"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

9/29/2013

பள்ளிவாசல் என்றால் என்ன?


இன்றைக்கு முஸ்லிம்கள் பாங்கு சொல்லி ஐங்காலத் தொழுகைகளை  ஜமாஅத்தாக நிறைவேற்றும் இடத்திற்குப் பள்ளிவாசல்கள் என்று  குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டைக் கண்டித்து உரையாற்றும் போது நாம் "யூத கிறிஸ்தவர்களின் மீது  அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தங்களின் நபிமார்களின் சமாதிகளையெல்லாம் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர்'' என்ற ஹதீஸைக் குறிப்பிடும் போது தர்ஹா  வழிபாட்டை  ஆதரிப்பவர்கள்,  நாங்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை.   பள்ளிவாசல்களில் பாங்கு கூறுவார்கள். நாங்கள் சமாதிகளில் பாங்கு கூறவா செய்கிறோம்?  பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத்  தொழுகிறார்கள். நாங்கள் சமாதிகளில் ஜமாஅத்தாகத் தொழவா செய்கின்றோம்?' என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். களியக்காவிளை விவாதத்தின் போது கூட சில கோமாளிகள் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்தனர்.

பள்ளிவாசல் என்றால் என்ன? என்பதைத் திருக்குர்ஆன் ஒளியில் நாம் தெளிவாக விளங்கிக் கொண்டால் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுப்பது என்றால் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
பள்ளிவாசல் என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கும் வார்த்தைக்கு  அரபியில் மஸ்ஜித்' என்பதே மூலச் சொல்லாகும். மஸ்ஜித்' என்றால் பணியுமிடம் என்று பொருளாகும். அது போன்று தலையை பூமியில் வைத்து ஸஜ்தா செய்யுமிடம் என்றும் பொருள்படும்.
அதாவது அல்லாஹ்வாகிய ஒரே இறைவனை எவ்வாறு பணிய வேண்டும் என்பதை மார்க்கம் கற்றுத் தந்துள்ளது. இவ்வாறு பணிவதற்காகக் கட்டப்படும் ஆலயத்திற்குப் பெயர் தான் மஸ்ஜித்' அதாவது பள்ளிவாசல் ஆகும்.
இதன் காரணமாகத் தான் கஅபாவைக் கட்டுமாறு இபுறாஹிம் நபிய வர்களுக்கு இறைவன் கட்டளையிடும் போது பின்வருமாறு  கூறுகிறான்.
"எனது ஆலயத்தை தவாஃப் செய்வோருக்காகவும்,  இஃதிகாஃப் இருப்போ ருக்காகவும், ருகூவு,  ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் தூய்மைப்படுத்துங்கள்!''  என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி    மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

"எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும்,  நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது  ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை  நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 22:26)
தவாஃப் (கஅபா ஆயத்தை மட்டும்) செய்தல், நிலையில் நிற்பது, குனிதல்,  ஸஜ்தா செய்தல் போன்று இறைவனுக்குப் பணிவைக் காட்டும் செயல்களைச் செய்வதற்காகக் கட்டப்பட்ட ஆலயம் தான் பள்ளி   வாசலாகும். 
மேலும் இறைவனை உயர்த்தி அவனுடைய பெயர்களை  திக்ர்'  நினைவு   கூர்வதற்காக எழுப்பப்படும் ஆலயமும் பள்ளிவாசலாகும்.
(இறை) இல்லங்கள் உயர்த்தப்படவும், அதில் அவனது பெயர் நினைக்கப்படவும்  அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் காலையிலும்,  மாலையிலும் அவனை சில ஆண்கள் துதிக்கின்றனர். (அல்குர்ஆன் 24:36)

மனிதர்களில் ஒருவர்மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும்,வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 22:40)

பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி  இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை  அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும்,  மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)
மேற்கண்ட வசனங்களில் இறைவனுடைய பெயர்கள் காலையிலும் மாலையிலும் எல்லா நேரங்களிலும் திக்ர் செய்யப்படுவதற்காக உருவாக்கப்பட்ட  ஆலயமே பள்ளிவாசல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
மேலும் பிரார்த்தனை செய்வதற்காக உருவாக்கபட்ட ஆலயமும் பள்ளிவாசலேயாகும்.
"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே  மீள்வீர்கள்! (அல்குர்ஆன் 7:29)

