"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

9/29/2013

மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை

இன்றைக்கு முஸ்லிம்களில் பலர் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு சமாதிகளிலும் வழிபாடு நடத்துகிறார்களே இது போன்று தான் மக்கத்துக் காபிர்களின் கடவுள் நம்பிக்கை இருந்தது.
அல்லாஹ்வைப் பற்றி இவ்வாறு நம்புவது மட்டும் போதும் என்றிருந்தால் அவர்களுக்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்பி இருக்கத் தேவையே இல்லை.
மிகப் பெரிய ஆபத்தின் போது அவர்கள் அல்லாஹ்வைத் தான் அழைப்பார்கள். குட்டித் தெய்வங்களையும், மகான்களையும் மறந்து விடுவார்கள். இதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். 


அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)

இது போன்ற பல வசனங்கள் தெளிவாக எடுத்து வைக்கின்றது. (பார்க்க குர் ஆன் 6;40,41. 10:22, 17:67, 31:32 இன்னும் பல..)
ஆனால் இக்கால முஸ்லிம்கள் இதை விட மோசமான பெரிய துன்பம் என்றால் யா-முஹையதீன், பக்கீர் அப்பாவே, சீனி அப்பாவே, பீரப்பாவே . என்றும் அழைகின்றார்கள் .

'இந்த மகான்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள். இவர்களுக்கு வழிபாடு நடத்தினால் அல்லாஹ்விடம் பேசி நமது தேவைகளைப் பெற்றுத் தருவார்கள். அல்லாஹ்விடம் நம்மையும் நெருக்கமாக ஆக்குவார்கள்' என்பது தான் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)
மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வை நம்பியதுடன் அவனிடம் தங்களைப் பற்றி எடுத்துச் சொல்லிப் பரிந்துரைப்பதற்காக மற்றவர்களை வணங்கி வந்தனர் என்பதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.

மரணித்தவர்களை அழைப்பதும், பிரார்த்திப்பதும் தவறல்ல என்று முஸ்லிம்களில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் தான் அல்லாஹ்வைக் கடவுளாக ஏற்று விட்டோமே! பரிந்துரை செய்பவர்களாகத் தானே பெரியார்களைக் கருதுகிறோம் என்று தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.
மக்காவில் வாழ்ந்த காபிர்களும் இது போல் தான் நம்பினார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையெல்லாம் வணங்கினார்களோ அவர்களைக் கடவுள்கள் என்று மக்காவின் காபிர்கள் கூறவேயில்லை. கடவுளிடம் பரிந்து பேசுபவர்கள் என்று தான் நம்பினார்கள் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன

இறைவனிடம் சிபாரிசு செய்பவர்கள் என்று மக்கத்துக் காபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிலைகளைத் தான்; மகான்களை அல்ல என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம். இது அடிப்படையில்லாத சந்தேகமாகும். அல்லாஹ்வைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதில் சமாதியையும் சிலைகளையும் வேறுபடுத்திப் பார்க்க எந்த ஆதாரமும் இல்லை. முகாந்திரமும் இல்லை. சிலைகளும், சமாதிகளும் இதில் சமமானவை தான்.

மக்கத்துக் காபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிலைகளைத் தான். நாங்கள் மகான்களின் சமாதிகளை அல்லவா வணங்குகிறோம் என்றும் சிலர் கேட்கின்றனர்.
மக்கா காஃபீர்களும் வனங்கியது மகான்களை தான் பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஃபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1601, 3352, 4289,
எனவே தர்கா வழிபாட்டை தகர்ப்போம் …

(( p.j.யின் தர்கா வழிபாடு எனும் நூலிலிருந்து ...))

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்