"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

1/26/2015

அஹ்லுல் பைத்-விதண்டாவாதமும் விளக்கமும்

நாம் முன்னர்  நபியவர்களின் அஹ்லுல் பைத்தினர் யார் என்பதை குர்ஆன் ஸூன்னா அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் தெளிவாக அவதானித்தோம். ஆனால் ஷீஆக்கள் நபியவர்களின் அஹ்லுல் பைத்தினரை முற்றிலும் குர்ஆன், ஸூன்னாவிற்கு முரண்படுகின்ற அடிப்படையில் தீர்மானிக்கின்றனர். அவர்கள் யாவர்? என்பதையும், அவர்களின் ஆதாரங்களுக்கான தெளிவான பதில்களையும் இங்கு அவதானிப்போம்.

ஷீஆக்கள், நபியவர்களின் குடும்பமாக அடையாளம் காட்டுவோர் அலி (ரழி), பாதிமா(ரழி) ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) அவர்களின் குடும்பத்தில் வந்த சிலர் ஆகியோரை ஷீஆக்கள் அஹ்லுல் பைத்தினராகவும் தங்களின் மார்க்கத்தின் ஆதாரமாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். நபியவர்களின் இரண்டு மகளை திருமணம் செய்த உஸ்மான் (ரழி) . அவர்களை அஹ்லுல் பைத்தாக ஷீஆக்கள் கணிப்பிடுவதில்லை. ஆனால் ஒரு மகளைத் திருமணம் செய்த அலி (ரழி) . அவர்களை நபியவர்களின் குடும்பத்தின் தலைவரைப்போலவும், நபியவர்களின் குடும்பத்தில் அவரின் இடத்தைப்போன்ற இடம் எவருக்கும் கிடையாது என்பதைப்போலவும் மதிக்கின்றனர்.
ஷீஆக்கள் தங்களின் இந்தக் கொள்கைக்கு சொல்கின்ற ஆதாரங்களை இனி அவதானிப்போம்.
ஆதாரம்: 01
ஆயிஷா (ரழி) . அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்கள் ஒரு காலைப்பொழுதில் வெளியானார்கள் அவர்கள் மீது ஒரு போர்வை இருந்தது. அதிலே அலி (ரழி) ., பாதிமா ., ஹஸன் ., ஹூஸைன் . போன்றோரை நுழைத்தார்கள். பின்பு ‘‘அல் அஹ்ஸாப் 33’‘ம் வசனத்தை ஓதினார்கள் ‘அஹ்லுல் பைத்’ (எனும் நபியின் குடும்பத்) தினராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ் விரும்புகின்றான்.’ (முஸ்லிம் 2424)
இந்த ஹதீஸின் சில அறிவிப்புக்களிலே உம்மு ஸலமா . அவர்கள், நானும் போர்வைக்குள் வரலாமா என்று அனுமதி கேட்டதாகவும் அதாவது நானும் உங்களின் அஹ்லுல் பைத் இல்லையா என்று சொன்னதாகவும் அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் இடத்தில் இருங்கள் நீங்கள் எல்லோரும் நலத்திலேயே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸை ஷீஆக்கள் வைத்துக்கொண்டு இந்தப் போர்வைக்குள் நபியவர்கள் நுழைத்தவர்கள் மாத்திரம்தான் அஹ்லுல் பைத்தினர் என்றும் அவர்கள் தவிரவுள்ள எவரும் அஹ்லுல் பைத்தினர் அல்ல என்றும் வாதிடுகின்றனர். அதாவது பாதிமா . அவர்கள் அஹ்லுல் பைத்தில் இருக்கிறார்களாம் அவர்கள் பிறப்பதறகு; காரணமாக இருந்த நபியவர்களின் மனைவி ஹதஜீh.
