"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

11/18/2014

அஹ்லுல் பைத் என்போர் யார்?

எந்த ஒரு வாசகத்தையும் மொழியியல் ரீதியில் ஆய்வு செய்வதற்கு அறிஞர்கள் மொழித்துறை சார்ந்த அறிஞர்களையும் அவர்களின் நூல்களையுமே அணுகுவர். “அஹ்லுல் பைத்” எனும் இந்த வார்த்தை அரபு வார்த்தையாக இருந்தாலும் இஸ்லாமிய வரலாற்றோடு மிகுந்த தொடர்புடையதாகவும் பெரும் விளைவுகளுக்கு காரணமானதாகவுமிருக்கிறது. அத்தோடு நபியவர்களுடன் இது தொடர்புபடுத்தப்பட்டு புதிய சிக்கல்களும் உருவாக்கப்படுகின்றன எனவே அதை இஸ்லாமிய வழக்கில் ஆய்வு செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது. அதாவது அல்-குர்ஆன், அஸ்ஸூன்னாவில் என்ன கருத்தினடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யவேண்டும். எனவே இந்த வாசகத்தின் சரியான அர்த்தத்தை சந்தேகமற அறிந்துகொள்வதற்கு பின்வரும் 04 முறைகளில் ஆய்வு செய்வோம்.

01) மொழி

02) வழக்கு

03) அல்-குர்ஆன்

04) அஸ்ஸூன்னா

மொழி:
அரபு மொழியில் இந்த வாசகம் என்ன கருத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் ஆய்வு செய்தால் பின்வரும் விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஷஷஅஹ்லுல் பைத்|| எனும் அரபுப்பதம் “அஹ்ல்”, “பைத்” எனும் இரண்டு சொற்களின் பிணைப்பால் உருவானதாகும்.

“அஹ்ல்” என்றால் சொந்தக்காரன் என்பது பொருள் இது ஒரு பொதுவான சொல் இது எதனோடு இணைக்கப்படுகிறதோ அதனோடு இணைந்து கருத்தைக் கொடுக்கும். உதாரணமாக “அஹ்லுல் அம்ர்” என்றால் அதிகாரத்தின் சொந்தக்காரன் அதாவது ஆட்சியாளன் எனும் கருத்தைக்கொடுக்கும். “அஹ்லுல் ஜன்னாஹ்” என்றால் சுவர்க்க வாசிகள் என்றும் “அஹ்லுந்நார்” என்றால் நரகவாதிகள் என்றும் பொருள் தரும். “அஹ்லுல் மத்ஹப்” என்றால் மத்ஹபின் சொந்தக்காரர்கள் அதாவது குறித்த மத்ஹபின் படி நடப்பவர்கள் “அஹ்லுர்ரஜூல்” ஒரு மனிதனின் சொந்தக்காரர்கள் அதாவது அவனின் குடும்பம்.

“அஹல” என்றால் திருமணம் செய்தான் என்ற அர்த்தமும் உள்ளது “அஹ்ஹலகல்லாஹ்” என்றால் அல்லாஹ் உனக்கு திருமணம் முடித்ததுத்தருவானாக உன்னை குடும்பஸ்தனாக மாற்றுவானாக! என்ற பொருள்படும் பிரார்த்தனையாகும். “பைத்” என்றால் வீடு எனவே “அஹ்லுல் பைத்” என்றால் வீட்டின் சொந்தக்காரர்கள் வீட்டார், வீட்டில் வசித்துவருவோர் என்பதாகும் “அஹ்லு பைதிர்ரஜூலி” என்றால் மனிதன் ஒருவனின் வீட்டார் என்பதாகும். ஒரு மனிதரின் வீட்டார் எனும் போது அதில் பிரதானமான பாத்திரத்தை ஏற்பது அவனது மனைவியாகும். ஒருவரின் குடும்பம் என்றாலே அதில் பிரதானமாக இருப்பது அவனின் மனைவியேயாகும். “அஹ்லுர்ரஜூல்” என்றும் “அஹ்லுல்பைத்” என்றும் ஒரு மனிதரைக் குறிப்பிட்டு சொல்லப்படுமாக இருந்தால் அது அவனின் மனைவியையே பிரதானமாக குறிக்கும் மக்கள் இருந்தால் மனைவியோடு சேர்ந்து கொள்வார்கள், இல்லையென்றால் பிரச்சினை கிடையாது என்பதை மொழித்துறை வல்லுனர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் பின்வருமாறு