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன்72:18)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ,  மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப் பயணம் மேற்கொள்ளப்படாது.
(குறிப்பு: இறையில்லம் கஅபா அமைந்துள்ள பள்ளியே மஸ்ஜிதுல் ஹராம் ஆகும். மதீனாவிலுள்ள நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளியே மஸ்ஜிதுந் நபவீ எனப்படுகிறது. ஜெரூசலேமிலுள்ள புனிதப் பள்ளிவாசலே  மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்.)அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1189
மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸிலிருந்து பள்ளிவாசல் என்பதன் அர்த்தத்தை நாம் பின்வருமாறு வரையறுக்கலாம்.
இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக்கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர்  செய்வதற்காகவும்,  பிரார்த்தனை  செய்வதற்காவும்,  நன்மையை  நாடிப் பயணம் செய்வதற்காகவும் (கஅபா, மஸ்ஜிதுந் நபவீ, அக்ஸா ஆகிய மூன்று மட்டும்) ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ்விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது.
இதைத் தான் இறைவன் பின்வரும் வசனத்தில் கட்டளையிடுகின்றான்.
பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன்72:18)
ஒரு சமாதியை மையமாக வைத்து அதற்குப் பணிவைக் காட்டுவ தற்காகவும், அதில் அடங்கியுள்ளவரை திக்ர் செய்து நினைவு  கூர் வதற்காகவும், சமாதியில் அடங்கப்பட்டவரிடம் பிரார்த்தனை  செய்வதற்காகவும், நன்மையை நாடித் தங்குவதற்காகவும் ஒரு கட்டடம் கட்டப்பட்டால் அது சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவருக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசலாகும். அல்லது சமாதியே இல்லாமல் மனிதனையோ  அல்லது இறைவனல்லாத ஏதாவது  ஒன்றையோ  மகத்துவப்படுத்துவதற்காகக் கட்டப்பட்டகட்டடமும் பள்ளி  வாசலேயாகும்.   அதாவது மேற்கண்ட நோக்கத்தில் இறைவனுக்காக மட்டும் தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் கட்டப்படக்கூடாது.
எனவே யூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி  வாசல்களாக எடுத்துக் கொண்டனர் என்று நபியவர்கள் கூறியதன் கருத்து யூத கிறிஸ்தவர்கள் சமாதிகளில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுதார்கள் என்பதல்ல. பாங்கு என்பதும் ஜமாஅத்தாகத் தொழுதல் என்பதும் நபியவர்களின் உம்மத்திற்கு மார்க்கமாக்கப்பட்டதாகும். நபியவர்களுக்கு முந்தைய யூத, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு  பாங்கு  கூறி ஜமாஅத்தாகத் தொழுதல் என்பது கிடையாது. அப்படியென்றால் அவர்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள் என்பதன் விளக்கம் ,இறைவனுக்காக ஆலயங்களை  எழுப்பி என்னென்ன காரியங்களைச்செய்ய வேண்டுமோ  அதேகாரியங்களை  சமாதி  களுக்காக        ஆலயங்களை  எழுப்பிச் செய்தார்கள் என்பதேயாகும்.
இதன் மூலம், பள்ளிவாசலில் பாங்கு கூறி ஜமாஅத்தாகத் தொழுவார்கள். தர்ஹாக்களில் பாங்கு கூறி நாங்கள் ஜமாஅத்தாகத் தொழவில்லை. எனவே நாங்கள் சமாதிகளை பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை. பள்ளிவாசல் வேறு, தர்ஹா வேறு' என்று கூறுவது போலியான வாதம் என்பதை யாரும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மேலும் இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களைப்  போன்று சமாதிகளை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தான் தர்ஹாக்கள். நாகூர் தர்ஹாவை நாகூர் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும், பொட்டல் புதூர் முஹைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்றும் மேலும் ஒவ்வொரு ஊராரும் தங்கள் ஊரின் தர்ஹாக்களை பள்ளிவாசல்கள் என்றும் குறிப்பிடுவதே இதற்குத் தெளிவான சான்றாகும்.
இவ்வாறு சமாதிகளைப் பள்ளிவாசல்களாக்கிய யூத, கிறிஸ்தவர்களைப் பற்றியும் அவ்வாறு நபியவர்களின் உம்மத்துகள் செய்து  விடக்கூடாது  என்பதையும் நபியவர்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

thanks....onlinepj.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்