அவர்கள் அஹ்லுல் பைத்தில் இல்லையாம். இதற்கான பதிலை தெளிவாக நோக்குவோம்.
01) நபியவர்களின் 23 வருடகால வாழ்க்கையில் நபியவர்கள் அஹ்லுல் பைத் பற்றி இந்த ஹதீஸில் மாத்திரமே சொல்லியிருப்பதைப்போன்று ஷீஆக்கள் பேசுகின்றனர். நபியவர்கள் அஹ்லுல் பைத் தொடர்பாக சொன்ன சில செய்திகளை அஹ்லுல் பைத் பற்றிய அறிமுகத்திலே நாம் குறிப்பிட்டோம். எனவே அவைகளையெல்லாம் கவனித்தே முடிவுகளை செய்யவேண்டும்.
02) இங்கே நபியவர்களின் வார்த்தை மற்றவர்கள் அஹ்லுல் பைத்தினர் அல்ல என்பதையோ இவர்கள் மாத்திரம்தான் அஹ்லுல் பைதத்தினர் என்பதையோ உணர்த்தவில்லை. ஒருவருக்கு 06 நண்பர்கள் இருக்கும் போது மூன்று பேரைக்காட்டி இவர்கள் எனது நண்பர்கள் என்று சொல்வதனால் மற்ற மூவரும் எனது நண்பர்கள் அல்ல என்றாகாது. ஒருவர் தன் சகோதரனைக்காட்டி இவர் எனது தம்பி என்றால் அவருக்கு அண்ணன் இல்லை என்றோ வேறு எந்த சகோதரர்களும் அவருக்கு இல்லை  என்றோ, அவர்கள் குடும்பத்தில் இருவர்தான் என்றோ நாம் சொல்ல மாட்டோம். இந்த வார்த்தையை மாத்திரம் வைத்து அவ்வாறு சொல்ல முயல்பவர்களை நாம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் அறிவாளிகள் என்றோ சொல்லமாட்டோம்.
இறைவனும் இவ்வாறான வார்த்தைகளை அல்குர்ஆனில் பிரயோகிக்கிறான். அத்தவ்பா 36ம் வசனத்தில் ‘‘நிச்சயமாக அல்லாஹ் விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகும். வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவனின் வேதத்தில் இவ்வாறே உள்ளது.அதில் நான்கு மாதங்கள் சங்கைபொருந்தியதாகும் அதுதான் உறுதியான மார்க்கமாகும்.’‘
இந்த வசனத்தை ஒருவர் வைத்துக்கொண்டு இந்த வசனத்தில் குறிப்பிடப்படுவதுதான் மார்க்கம் வேறு எதுவும் மார்க்கம் அல்ல என்று சொன்னால் நாம் யாராவது அவரை ஏற்றுக்கொள்வோமா? நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்தக் கருத்திலமைந்த பல வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன இவற்றையெல்லாம் நாம், அவை மாத்திரம்தான் மார்க்கம். வேறு விடயங்கள் எதுவும் மார்க்கத்தில் இல்லை என்ற அடிப்படையில் விளங்குவதில்லை. மாறாக இதுவும் மார்க்கம்தான் அதுபோலவே ஏனைய விடயங்களும் மார்க்கத்தில் உள்ளவைதான் என்று சொல்வோம். இதுபோலவே நபியவர்கள், இவர்கள் எனது குடும்பத்தினர், என்று சொல்வதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது இவர்களும் குடும்பமே ஏனையவர்களும் நபியவர்களின் குடும்பத்தில் இருக்கின்றனர் என்றே விளங்க வேண்டும்.