ஸூபைதி
அல்ஹலபி
இப்னு மன்ழூர்
ஜவ்ஹரி
ஷமஹ்ஷரி

வழக்காறு:
பொதுவாக “அஹ்லுல்பைத்” எனும் இந்த வார்த்தையை எவ்வாறு பரிபாசையில் பயன்படுத்துகிறார்கள். என்று பார்த்தால் மனைவி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகின்றனர். “அவன் தன் வீட்டாரோடு வந்தான்” என்று சொன்னால் நாங்கள் அவனது மனைவியோடு அவன் வந்திருக்கிறான் என்று விளங்குவோம். “தன் குடும்பத்தோடு வந்தான்’ என்று சொன்னால் தன் மனைவியோடும் பிள்ளைகளோடும் வந்திருக்கிறான் என்றே விளங்குவோம். ஒருவன் தன் மனைவியை விட்டுவிட்டு பிள்ளைகளோடு மாத்திரம் வந்தால் தன் குடும்ப சகிதம் வந்தான் என்று பயன்படுத்துவது மிகவும் குறைவு, தன் பிள்ளைகளோடு வந்தான் என்றே பெரும்பாலும் சொல்வோம்.

திருமணம் முடித்து பிள்ளை இல்லை என்றாலும் தன் மனைவியோடு வந்தால் “குடும்பத்துடன் வந்திருக்கிறார்” என்று சொல்வோம். எனவே குடும்பம் என்ற வார்த்தை பரிபாசையில் மக்களுக்கு மத்தியில் மனைவியைக் குறிக்கவே பெரும்பாலும் அரபியிலும் தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவாகின்றது. குடும்பம் என்ற வார்த்தை பிள்ளைகளைக் குறிக்க மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் அவருக்கு மொழி அறிவோ, மக்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தும் முறையோ தெரியவில்லை என்றே நாம் புரிந்து கொள்வோம்.
அல்-குர்ஆன்:

அல் குர்ஆனில் அல்லாஹ் “அஹ்ல்” என்ற வார்த்தையை ஏராளமான இடங்களில் பயன்படுத்துகின்றான். இந்த வார்த்தை அல்-குர்ஆனில் உயர்திணையோடு இணைக்கப்படும் இடங்களெல்லாம் பெரும்பாலும் மனைவி, வீட்டார் என்ற கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

