அவரது முகத்தில் போட்டார். உடனே அவர் பார்வை பெற்றவராக மாறினார். "நீங்கள் அறியாததை நான் அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன் என உங்களிடம் கூறவில்லையா?'' என்று அவர் கூறினார். அல்குர்ஆன் 12:96

அல்லாஹ் ஏற்படுத்திய ஏற்பாட்டின் படியே யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது. நபி யூசுஃப் (அலை) அவர்கள் சுயமாக இந்தக் காரியத்தைச் செய்யமாட்டார்கள். அவ்வாறு செய்திருந்தால் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வையும் கிடைத்திருக்காது. எங்கிருந்து கொண்டும் குணமளிக்க முடியும் என்றால் தனது சட்டையைக் கொடுத்தனுப்ப வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலை அல்லாஹ் அவர்களுக்குக் காண்பித்து அதன் படி அவர்கள் செய்த காரணத்தினாலேயே பார்வை கிடைத்தது.

அய்யூப் (அலை) அவர்கள் நோய்வாய்பட்டிருந்த போது புல்லை எடுத்து உடலில் அடிக்குமாறு அல்லாஹ் கூறினான். அய்யூப் (அலை) அவர்கள் அல்லாஹ் கூறியவாறு செய்தார்கள். நோய் குணமாயிற்று. இதை அல்லாஹ் குர்ஆனில் விவரிக்கின்றான்.

இந்நிகழ்விலிருந்து நோயை நீக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு இருந்தது என்று புரிவோமா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் நோயை குணப்படுத்தும் சக்தி பெற்றிருந்தார்கள் என்று புரிவோமா?

மூசா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாறியது. அந்த கைத்தடி மூலம் அவர்கள் கடலை பிளந்தார்கள். இவையெல்லாம் கைத்தடியின் மகிமையினாலோ மூசா (அலை) அவர்களின் ஆற்றலினாலோ நடக்கவில்லை. அல்லாஹ் கைத்தடிக்கும் அதை வைத்திருந்த மூசா (அலை) அவர்களுக்கும் உத்தரவிட்ட காரணத்தாலே இவ்வாறு நடந்தது.

இதே போன்று தான் யூசுஃப் (அலை) தனது சட்டையை யஃகூப் (அலை) அவர்களின் முகத்தில் போட வேண்டும் என்பது அல்லாஹ்வின் உத்தரவு. இதன் மூலம் அல்லாஹ் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை தர விரும்பியுள்ளான். இதை அல்லாஹ் குர்ஆனில் சொன்னதால் நாம் நம்புகிறோம்.

இது போன்ற அற்புதங்களை நபிமார்களானாலும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நிகழ்த்த முடியும் என்று குர்ஆன் தெளிவாகப் பல இடங்களில் கூறுகின்றது. நபிமார்கள் அற்புதம் நிகழ்த்தினாலும் அதன் அதிகாரம் முழுவதும் அல்லாஹ்விடம் தான் உள்ளது.

நபியானாலும் விரும்பிய நேரத்தில் விரும்பிய அற்புதங்களைச் செய்ய முடியாது. எந்த நேரத்தில் எந்த அற்புதத்தைச் செய்ய அல்லாஹ் நாடுகிறானோ அப்போது தான் அது நடந்தேறும். இந்த அடிப்படையில் தான் யஃகூப் (அலை) அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.

இந்நிகழ்வை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். எனவே நம்புகிறோம். நம்ப வேண்டும். ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா, அப்துல் காதிர் ஜீலானீ இன்னும் இவர்களின் அவ்லியா பட்டியலில் வரக்கூடியவர்கள் இது போன்ற அற்புதங்களைச் செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? இவர்களுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்று அல்லாஹ் நம்பச் சொல்கிறானா? ஈமான் கொள்ள வேண்டிய விசயங்களில் இதுவும் ஒன்று என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா?

ஒரு பேச்சிற்கு இவர்கள் வாழ்ந்த காலத்தில் இத்தகைய ஆற்றல் இவர்களுக்கு இருந்தது என்று குருட்டுத்தனமாக நம்பினாலும் இன்றைக்கு இறந்துவிட்ட இவர்களை உயிருடன் இருக்கும் நாம் எங்கிருந்தாலும் எப்படி அழைத்தாலும் எங்கிருந்து அழைத்தாலும் நமது அழைப்பை ஏற்று உதவி செய்வார்கள் என்று நம்புவதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

மறுமையில் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்லவர்கள் பரிந்துரை செய்ய முடியும். ஆனால் பரிந்துரை செய்பவர்கள் யார்? அவர்கள் யாருக்கு பரிந்துரை செய்வார்கள் என்பவை அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. இதை யாரும் அறிய முடியாது.