03) இந்த ஹதீஸில் வரும் அடிப்படையில் போர்வையின் உள்ளிருந்தவர்கள் மாத்திரமே அஹ்லுல் பைத்தின் அங்கத்தவர்கள் என்றால் ஏனையவர்கள் எவரையும் அதிலே வெளியிலிருந்து நுழைக்க முடியாது என்றால், ஷீஆக்களினால் அஹ்லுல் பைத் என்றும் தங்களின் இமாம்கள் என்றும் இனங்காட்டப்படுபவர்களில் மீதமுள்ள ஒன்பது பேரையும் எந்த அடிப்படையில் நுழைவிக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இவ்வாறு நாம் கேட்டால் பாத்திமாவும் அலி (ரழி)யும் இருந்தார்கள் ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) இருவருமே இருந்தார்கள்தானே! எனவே அவர்களின் பிள்ளைகளும் இதில் அடங்குவார்கள் என்று சொல்வர். அப்படியென்றால் பாத்திமாவின் தாய் நபியவர்களின் மனைவி ஹதீஜாவும் அஹ்லுல் பைத்தில் அடங்குவார்தானே என்று நாம் சொல்வோம். இதை ஆம் என்று ஏற்றுக்கொண்டால் நபியவர்களின் மனைவி ஹதீஜாவை அவரின் குடும்பம் என்று ஏற்றுக்கொள்ளும் நீங்கள் மற்றைய மனைவியரை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்போம்… இவ்வாறு ஷீஆக்களின் இந்த தவறான கொள்கையினால் அவர்களால் பதில் சொல்லமுடியாத பல கேள்விகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.
ஹஸன் (ரழி) ஹூஸைன் (ரழி) இருவரின் பரம்பரையும் அஹ்லுல் பைத்தில் அடங்கும் என்று ஷீஆக்கள் சொல்வார்கள். ஆனால் தங்களின் இமாம்கள் என்றும், அஹ்லுல் பைத் என்று தாங்கள் இனங்காட்டும் போது ஏன் ஹூஸைன் (ரழி) அவர்களின் பரம்பரையை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர். அவர்களின் வாதத்தில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இருவரின் பரம்பரையில் வருவோரையும் தங்களின் இமாம்களாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஹஸன் (ரழி) அவர்களின் பரம்பரையிலிருந்து ஷீஆக்கள் எந்த இமாமையும் எடுத்துக்கொள்ளவில்லை. அதுபோலவே தங்கள் பிரச்சாரங்கள் அனைத்தையும் ஹூஸைன் . அவர்களை மையப்படுத்தியே செய்கின்றனர்.
எனவே, நாம் மேலே குறிப்பிடட அடிப்படையில் இந்த போர்வை ஹதீஸ் பற்றிய இவர்களும் எனது அஹ்லுல் பைத்தினர்தான் என்பதைக்குறிக்குமே தவிர இவர்கள்தான் எனது குடும்பத்தினர் வேறு எவரும் இல்லை என்பதைக்குறிக்காது.
ஆதாரம்: 02