“அல் கஸஸ்” எனும் அத்தியாயத்தில் மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைச்சொல்லும் போது 12 வது வசனத்தில் மூஸா (அலை) அவர்களை அவரது தாய் பெட்டியில் வைத்து நதியில் விடுகிறார் பிர்அவ்ன் அந்தக்குழந்தையை தத்தெடுக்கிறான். அதற்கு பால் கொடுக்கவென ஒரு பெண்ணை தேடுகிறார்கள். எல்லாப் பெண்களிடமும் பால் குடிக்க அந்தப்பிள்ளை மறுக்கிறது, அப்போது அந்தக்குழந்தையை பின் தொடர்ந்த அதன் சகோதரி “அந்தக்குழந்தையை நம்பிக்கையாக பராமரிக்கக்கூடிய ஒரு வீட்டாரை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ” என்று கேட்டார் இங்கே “வீட்டார்” என்பதற்கு البيت أھل  என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மூஸா (அலை) அவர்களின் தாயையே நாடப்படுகின்றது. எனவே இங்கு ஒரு பெண்ணைக் குறிக்க “அஹ்லுல் பைத்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதே அத்தியாயத்தின் 29வது வசனத்தில் “மூஸா (அலை) அவர்கள் குறித்த தவணையை முடித்த பின்பு தன் குடும்பத்துடன் சென்றார்” என்று வந்துள்ளது இதில் குடும்பம் என்பதற்கு “அஹ்ல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூஸாவுடன் அவரது குடும்பம் என்று அவரது மனைவியைத்தவிர வேறு எவரும் அவருடன் இருக்கவில்லை. எனவே இங்கே மனைவியைக் குறிக்க “அஹ்ல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே 29ம் வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் தூர்ஸீனாவிற்கு பக்கத்தில் ஒளியைக் கண்டபோது ‘தன் குடும்பத்திற்கு (இங்கே) நில்லுங்கள்” என்று சொன்னார் என்றுள்ளது. இங்கும் அவரது மனைவியைக்குறிக்கும் குடும்பம் என்ற அடைமொழிக்கு ‘அஹ்ல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹூத் எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றைச் சொல்கிறான் அவரின் மனைவி நீண்ட காலமாக பிள்ளை இல்லாமல் இருக்கிறார். அல்லாஹ் வானவர்களை அனுப்பி அவர்களுக்குப் பிள்ளை கிடைக்க இருக்கும் சந்தோசமான செய்தியைச் சொல்கிறான் அப்போது, அவரின் மனைவி “எனக்குப் பிடித்த கேடே எனக்கு பிள்ளை பிறப்பதா? நானோ இயலாத மூதாட்டியாக இருக்கிறேன். என்னுடைய கணவரும் வயோதிபராக உள்ளார். நிச்சயமாக இது ஆச்சரியமான ஒரு விடயமே! என்கிறார். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் விவகாரத்தில் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? அஹ்லுல் பைத்தினரே உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அபிவிருத்தியும் உண்டாவதாக. நிச்சயமாக அவன் புகழுக்குரியவனும் மிகுந்த கொடையாளியுமாவான்” என்று கூறினார்கள். (72,73)

இங்கே, வானவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவிக்கு பதில் சொல்லும்போதே இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். அவரின் மனைவிக்கு பதிலளித்துவிட்டு அவர்களுக்காக பிரார்த்தனையும் செய்கின்றனர். பிரார்த்தனையின் போது “அஹ்லுல் பைத்” என்ற வாசகத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இங்கு இப்றாஹீம் (அலை) அவர்களும் அவரின் மனைவியையும் தவிர வேறு எவரும் இல்லாத வேளையில் அவரின் மனைவிக்கு பதில் சொல்லும் போது அவருக்காக பிரார்த்தித்த வேளை அவரைக்குறிக்க “அஹ்லுல் பைத்” எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. யூஸூப் என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் யூஸூப் (அலை) அவர்களின் வரலாற்றைக்குறிப்பிடுகிறான். அதிலே யூஸூப் (அலை) அவர்களை ஒரு அரசன் வளர்த்துவருகிறான்.

அவர் கட்டிளம் பருவத்தை அடைகிறார். மிகப்பெரும் பேரழகனாக திகழ்கிறார். அவரை வளர்த்த அரசனின் மனைவி அவர் மீது மோகம் கொள்கிறாள். எப்படியாவது அவரை அடைந்துவிடவேண்டும் என்பதற்காக தன் கதவை தாழிட்டுவிட்டு அவரை தப்பான வழிக்கு அழைக்கிறாள். ஆனால் யூஸூபோ அதற்கு மறுக்கிறார். அவள் வலுக்கட்டாயமாக இழுக்கிறாள் யூஸூப் இதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடுகிறார். பின்னால் அரசனின் மனைவி துரத்துகிறாள். இருவரும் கதவை அடைகிறார்கள் அரசனும் அந்த வேளையில் கதவின் பக்கம் வருகிறான் மூவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது, அரசனின் மனைவி அரசரை பார்த்து “உன்னுடைய அஹ்லுடன்” தப்பாக நடந்து கொள்ள நினைப்பவர்களுக்கு சிறை செய்தல் அல்லது கொடூரமாக தண்டித்தல் என்பதைத்தவிர வேறு என்ன கூலி இருக்கிறது” என்கிறாள்.