ஆனால் மக்கத்து காஃபிர்கள் தாங்களாக சிலரை, இவர்கள் நமக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வார்கள் என்று நம்பி அவர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். இத்தகையவர்களைத் தான் அல்லாஹ் முஷ்ரிக்குகள் என்று குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

மக்கத்து காஃபிர்களின் இந்தச் செயலுக்கும் இந்தப் பரேலேவிகளின் செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அல்லாஹ்வுடைய அதிகாரங்களில் அவன் கூறாமல் இவர்களாக இந்த அவ்லியாவுக்கு (?) அனைத்து ஆற்றலும் உள்ளது என்று நம்பி மக்கத்து இணைவைப்பாளர்களைப் போல் உதவி தேடுகிறார்கள்.

பரேலேவிகளே! உங்களின் கற்பனையும் மனோ இச்சையும் கட்டுக்கதைகளும் தான் மார்க்க ஆதாரமா? நீங்கள் யாருடன் மோதுகிறீர்கள்? யாரது அதிகாரத்தில் கை வைக்கின்றீர்கள்? அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்வதால் உங்களுக்கு என்ன கேடு வரப்போகின்றது? என்பதை சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் ஆற்றலை உணர்த்தக்கூடிய இது போன்ற நிகழ்வுகளைக் கூட அவ்லியாக்களின் (?) பொய்யான ஆற்றலை நிறுவுவதற்கு முடிச்சுபோடுகிறார்கள் என்றால் இவர்களுக்கு அல்லாஹ்வின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மாறாக இவர்களுக்கு அவ்லியா பைத்தியம் பிடித்துவிட்டது என்பது தான் உண்மை.

இந்த பரேலேவிகள் இறந்துவிட்ட அவ்லியாக்கள் (?) உயிருடன் இருக்கும் நமக்கு உதவி செய்வார்கள் என்பதற்கு இது போன்ற சொத்தை வாதங்களைத் தவிர்த்து எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாது. இவர்கள் சம்பந்தமில்லாத இதுபோன்ற வசனங்களைத் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுவதிலிருந்து இவர்களின் கொள்கை வழிகேட்டின் உச்சியில் உள்ளது என்பதையே இவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.

இவர்கள் குர்ஆனிலிருந்து காட்டிய ஒரு  வசனம் தொடர்பாக மட்டுமே இந்தக் கட்டுரையில் பதிலளித்துள்ளோம். இவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கைக்கு ஓரிரு ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றிற்குரிய பதிலை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் அறிந்துகொள்வோம்.

நன்றி : http://www.onlinepj.com

இதுபற்றிய விடியோ
விடியோ 1

கூட்டு துஆ ஓதலாமா? கூட்டு துஆ என்றால் என்ன?


ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம்  துஆ  கேட்பதே '' கூட்டு துஆ.''

சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள். குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ.
நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம்.
கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும், ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது.  இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம்.   வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.
நமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி ) நூல்: முஸ்லிம் (3541)

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்ட லில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு(பித்அத்) ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி ) நூல்: முஸ்லிம் (1573)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)
கூட்டு துஆவுக்கு ஆதாரம் உள்ளதா ?
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, ‘ தாருல்களா’ என்ற வாசல் வழியாக ஒருவர் பள்ளியினுல் வந்தார். நின்றவாறே நபி (ஸல்) அவர்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்து விட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தி, ‘ இறைவா எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! வானத்தில் திரண்ட மேகத்தையோ, பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ஸல்ஃ எனும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது). அப்போது அம்மலைக் குப் பின்புற மிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக 6 நாட்கள் சூரியனையே நாங்கள் பார்க்க வில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்தும் போது, ஒரு மனிதர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! செல்வங்கள் அழிந்துவிட்டன, பாதைகள் துண்டிக்கப்பட்டு விட்டன. எனவே, மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி, இறைவா! எங்கள் சுற்றுப் புறங் களில் (இம் மழையைப் பொழியச் செய்வா யாக!), எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள்,விளை நிலங்கள் ஆகிய வற்றின் மீது (இம் மழையைப் பொழியச் செய்வாயாக!) என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரழி), நூல்:புகாரி ஹதீஸ் எண் 1014

