"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/03/2015

பலவீனமான செய்திகளை பயன்படுத்தலாமா?

பலவீனமான செய்திகளை பயன்படுத்தலாமா?

அமல்களின் சிறப்பு பற்றிய ஹதீஸ்களில் நெகிழுவுத் தன்மையைக் கடைப்பிடிக்கலாம் என ஹதீஸ்கலை அறிஞர்களும் சட்டக்கலை அறிஞர்களும் கருத்திதொருமை கொண்டுள்ளனர் என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது "றௌவ்ழா" மற்றும் "அல் இர்ஷாத் வத்தக்ரீப்" இன்னும் "அலத்கார்" ஆகிய நூல்களில் கூறியுள்ளார்கள்.
ஆனால் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுவது போன்ற கருத்தொற்றுமை யதார்த்தத்தில் கிடையாது.
காரனம் இது தொடர்பில் பின்வருமாறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
1.பலவீனமான ஹதீஸ்கள் அகீதாவிலோ அல்லது சட்டங்களிலோ அல்லது அமல்களின் சிறப்புகளிலோ ஆர்வமூட்டல் அச்சமூட்டல் விடயங்களிலோ எதிலுமே ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
இக்கருத்தை இமாம்களான புஹாரி (ரஹ்),முஸ்லிம் (ரஹ்),அபூ ஸகரிய்யா அந்நைஸாபூரி (ரஹ்),அபூ ஸுர் ஆ அர்ராஸி (ரஹ்),அபூ ஹாதம் அர்ராஸி (ரஹ்), இப்னு அபீ ஹாதிம் (ரஹ்), இப்னு ஹிப்பான் (ரஹ்), அபூ ஸுலைமான் அல்கத்தாபி (ரஹ்),இமாமுனா இப்னு ஹஸ்ம் (ரஹ்),இப்னுல் அறபி (ரஹ்),இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்),அஷ் ஷௌகானி (ரஹ்), ஜமாலுத்தீன் காஸிமி (ரஹ்), ஸித்தீக் ஹஸன் கான் (ரஹ்), அஹ்மத் ஷாகிர் (ரஹ்), அல் அல்பானி (ரஹ்), முக்பில் (ரஹ்) போன்ற ஹதீஸ்கலை ஜம்பவான்கள் வலியுறுத்துகின்றனர்.
2.பலவீனமான ஹதீஸ்களை அகீதாவிலோ அல்லது சட்டங்களிலோ செயற்படுத்த முடியாது.ஆனால் அமல்களின் சிறப்புகளிலும் ஆர்வமூட்டல் அச்சமூட்டல் விடயங்களிலும் நிபந்தனைகளுடன் செயற்படுத்தலாம்.
((இங்கே பொதுவாக செயற்படுத்தலாம் என இல்லாமல் நிபந்தனைகளுடன் எனக் கூறப்பட்டுள்ளதைக் கவனத்திற் கொள்ளவும்))
இக்கருத்தை இமாம்களான இப்னு ஹஜர் (ரஹ்),நவவி (ரஹ்),அல் இராகி (ரஹ்),இப்னு தகீக் அல் ஈத் (ரஹ்),இப்னு ஹஜர் அல் ஹைதமி (ரஹ்),இமாம் அஸ்ஸன்ஆனி (ரஹ்) ,ஷேக் பின் பாஸ் (ரஹ்), ஷேக் பௌஸான், ஷேக் அலி ஹஸன் அல்ஹலபி போன்ற அறிஞர் பெருமக்கள் கொண்டுள்ளனர்.