இங்கே “அஹ்ல்” என்ற வார்த்தை மனைவி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது அவர்களுக்குப் பிள்ளை இல்லை இதனால்தான் யூஸூபை வளர்த்து வந்தனர்.

பின்வரும் வசனங்கள் யாவும் லூத் (அலை) அவர்களின் வரலாற்றைப்பற்றிப்பேசுகின்றன. அதிலும் குறிப்பாக “அஹ்லுல்பைத்” என்ற வார்த்தைக்குள் மனைவியே பிரதான பாத்திரம் என்பதைச் சொல்கின்றது.
அஃராப்:23, அந்நம்ல்:57, அஷ்ஷூஅரா 170,171 “நாங்கள் அவரையும் அவரின் குடும்பத்தையும் (அஹ்லுல் பைத்தையும்) காப்பாற்றினோம் ஆனால் அவரின் மனைவியைத்தவிர” அன்-கபூத்:32,33

இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கொண்டு வந்த வானவர்கள் தாங்கள் ஒரு பிரதேசத்தை அழிப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்டுளோம் என்ற செய்தியை இப்றாஹீம் நபியிடம் சொல்கின்றனர். அப்போது இப்றாஹீம் நபியவர்கள். “அந்தக்கிராமத்திலே லூத் (அலை) அவர்கள் இருக்கின்றார்கள்’ என்றார்கள் (அதற்கு வானவர்கள்) அதில் உள்ளவர்கள் பற்றி நாம் அறிவோம். அவரையும் அவரின் குடும்பத்தையும் (அஹ்லையும்) நாம் காப்பாற்றுவோம் ஆனால் அவரின் மனைவியைத்தவிர என்று கூறினர்.

லூத் நபியிடம் வானவர்கள் வருகிறார்கள் நீ கவலைப்படாதே அஞ்சாதே நாம் உன்னையும் உனது குடும்பத்தையும் (அஹ்லையும்) காப்பாற்றுவோம். ஆனால் உன் மனைவியைத்தவிர (அவளை நாம் காப்பாற்றமாட்டோம்) என்று கூறினார்கள். லூத் (அலை) அவர்களின் சமூகத்தாரை அழிக்க மலக்குகள் வருகிறார்கள் அந்த சமூகத்தார் மலக்குகளோடும் தப்பாக நடக்க முயற்சிக்கின்றனர். லூத் (அலை) அவர்கள் தன் பெண் மக்களை (மனம் செய்யக்) கொடுத்து என் விருந்தாளிகளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள் ஆனால் அவரின் கூட்டம் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. லூத் (அலை) அவர்கள் செய்வதறியாது திகைக்கிறார் அப்போது வந்த வானவர்கள் சொன்னார்கள்: “லூதே நாம் உமது இரட்சகனின் தூதுவர்கள் அவர்கள் ஒருபோதும் உம்மை வந்தடையவே மாட்டார்கள் நீர் உமது குடும்பத்தோடு ( أھل –அஹ்லோடு) இரவில் சென்றுவிடு. உமது அஹ்லில் உனது மனைவியரைத்தவிர வேறு எவரையும் திரும்பிப்பார்க்கவேண்டாம் ஏனெனில் அவர்களுக்கு என்ன நடக்குமோ அது அவளையும் பீடிக்கும் என்றனர்.” (ஹூத் 81)