மேற்கண்ட வசனத்தில் மழை வேண்டி தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த நபிமொழி மழை வேண்டி துஆ கேட்பதற்கு மட்டும்தான் பொருந்தும்.ஆனால் சஹாபாக்கள் இந்த துஆவுக்கு ஆமீன் சொன்னதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது கூட்டு துஆவுக்கு ஆதாரம் ஆகாது.

ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்’ என தபரானி,இப்னு அஸாகிர், ஹாகிம் ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ளது.ஆனால் இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்  

சூரா யூனூஸ் 89ம் வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரையும் பார்த்து‘உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது’ எனக் கூறுகின்றான். ஆனால் அதற்கு முந்திய வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் மாத்திரம்தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். எனவே, மேற்படி சந்தர்ப்த்தில் மூஸா (அலை) அவர்கள் பிரார்த்திக்க – துஆ ஓத ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள் எனக் இமாம் பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான் எனும் நூலில் இடம்பெறும் அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸ் இன்னொரு ஆதாரம்.
எனினும் மேற்படி செய்தியை அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஸர்பீ பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர். அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என அறிவிப்பாளர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
கூட்டு துஆ விட்கு எதிரான ஆதாரங்கள்
அல்லாஹ் தன் திருமறையில் , துஆ எப்படி கேட்க வேண்டும் என்று நமக்கு தெளிவாக கற்றுத் தருகிறான்.
உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்ற வராக  ஆகி விடாதீர்! (அல்குர் ஆன் 7:205)

அவர் (ஜக்கரியா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

”நீங்கள் பிரார்த்தித்தால் (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள்.‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு‘ என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பது ஆகாது.) ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் எவருமில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல்கள் : புகாரி (6338) முஸ்லிம் (4837)
உங்களில் எவரேனும் பிரார்த்தித்தால் ‘நீ நாடினால் என்னை மன்னிப்பாயாக!‘என்று கேட்க வேண்டாம். (உங்கள்) கோரிக்கையை வலியுறுத்திக் கேளுங்கள். மகத்துவம் மிக்கதைக் கேளுங்கள். ஏனெனில் அல்லாஹ் வழங்கிய எந்த ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4838)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55)

சப்தமிட்டு ஒருவர் துஆ கேட்டு அதற்க்கு சப்தமாக ஆமீன் கூறுதல் நிச்சயமாக ரகசியமானதாக இருக்க முடியாது.இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் சிந்திக்க கடமை பட்டிருக்கிறோம்.
கூட்டு துஆ தமிழ் மக்களிடையே 99% அரபு மொழியிலேயே கேட்கப் பட்டு வருகிறது.அதில் 99% பேருக்கு அரபி தெரியாது.நாம் எந்த துஆவிற்க்கு ஆமீன் கூருகிறோமோ அதற்க்கு நமக்கே அர்த்தம் தெரிய வில்லை என்றால், எதற்காக நாம் துஆ கேட்க வேண்டும்? என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இன்னொரு அவலத்தையும் கேளுங்கள் , யார் அந்த துஆவை சப்தமிட்டு அரபு மொழியில் மொழிகிராரோ அவருக்கே கூட அவர் என்ன துஆ செய்கிறார் என்று தெரியாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது .இப்படி அர்த்தம் புரியாமல் துஆ கேட்பதிலும் அதற்க்கு ஆமீன் கூறுவதிலும் என்ன பணிவு இருக்க முடியும்.
பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள். அச் சத்தோடும் ஆசையோடும் அவனைப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 7:56)
அல்லாஹ் நம்மை ஆசையோடு பிரார்த்தனை செய்யக் கட்டளையிடுகிறான். பல பேர் கூடு துஆவில் தூங்கிக் கொண்டு ஆமீன் சொல்வதை கண் கூடாக பார்த்திருக்கிறோம்.ஆகவே அல்லாஹ் குறிப்பிட்ட பணிவும் இதில் இல்லை ரகசியமும் இல்லை ஆசையும் இல்லை .
.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, ‘லா இலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும் ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ மூஸா அஷ்அரீ(ரலி)  புகாரி 2992, 4205,6384,6409,6610,7386 முஸ்லிம் 4873