إنما يريد الله لذھب عنكم الرجس أھل البيت ويطھركم تطھيرا

‘‘நபியின் மனைவியர்களே! நீங்கள் வேறு எந்தப் பெண்ணைப் போன்றவர்களுமல்ல… நபியின் குடும்பத்தினரே உங்களை அசுத்தத்திலிருந்து தூய்மைப்படுத்துவதையும் பரிசுத்தப்படுத்துவதையுமே அல்லாஹ் விரும்புகிறான்.’‘‘‘ (அஹ்ஸாப் 32,33)
நாம் இந்த வசனத்தில் கோடிட்டுக்காட்டியுள்ள ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை அரபியில் ஆண்களைப்பார்த்து ‘‘நீங்கள்’‘‘‘ என்பதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். பெண்களைப்பார்த்து ‘‘நீங்கள்’‘‘‘ என்பதற்கு ‘‘ كن ‘‘‘‘ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படும் இதை வைத்து ஷீஆக்கள் பின்வருமாறு வாதிடுகின்றனர்.
இந்த வசனத்தில் அல்லாஹ் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளான் இது ஆண்களைக்குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். பெண்களைப்பற்றிப் பேசிவிட்டு திடீரென்று ஆண்களைப்பற்றிப்பேசுவதன் மூலம் பெண்களை இதிலிருந்து நீக்கியுள்ளான் என்பது தெளிவாகின்றது. அத்தோடு ஆரம்பத்தில் நபியவர்களின் மனைவியர்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் பெண்பாலைக்குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு அஹ்லுல்பைத்தினர் பற்றி பேசும் போது ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தைகளைப் பயன்பத்தியிருப்பதே நபியின் மனைவியர் அஹ்லுல் பைத்தில் இல்லை. என்பதை தெளிவுபடுத்தவும் அஹ்லுல் பைத்திலிருந்து அவர்களை நீக்குவதற்காகவுமே ஆண்பாலில் பேசியுள்ளான் என்கின்றனர். இந்த வாதம் தவறானது என்பதை பின்வருமாறு விளக்க முடியும்.
01) அரபு மொழியில் ஆண்களுக்கு பயன்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்திப் பேசும் போது பெண்களையும் உள்ளடக்குகின்றது ஆனால் பென்களைக்குறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தும்போது அது ஆண்களை உள்ளடக்குவதில்லை. இது அரபு மொழி தெரிந்த யாவரும் அறிந்திருக்கின்ற ஒரு விடயம். இது எவ்வாறு ஷீஆக்களுக்கு தெரியாமல் போனதோ தெரியவில்லை. அல்-குர்ஆன், அல்ஹதீஸில் உள்ள ஏராளமான கட்டளைகள் ஆண்பாலிலேயே பேசப்படுகிறது ஆனாலும் அது பெண்களையும் உள்ளடக்குகிறது பெண்களைக்குறித்து பேசப்படுபவை அவர்களுக்கே உரிய விடயங்களாகவே உள்ளன.
உதாரணமாக அந்நிஸா என்ற அத்தியாயத்தில் வரும் 26,27,28ம் வசனங்களைக்குறிப்பிடலாம்.