அஸ்ஸாப்பாத்: 133-135 இந்த அத்தியாயத்தில் வரும் வசனங்களும் லூத் (அலை) அவர்களின் குடும்பத்தையும் அவரையும் பாதுகாத்ததாகவும் அவரின் மனைவியைப்பாதுகாக்கமாட்டோம் என்றும் மலக்குகள் குறிப்பிடுகின்றனர். அதில் குடும்பம் எபதற்கு “அஹ்ல்” என்ற வார்த்தையை அல்லாபயன்படுத்துகின்றான். மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களிளெல்லாம் குடும்பம் என்பதற்கு அல்லா ஹ் ”அஹ்ல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான்; அதுபோலவே “அஹ்ல்” என்பதில் தவிர்க்கமுடியாத அங்கம் மனைவி என்பதையும் தெளிவாக உணர்த்துகிறான். குடும்பத்தில் பிரதானமான ஒருவராக மனைவி இல்லாவிட்டால் குடும்பத்தைக்காப்பாற்றுவோம் என்று சொல்லிவிட்டு உன் மனைவியைக்காப்பாற்ற மாட்டோம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. குடும்பத்தின் தலையாய பாத்திரங்களில் ஒன்றாக மனைவி இருப்பதனால்தான் “ஆனால் உன் மனைவியைத்தவிர” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

அஸ்ஸூன்னா:
ஸூன்னாவிலும் “அஹ்லுல் பைத்” எனும் வார்த்தை மனைவியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை ஆயிஷா (ரழி) . அவர்களின் அறையில் நுழைகிறார்கள் அப்போது அஹ்லுல் பைத்தினரே அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லிக்கொண்டு நுழைந்தார்கள். (புஹாரி 4793)

ஆயிஷா (ரழி). அவர்கள் மட்டும் வசிக்கும் அறையில் நுழையும் போது அஹ்லுல் பைத்தினரே என்று அழைத்தது ஆயிஷா (ரழி) . அவர்களைக்குறிக்கவே என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் மேலே குறிப்பிட்ட நான்கு விதமான ஆய்வுகளின் அடிப்படையிலும் பகுத்தறிவின் படியும் “அஹ்லுல்பைத்” என்ற வார்த்தை ஒரு மனிதனின் குடும்பத்தைக்குறிக்க பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதன் தவிர்க்க முடியாத அங்கமே மனைவி என்பதையும் கண்டோம்.

அஹ்லுல் பைத் என்பது பொதுவான ஒரு வார்த்தையாக இருந்தபோதும் வழிகெட்ட சில இயக்கங்களின் தாக்கத்தினால் அது நபியவர்களின் குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாகவே பெரும்பாலும் அறிமுகமாகியுள்ளது. அத்தோடு இதில் பல பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. நபியவர்களின் குடும்பம் எனும் போது முதலில் நுழைபவர்கள் அவரின் மனைவியர் என்பதை நாம் மேலே குறிப்பிட்ட ஆய்வு தெளிவுபடுத்துகிறது. அதுபோல் அஹ்ஸாப் எனும் அத்தியாயத்தில் வரும் பலவசனங்களும் ஆலுஇம்றான் எனும் அத்தியாயத்தின் 121ஆவது வசனமும் சுட்டிக்காட்டுகிறது.

(நபியே!) நீர் உம் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டுச்சென்று விசுவாசங் கொண்டவர்களை (உஹது யுத்த களத்தில்) போருக்காக (அவரவருக்குரிய) இடங்களில் அமர்த்தி (ஒழுங்குபடுத்தி)க் கொண்டிருந்ததை (நினைத்துப்பார்ப்பீராக! யாவற்றையும்) அல்லாஹ் செவியுறுகிறவன் நன்கறிபவன் (அல்-குர்ஆன் 3:121)