இந்த ஹதீஸ் திக்ருகளை பற்றி கூறப பட்டாலும், அல்லாஹ் காது கேட்காதவன் இல்லை, அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே கூட்டு துஆ என்பது நிச்சயமாக ஒரு வழிகேடு, ஆகவே கூடு துஆவை நாம் புறக்கணிக்க வேண்டும்.
கூட்டு துஆவில் உள்ள பாதிப்பு
கூட்டு துஆவை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்து இருக்கிறார்கள் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தோம். அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாததை செயல்படுத்தும் போதுதான் பல பாதிப்புகள் ஏற்படும்.கூட்டு துவாவில் ஏற்படும் முக்கியமான பாதிப்பு என்னவென்றால் , கூட்டு துஆவில் கலந்து கொள்பவர், தான் தனியாக துஆ கேட்க தேவையில்லை என்று எண்ணுகிறார்.
தன்னுடைய சொந்த தேவைகளை அவரவர் கேட்க முடியாத நிலைமை இங்கே ஏற்படுகிறது.துஆ கேட்பவருக்கு குழந்தை இல்லாமல் இருந்து ஆமீன் கூருபவர் , இனி தனக்கு குழந்தையே வேண்டாம் என்ற நிலையில் இருந்து ,துஆ கேட்பவர் தனக்கு குழந்தை வேண்டி துஆ செய்தால் சரியாக இருக்காது.
 நிச்சயமாக ஒருவருடைய தேவையை மற்றவர் அறிந்திருக்க மாட்டார்.அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா தேவைகளையும் என்னிடம் கேளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2:188)
தொழுகையில் தாமதமாக சேர்ந்தவர்கள் கூட்டு துஆவினால் ஒழுங்காக தொழ முடியாத நிலையும் ஏற்படுகிறது.இரேண்டாவது ஜமாத் அமைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குர்ஆன் வசனங்கள் ஒதப் படும் போது நாம் அதை செவிமடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 7:204)
இப்படி இருக்க இரேண்டாவது ஜமாத்தில் குர்ஆன் வசனங்கள் ஓதப் படும்போது கூட்டு துஆவும் நடந்துக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாக பார்க்க முடிகிறது.
மேலும் பர்லு தொழுகைக்கு பின் இமாமை கொண்டே துஆ கேட்டு பழகிவிட்டதால் ஒரு சிலர் தமது சொந்த விஷயங்கள், 3,7,40 ஆம் பாத்திஹா , பெயர் வைப்பு , திருமணம் போன்றவற்றிற்கும் பயணம் செல்லும்போதும் ,   விருந்து ஆரம்பம் முடிவிலும்,மட்டுமல்லாது, நோன்பு, ஹஜ் போன்ற கடமையை செய்ய தொடங்கும்போதும் கூட இமாமே நேரில் வந்து கூட்டு துஆ என்னும் நபி (ஸல்) அவர்கள் காட்டி தராத ஒரு பித் அத்தை செய்து நமக்கு துஆ செய்ய வாய்ப்பளிக்காமல் செய்து விடுகிறார், நீங்கள் நன்குசிந்தித்து பார்த்தால் இந்த வழிகேடுகள் அனைத்திற்கும் ஆரம்பம் எது என்று புரிந்துகொள்வீர்கள்
கூட்டு துஆ (சில )இமாம்களுக்கு வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலாகவே இருப்பதால் அதை அவர்கள் விட்டுத்தர மாட்டார்கள் எனவே இந்த பித் அதை தவிர்த்து நேரடியாக உள்ளச்சத்துடன் இறைவனிடம் துஆ செய்து வருவதே நபி (ஸல்) காட்டி தந்த வழிமுறையாகும்.
விழிப்புணர்வு
கூட்டு துஆவிர்க்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் கூட்டு துஆவினால் ஏற்படும் விளைவுகளையும் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கூட்டு துஆ ஒரு தெளிவான பித்அத் , நிச்சயமாக இது நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும் ஒரு செயலாக இருக்கிறது என்பதை இந்த தவறான செயலை செய்யக் கூடிய மக்களிடம் எச்சரிக்கை ஊட்ட வேண்டும்

thanks: http://www.tamililquran.in/islam/?p=126