يريد الله ليبين لكم ويھديكم سنن اللذين من قبلكم ويتوب عليكم

‘‘அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும் உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும்….’‘‘‘ இந்த வசனத்திலே வரும் அனைத்து வார்த்தைகளும் ஆண்களைக்குறிக்கும் வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையும் இது போன்றதையும் எவரும் ஆண்களுக்கு மாத்திரம் உரியது, பெண்கள் இதில் நுழையமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வது கிடையாது.
அல்-கஸஸ் அத்தியாயத்தின் 29வது வசனத்தில் இறைவன் பின்வருமாறு குறிப்பிடுகிறான். ‘‘ஆகவே மூஸா தன் தவணையை முடித்துக்கொண்டு தன் குடும்பத்தினருடன் இரவில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது’‘‘‘ இந்த வசனத்திலும் இது போன்ற வசனங்களிலும் ஆண்களைக்குறிக்கும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டாலும் பெண்களும் அதில் உள்ளடக்கப்படுவார்கள். இதுபோலவே அஹ்லுல் பைத் தொடர்பாக அஹ்ஸாப் அத்தியாயத்தில் வரும் வசனத்தில் ஆண்களைக்குறிக்கும் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் அது பெண்களையும் குறிக்கும் என்று விளங்கிக் கொள்ளலாம்.
02) மேலே அஹ்ஸாபில் வரும் வசனத்தின் ஆரம்பத்தில் முழுக்க முழுக்க பெண்பாலில் பேசப்படுகிறது. நேரடியாக பெண்களுக்கு நபியவர்களின் மனைவியர்களுக்கு அந்தக் கட்டளைகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனத்திலும் முழுக்க முழுக்க பெண்பாலைக்குறிக்கும் வார்த்தைகளே பயன்படுத்தப் பட்டுள்ளன.
ஆனால் அஹ்லுல் பைத்தினர் பற்றிப்பேசும்போது மட்டும் ஆண்பாலைக் குறிக்கும் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று யோசித்தால். அஹ்லுல் பைத்தைப் பொறுத்தவரையில் அதிலே நபியவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள்தான் அதன் தலைவராகவும் இருக்கிறார்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தில். பெண்பாலைக்குறிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அஹ்லுல்பைத்திலிருந்து நீக்கப்பட்டதாகிவிடும் எனவே ஆண்பாலைக்குறிக்கும் ‘‘ كم ‘‘‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தபட்டுள்ளது. அதில் நபியவர்களும் அவர்களின் மனைவியரும் நுழைந்துவிடுவர். ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கிய ஒரு விடயத்தை சொல்லும்போது ஆண்பால் வார்த்தைகளை பயன்படுத்தும் அரேபியர்களின் வழமைக்கு இது ஒப்பானதாகும். இது போன்று அல்குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன. இப்றாஹீம் (அலை) அவர்களின் வீட்டுக்கு வானவர்கள் வருகிறார்கள். அவருக்கு ஒரு குழந்தை பிறக்க இருப்பதாக நன்மாராயம் கூறுகின்றனர் இதைக்கேட்ட இப்றாஹீம் (அலை) அவர்களின் மனைவி ஆச்சரியமடைகிறார். ‘நான் மூதாட்டி எனது கணவர் இப்றாஹீமோ வயோதிபராக இருக்கிறார். இந்த நிலையில் எவ்வாறு குழந்தை பிறக்கும்?’ என்று கூறுகிறார் அதற்கு மலக்குகள் பதில் கொடுக்கும் போது.
( ‘ قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت ‘( 11:73
‘அ(தற்க)வர்கள், ‘அல்லாஹ்வின் கட்டளை குறித்தா நீர் ஆச்சரியப்படுகின்றீர்? ‘இவ்வீட்டாரே! அல்லாஹ்வின் அருளும், அவனது பாக்கியங்களும் உங்கள் மீது உண்டாவதாக! என்று கூறினர்.’ இங்கே இப்றாஹீம் நபியின் மனைவியோடு பேசும் போது மலக்குகள் ஆரம்பத்தில் பெண்பாலைக்குறிக்கும் ‘‘ تعجبين ‘‘ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு பின் அவரின் அஹ்லுல் பைத்தினருக்கு பிரார்த்திக்கும் போது ‘‘ كم ‘‘ என்ற ஆண்பாலுக்கு பயன்படுத்தப்படும் வார்த்தையை உபயோகிக்கின்றனர். காரணம், ஆரம்பத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களின் மனைவியோடு மட்டும் பேசுகின்றனர். ஆனால், பின்பு இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பம் பற்றி பேசுகின்றனர். அவரது குடும்பத்தின் தலைவர் அவர்தான் எனவே தான் ஆண்பாலைக்குறிக்கும் ‘‘கும்’‘ என்ற அரபு வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். அதில் அவரது மனைவியும் நுழைகின்றார். இதேவேளை, பெண்பாலைக்குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தினால், அதில் இப்றாஹீம் (அலை) அவர்கள் நுழையமாட்டார்கள். இங்கே, இப்றஹீம் நபியின் மனைவி இதில் நுழையமாட்டார் அதனால்தான் ஆண்பாலில் மலக்குகள் உபயோகித்துள்ளனர் என்று வாதிடமுடியாது காரணம் ‘‘கும்’‘ என்ற வார்த்தை பன்மைக்கு பயன்படுத்தப்படுவது. ஒருமைக்கு பயன்படுத்துவது அல்ல இப்றாஹீம் நபியுடன் அவரது மனைவியைத்தவிர வேறு எவரும் இருக்கவில்லை. எனவே அவரது மனைவியும் அதில் நுழைகிறார் என்பது தெளிவாகிறது.
இதுபோலவே நபியவர்களின் குடும்பத்தில் அவர்களே தலைவர் என்பதால் ‘‘அஹ்ஸாப்’‘‘‘ அத்தியாயத்தில் ஆண்பாலைக்குறிக்கும் ‘‘ كم ‘‘ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டபோது நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு சொல்கிறார்கள்:

إصنعوا لآل جعفر طعاما فقد أتاهم أمر يشغلهم أو أتاهم ما يشغلهم

‘‘நீங்கள் ஜஃபரின் குடும்பத்தினருக்கு உணவு செய்து கொடுங்கள் ஏனெனில் அவர்களை (உணவை விட்டும்) திருப்பும் ஒரு விடயம் (மரணம்) நடந்திருக்கிறது’‘‘‘ (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா, தாரகுத்னி. பைஹகி, அஹ்மத்)
இந்த ஹதீஸிலே நாம் கோடிட்டுக்காட்டியுள்ள ‘‘ ھم ‘‘ என்ற வார்த்தை ஆண்பாலைக் குறிகக் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இதனால் ஜஃபரின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்க நபியவர்கள் சொல்லவில்லை. ஆண்களுக்கு மாத்திரமே உணவு கொடுங்கள் என்று சொன்னார்கள் என்று யாரும் சொல்வதில்லை, அல்லது ஜஃபரின் குடும்பத்தில் பெண்கள் இல்லை ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். அதனாலேயே நபியவர்கள் ‘‘ ھم ‘‘ என்று ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தினார்கள் என்றும் எவரும் யோசிப்பதில்லை.
எனவே ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தும்போது பெண்களும் அதில் நுழைந்து கொள்வார்கள். இது ஸஹாபாக்களிடமும், மற்ற எல்லோரிடமும் பிரபல்யம் அடைந்திருந்த ஒரு விடயமாகும். இதனாலேயே நபியவர்களும் அவ்வாறு ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
இதுபோலவே அத்தியாயம் அஹ்ஸாபின் வசனத்தையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
03) நாம் ஆரம்பத்தில் அஹ்லுல் பைத்தினர் என்றால் யார்? என்பது பற்றி தெளிவுபடுத்தும் போது, மனைவியரும் அஹ்லுல் பைத்தில் நுழைவார்கள். ஒரு வகையில் அவர்கள்தான் அஹ்லுல் பைத்தின் பிரதான அங்கங்கள் என்பதை தெளிவாக விளக்கினோம். அதுவும் இந்த வசனத்தை விளக்குவதாக உள்ளது.
அதுபோல் அல்லாஹ் இப்றாஹீம்(அலை) அவர்களின் அஹ்லுல்பைத்தில் அவரின் மனைவி ஓர் அங்கம் என்று குறிப்பிடுகிறான். மூஸா (அலை) அவர்களின் மனைவி அவரின் அஹ்லுல் பைத்தில் ஓர் அங்கம் என்று குறிப்பிடுகிறான். இது மாத்திரமல்லாமல் இந்த உலகத்தில் பிறக்கும் எல்லோருடைய மனைவியும் அவருடைய குடும்பத்தின் பிரதான பகுதி என்பது எல்லோரும் அறிந்த விடயம். இவ்வாறிருக்க சங்கைக்குரிய நபியவர்களின் மனைவியரை அவரின் குடும்பத்திலிருந்து எவ்வாறு வெளியேற்றமுடியும்.!!
04) அல்-அஹ்ஸாப் அத்தியாயத்தில் வரும் அஹ்லுல் பைத் பற்றிய வசனத்திற்கு முன்னாலும் பின்னாலும் வரும் ஏராளமான வசனங்கள் நபியவர்களின் மனைவியரைப் பற்றியே பேசுகிறது இதன் மூலமும் நாம் அஹ்லுல் பைத் என்பதன் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளமுடியும். அல்குர்ஆனை விளக்கும்போது குறித்த வசனத்திற்கு முன், பின் உள்ள வசனங்கள் கவனத்தில் கொள்ளப்படும். பொதுவாக ஒருவரின் பேச்சை விளங்க அவர் முன்னால் பேசியதும், பின்னால் சொன்னதும் தேவைப்படுகிறது. இல்லாதபோது பெரும்பாலும் பெறப்படும் விளக்கம் தவறானதாக அமைந்துவிடும்.
05) அஹ்ஸாப் அத்தியாயத்தில வரும் வசனத்தில் ‘‘அஹ்லுல் பைத்’‘ என்பதை குறித்து ‘‘كم‘‘ என்ற ஆண்பாலைக்குறிக்கும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் நபியவர்களின் மனைவியர் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று பிரச்சாரம் செய்யும் ஷீஆக்கள் பாத்திமா. அவர்களை அந்த அஹ்லுல் பைத்தின் அங்கமாகவும், அந்த வசனம் அவரை உள்ளடக்கும் என்றும் குறிப்பிடுகின்றனர். இது எவ்வாறு அவர்களுக்குச் சாத்தியமானது? பாத்திமா . ஆண் தான் ஆனால் பெண்ணின் தோற்றத்தில் இருக்கிறார் என்று இவர்கள் இதற்கு பதில் சொல்வார்கள் போலும். எனவே இத்தகைய விடயங்களிலிருந்து ஷீஆக்களின் விமர்சனங்களும் விவாதங்களும் உள்நோக்கம் கொண்டவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
உண்மையில் பாதிமா . உள்ளிட்ட ஏனையவர்கள் நபியவர்களின் போர்வை ஹதீஸின் மூலம் அஹ்லுல் பைத்தில் நுழைகின்றனர். அவரின் மனைவியர்களோ அஹ்ஸாபின் வசனத்தின் படியும் ஏனைய நாம் குறிப்பிட்ட ஆதாரங்களின்படியும் அஹ்லுல் பைத்தில் நுழைகின்றனர் என்றே நாம் குறிப்பிடுகிறோம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….

thanks ... http://www.jaqh.info