இங்கே குடும்பம் என்பதற்கு அஹ்ல் என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். நபியவர்கள் உஹதுக்களத்திற்கு மதீனாவில் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியாகிச்செல்லும் போது அவர்களது மனைவியர்கள் மட்டுமே நபியவர்களின் வீட்டில் இருந்தார்கள். அவரது பிள்ளைகளில் பாதிமா (ரழி) அவர்களைத்தவிர எல்லோருமே மரணித்திருந்தனர். பாதிமா (ரழி) அவர்கள் கூட அலி (ரழி). அவர்களை மணந்துகொண்டு தனியாக இருந்தார்கள். எனவே இங்கே ‘‘அஹ்ல்’‘ என்ற வார்த்தை நபியவர்களின் குடும்பத்தில் மனைவியரைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல் ஸைத் பின் அர்க்கம் . அவர்கள் அறிவிக்கும் செய்தியில், அவரிடம் நபியவர்களின் மனைவியர் அவரின் குடும்பமா? என்று கேட்கப்பட்ட போது, ‘‘‘‘நபியவர்களின் மனைவியர் அவரின் குடும்பத்தினர்கள்தான் என்றாலும் ஸகாத் பொருட்களைப் பெற்றுக் கொள்வது ஹராமாக்கப்பட்ட நபியவர்களின் குடும்பம் எனும் போது, அவரின் குடும்பம், ஜஃபரின் குடும்பம், உகைலாவின் குடும்பம், அப்பாஸின் குடும்பம் என்று எல்லோரும் அடங்குவர்’‘ (முஸ்லிம் 2408)

நபியவர்கள் ஒரு தடவை அலி (ரழி) ., பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) போன்றோரை ஒரு போர்வையினால் மூடிவிட்டு இறைவா! இது எனது குடும்பத்தினர் அவர்களை நீ தூய்மைப்படுத்து என்று பிரார்த்தித்தார்கள். இந்தச் செய்தியை ஆயிஷா (ரழி). அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 2424)

அப்துல் முத்தலிப் பின் றபீஆ (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீளமான செய்தி, ஹாஷிம் கிளையார் அனைவருமே நபியவர்களின் குடும்பத்தினர் என்பதையும், அவர்கள் அனைவருமே ஸகாத் பெறத் தடைசெய்யப்பட்டவர்கள் என்பதையும் உணர்த்துகின்றது. ‘‘‘‘ரபீஆ., அப்பாஸ் (ரழி) அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த இரு சிறுவர்களையும் (அப்துல் முத்தலிப் பின் ரபீஆ (ரழி) பழ்ழு பின் அப்பாஸ்) நாம் நபியவர்களிடம் அனுப்பினால் அவர்கள் இருவரும் நபியவர்களிடம் பேசி இருவருக்கும் நபியவர்கள் ஸகாத் நிதியை சேகரிக்கும் பொறுப்பை வழங்கினால், மனிதர்கள் கொடுப்பதை அவர்கள் கொடுத்து (மற்றவர்கள் இதை) சேகரிப்பதால் எதை அடைந்து கொள்வர்களோ? அதை பெற்றுக்கொள்வார்களே என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அலி (ரழி) . அவர்கள் அவ்வழியாக வந்தார்கள.; அவர்கள் இருவரிடமும் நின்றார்கள் பின்பு இருவரும் விடயத்தை அலி (ரழி) . அவர்களுக்குச் சொன்னார்கள். அலி (ரழி). அவர்கள்ள நீங்கள் இவ்வாறு செய்யாதீர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபியவர்கள் உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார் என்றார்கள்.

அப்போது ரபீஆ (ரழி) அவர்கள் அவரை எதிர்த்தார்கள்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் மீது கொண்ட பொறாமையினால்தான் இதை சொல்கிறாய். நீ நபியவர்களின் மருமகனானாய், இறைவன் மீது ஆணையாக நாம் அதற்காக உன் மீது பொறாமைப்படவில்லை’ என்று சொன்னார்கள். அலி (ரழி) . அவர்கள் (அப்படியென்றால்) அவர்கள் இருவரையும் அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிவிட்டு ஒருக்கனைத்து சாய்ந்து கொண்டார்கள்.

