/// இறந்து போனவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள் என்றால் நபி(ஸல்) அவர்கள்
எப்படி பதுருப்போர் முடிவில் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்ட காபிர்கலின்
சடலங்கலுடன் பேசினார்களே...... ////
இறந்தவர்கள் எதையும் செவியுறமாட்டார்கள், அவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கைக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதற்கு பலதரப்பட்ட சான்றுகளைக் முன்னைய பதிவுகளில் கண்டோம். இந்தத் தொடரில் இறந்தவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறிவார்கள் என்று கூறிவரும் சாரார்கள் சமூகத்தில் முன்வைத்து வரும் ஆதாரங்களையும் அவற்றிற்கான சரியான விளக்கங்களையும் ஆய்வு செய்வோம்
o வழிகேடர்களின் முதலாவது ஆதாரம்:
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை' என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான். அறிவிப்பவர் அபூதல்ஹா(ரழி) நூல் புஹாரீ:3976 Volume :4 Book :64
மேற்குறித்த ஹதீஸிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்:
இறந்து போனவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள் என்றால் நபி(ஸல்) அவர்கள் எப்படி இறந்தவர்களுடன் பேசியிருப்பார்கள்?
உமர்(ரழி) அவர்கள் அதை ஆச்சரியமாக கேட்ட சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் கேட்கிறார்கள் என தெட்டத் தெளிவாகக் கூறுகிறார்கள்.
இதிலிருந்து இறந்தவர்கள் நாம் பேசுவதை கேட்பார்கள் என இவர்கள் வாதிடுகிறார்கள்.
எதுவுமறியாத பொதுமக்கள் இவர்களின் வாதங்கள் சரியானவை என எண்ணி ஏமாந்து விடுகின்றனர்.
முன்னைய பதிவுகளில் இறந்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்பதற்குண்டான ஏகப்பட்ட ஆதாரங்களை சுட்டிக்காட்டினோம். அந்த ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில்தான் இந்த ஆதாரத்தை நாம் புரிய வேண்டும். இதை ஏற்றுக் கொண்டு அந்த ஆதாரங்களை புறக்கணிப்பதோ அல்லது அவைகளை ஏற்றுக் கொண்டு இந்த ஆதாரத்தை புறக்கணிப்பதோ நியாயமானதாக ஒரு போதும் இருக்காது. சரி இவர்கள் முன்வைக்கும் ஆதாரத்திற்கான தக்க மறுப்பை நோக்குவோம்.
o உமர்(ரழி) அவர்களின் நியாயமான கேள்வி
பத்ரு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுடன் பேசிய நிகழ்வை கண்ட உமர்(ரழி) அவர்கள் ஆச்சரியப்பட்டு எப்படி இறந்து போன சடலங்களுடன் தாங்கள் பேசுகிறீர்கள்? எனக் கேட்கிறார்கள். இவ்வாறு உமர்(ரழி) அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்டதைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் உமரே! அவ்வாறு கூறாதீர்! இறந்தவர்கள் கேட்பார்கள் என்று பொதுவாக அவருக்கு கூறவில்லை.
மாறாக 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை' என்று மட்டும்தான் கூறுகிறார்கள். அதாவது உமர்(ரழி) அவர்களின் கேள்வியை நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. உமர்(ரழி) அவர்களின் கேள்வி பிழை என்றால் அவ்விடத்திலேயே நபி(ஸல்) அவர்கள் ஆட்சேபித்திருப்பார்கள். அதை ஆட்சேபிக்காததிலிருந்து இறந்தவர்கள் எதையும் செவியேற்கமாட்டார்கள் என்ற நிலைப்பாட்டில்தான் ஸஹாபாக்கள் இருந்துள்ளனர். திடீரென நபி(ஸல்) அவர்கள் பத்ரில் கொல்லப்பட்டவர்களுடன் பேசியது அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணியுள்ளது என்பதை விளங்கலாம்.
o கொல்லப்பட்டவர்கள் கேட்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை
சில அறிவிப்புக்களில் கொல்லப்பட்டவர்கள் நன்கு கேட்கிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இது பிழையான தகவலாகும். இதை ஆயிஷா(ரழி) அவர்களே தெளிவுபடுத்துகிறார்கள்.
'குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரலி) கூறினார் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா(ரலி) 'நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை! 'இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்று கூறினார்கள். (மேலும்) ஆயிஷா(ரலி) அறிவித்தார். இது எப்படியிருக் கிறதென்றால் '(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு அவர்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்ட போது) 'நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால் 'நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அறிகிறார்கள் என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்' என்று நபியவர்கள் சொல்லவில்லை.) பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தம் கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா(ரலி) (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (திருக்குர்ஆன் 27:80) (நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்யமுடியாது. (திருக்குர்ஆன் 35:22)
'நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)' என ஆயிஷா(ரலி) (விளக்கம்) கூறினார்கள். அறிவிப்பவர் உர்வா ஆதாரம் புஹாரீ 3978
மேற்குறித்த செய்தியைப் படிக்கும் போது இறந்தவர்கள் கேட்பார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் தெளிவாகவே மறுப்பதுடன் தனது கருத்திற்கு சான்றாக அல்குர்அன் வசனங்களையும் காண்பிக்கிறார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுவது நன்கு தெளிவாக உள்ளது. அதில் எவ்வித குழப்பமும் கிடையாது. தக்க ஆதாரத்தையும் காண்பிக்கிறார்கள். எனவே இவர்களின் கூற்றிற்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் கூறிய தகவலின் பிரகாரம் ஒரு வாதத்திற்கு இறந்தவர்கள் கேட்பார்கள் என வைத்துக் கொண்டாலும் அதை பொதுவானதாக விளங்க வாய்ப்புக் கிடையாது. ஏனெனில் புஹாரியில் 3980 வது இலக்கத்தில் இடம் பெறும் செய்தியில் 'தற்போது கேட்கிறார்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அறிவிக்கிறார்.
எனவே அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் அல்லாஹ் அவர்களை உயிர்ப்பித்து அவர்களை கேட்க வைத்தான் என முரண்பாடின்றி விளங்க முடியும். எது எப்படி இருந்தாலும் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்ட காபிர்களுடன் நபி(ஸல்) அவர்கள் பேசிய இந்நிகழ்வை இரண்டு விதங்களில் புரியலாம்.
ஒன்று:
நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் 'தற்போது செவியேற்பார்கள்' எனக் கூறினார்கள். இது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பாகும். இதிலிருந்து இதல்லாத சந்தர்ப்பத்தில் இறந்தவர்கள் செவியேற்பார்கள் எனப் புரிவது தவறாகும். குறித்த சந்தர்ப்பத்துடன் மாத்திரம் தொடர்புபடும் ஒரு நிகழ்வை பொது சந்தர்ப்பமாக ஆக்குவது தவறான முடிவின் வெளிப்பாடாகும்.
இரண்டாவது:
இறந்தவர்கள் செவியேற்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக இறந்து கிடக்கும் இந்த இறைநிராகரிப்பாளர்கள் நான் சொன்னவைகளை இப்போது அறிகிறார்கள் என்றுதான் கூறினார்கள். இது ஆயிஷா(ரழி) அவர்களின் அறிவிப்பாகும். (பார்க்க:புஹாரி1371)
ஆயிஷா(ரழி) அவர்கள் தனது நிலைப்பாட்டிற்கு அல்குர்ஆன் வசனங்களை சான்றாக மேற்கோள்காட்டுவதுதான் ஏனையவர்களின் அறிவிப்பை விட நாம் ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பை இங்கு முதன்மைப்படுத்துவதற்கு அடிப்படைக் காரணமாகும். இறந்தவர்கள் எதையும் செவியேற்கமாட்டார்கள் என்பதற்கு முன்னைய பதிவுகளில் ஏகப்பட்ட சான்றுகளைத் தந்தோம். அதையும் கவனத்திற் கொண்டுதான் இதை நாம் புரிதல் வேண்டும். எனவே இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை முன்வைப்பது தவறான முடிவாகும் என்பதே எமது நிலைபாடாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும் ....................
thanks .. M.C.M ஸைனீ
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்