அப்துல்முத்தலிபும் பழ்ழும் சொல்கிறார்கள்: நபியவர்கள் லுஹர் தொழுகையை முடித்த போது இருவரும் நபியவர்களின் அறையின் கதவில் அருகில் சென்று நின்று கொண்டோம். நபியவர்கள் எம்மிடம் வந்து எம் காதுகளைப் பிடிக்கும் வரை நாம் நின்றோம் பின்பு எதை மறைத்து வைத்துள்ளீர்கள் (எதைச் சொல்ல நினைக்கிறீர்கள்) சொல்லுங்கள் என்றார்கள். பின்பு அன்றைய தினம் வழக்கம்போல் நபியவர்கள் செல்லும் அவரின் மனைவி ஸைனப் பின்த் ஜஹ்ஸிடம் நுழைந்தார்கள், நாமும் நுழைந்தோம். (அப்துல் முத்தலிப் பின் ரபீஆ (ரழி) அவர்கள் சொல்கிறார்கள்: நாம் இருவரும் மற்றவர் பேச வேண்டும் என்று நினைத்தோம் பின்பு எங்களில் ஒருவர் பேசினார். அல்லாஹ்வின் தூதர் அவர்களே மனிதர்களில் அதிகம் நன்மை செய்பவர் நீங்கள், மனிதர்களில் தங்கள் குடும்ப உறவுகளை அதிகம் சேர்த்து வாழ்பவர் நீங்கள். நாமோ பருவ வயதை அடைந்து விட்டோம். ஸகாத் நிதியை சேகரிக்கும் பொறுப்புக்களில் எங்களை நீங்கள் நியமிக்க வேண்டும் என்று பேச வந்துள்ளோம். மனிதர்கள் அவைகளை சேகரித்து உங்களிடம் ஒப்படைப்பதைப்போல நாமும் ஒப்படைப்போம். அப்போது இதற்காக மக்கள் அடைந்து கொள்ளும் பங்கைப்போல நாமும் அடைந்து கொள்வோம் என்றனர்.

அப்துல் முத்தலிப் சொல்கிறார்: நாம் அவரிடம் (திரும்பவும்) பேசுவோமா? என்று நினைக்குமளவு நபியவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவரின் மனைவி ஸைனப் . அவர்கள் பேசவேண்டாம் என்று திரைக்குப்பின்னால் இருந்து சுட்டிக்காட்டினார்கள். பின்பு நபியவர்கள் சொன்னார்கள்: ஸகாத் பொருட்கள் என்பது முஹம்மதின் குடும்பத்தினருக்கு ஆகுமானதல்ல. நிச்சயமாக அவை மனிதர்களின் அழுக்குகள்.’‘‘‘ (முஸ்லிம் 1072)

(ரபீஆ பின் ஹாரித் (ரழி) அவர்கள் நபியவர்களின் மாமா ஹாஷிமின் குடும்பத்தைச்சேர்ந்தவர். எனவே பனூஹாஷிம் கிளையார் அனைவரும் அஹ்லுல் பைத்தினர் என்பது தெளிவு) மேலே நாம் கூறியவற்றைச் சுருக்கமாக, பின்வருவோர் நபிவர்களின் குடும்பத்தினர் என்று சொல்லலாம்.

நபியவர்களின் மனைவியர்கள் அலி (ரழி)., பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹூஸைன் (ரழி) அலி (ரழி) யின் குடும்பம், ஜஃபரின் குடும்பம், உகைலின் குடும்பம், அப்பாஸின் குடும்பம். பனூ ஹாஷிம் கிளையார்.
                                                                  
இதன் தொடர்ச்சியை காண இங்கே கிளிக் செய்யவும்

thanks.... http://www.jaqh.info