இனி பலவீனமான ஹதீஸ்களை அமல்களின் சிறப்புகளிலும் ஆர்வமூட்டல் அச்சமூட்டல் விடயங்களிலும் செயற்படுத்துவதாக இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் என்ன என்பதை சுருக்கமாக நோக்குவோம்.
1.கடும் பலவீனமாகவோ இட்டுக்கட்டப்பட்டதாகவோ இருக்கக் கூடாது.
2.ஏற்கனவே அல் குர் ஆன் மூலமாகவோ அல்லது பலமான ஹதீஸ்கள் மூலமாகவோ உறுதியாக இடம்பெற்ற ஒரு அமலின் சிறப்பைக் கூறுவதாக இருக்க வேண்டும்.
3.அது பலவீனமான செய்திதான் என அதை அமுல் படுத்துவவர் அறிந்திருக்க வேண்டும்.
இனி.. இவ்விரு கருத்துகள் தொடர்பிலும் எனது அவதானங்களை பதிவு செய்கிறேன்.
ஒரு விடயத்தில் கருத்து முரண்பாடு இருந்தால் அதுவும் சரிதான் இதுவும் சரிதான் என்றோ அதை விரும்புபவர் அதி எடுத்துக் கொள்ளட்டும் இதை விரும்புபவர் இதை எடுத்துக் கொள்ளட்டும் என்றோ எமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்வது தவறு.
மாற்றமாக இரு முரண்பட்ட கருத்துகளில் எது உன்மைக்கும் சத்தியத்திற்கும் நெருக்கமாக உள்ளது எது ஆதாரங்கள் அடிப்படையில் பலமானது எனத் தேடித் தெரிந்தே எமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நோக்கும் போது...
""பலவீனமான ஹதீஸ்கள் அகீதாவிலோ அல்லது சட்டங்களிலோ அல்லது அமல்களின் சிறப்புகளிலோ ஆர்வமூட்டல் அச்சமூட்டல் விடயங்களிலோ எதிலுமே ஆதாரமாகக் கொள்ளக் கூடாது."
என்ற நிலைப்பாடே சரியானதாகவும் யதார்த்தமான‌தாகவும் ஆதாரங்களால் பலப்படுத்தப்பட்ட‌தாகவும் உள்ளது.
அது எப்படி என்பதை விளக்குகின்றேன்.
1.பலவீனமான செய்திகள் "அழ் ழன்னுல் மர்ஜூஹ்" எனும் யூகத்தையே தரக் கூடியன. யூகத்தை அடிப்படையாகக் கொண்டு அமல் செய்வது என்பது ஒரு புறம் இருக்க சம்பந்தப்பட்ட செய்திகளை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் அல்லது சொன்னார்கள் அல்லது அங்கீகாரம் வழங்கினார்கள் என எடுத்துக் கூறுவதே தவறானதாகும்.
காரனம் யூகத்தை பின்பற்றுவது கூடாது என அல்குர் ஆன் எமக்கு எடுத்துக் கூறுகின்றது.
"....அவர்கள் வெறும் யூகத்தைப் பின்பற்றுவோர் தவிர (சரியான) ஞானம் அவர்களிடம் இல்லை...." 4:157

"..அவர்கள் யூகத்தையே பின்பற்றுகின்றார்கள் அவர்கள் யூகிக்கவே செய்கின்றனர்"   6:116
அத்துடன் தீர்க்கமான அறிவு இல்லத விடயங்களை பின்பற்றக் கூடாது எனவும் அல்குர் ஆன் கூறுகின்றது
" உமக்கு தீர்க்கமான அறிவில்லாத விடயத்தை பின்பற்றாதீர்.." 17:36
எனவே மேலுள்ள வசன‌ங்களின் வழிகாட்டல் அடிப்படையில் பலவீனமான ஹதீஸ்களை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்பதை புரிந்து கொள்கிறோம்.
2.பலவீனமான செய்திகளை அமல்களின் சிறப்புகளிலோ ஆர்வமூட்டல் அச்சமூட்டல் விடயங்களிலோ பயன்படுத்தும் போது குறித்த ஒரு செயலுக்கான நன்மையாக சுவனட்தில் இது கிடைக்கும் தண்டனையாக நரகத்தில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கை சார்ந்த விடயத்துடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புபடுகின்றது.
இத்தொடர்பு "நம்பிக்கை சாராத விடயங்களில்" என்ற விதியுடன் முரண்பட்டு நடைமுறையில் பலவீனமான செய்திகளை அமுல் படுத்துவதை அதற்கே உரிய விதிகளுடன் அமுல் படுத்துவதை பெரும்பாலும் அசாத்தியமான ஒரு விடயமாக மாற்றிவிடுகின்றது.
3.பலவீனமான செய்திகளை சில நிபந்தனைகளுடன் அமுல் படுத்தலாம் என்ற கருத்தாக்கம் பலவீனமான செய்திகளை எந்தவித இபந்தனைகளும் இல்லாமல் வரையறையின்றி பரவுவதற்கும் செயற்படுத்துவதற்கும் காரனமாக அமைந்துள்ளதை நாம் நடைமுறையில் காண்கின்றோம்.

பலவீனமான செய்திகளை சமூகத்தில் பரப்புகின்றவர்கள் அது தொடர்பில் ஆராய்ந்து, இமாம்கள் சொன்ன விதிகளுக்கு உட்படுகின்றதா.. கடும் பலவீனமாக உள்ளதா என்பதையெல்லாம் அறிவிப்பாளர் வரிசையையோ அல்லது அறிவிப்பாளர் பற்றிய திறனாய்வாளர்களின் கருத்துகளை எடைபோட்டோ சொல்வதில்லை.. அல்லது சொல்வது ரொம்ப ரொம்ப அரிது.
மாற்றமாக வரையறைகள் அற்ற வகையில் சகட்டு மேனிக்கு நபி (ஸல்) அவர்கள் பெயரால் செய்திகள் சர்வ சாதாரனமாகப் பரப்பப் படுவதைக் கண் கூடாகக் காண்கின்றோம்.
இதற்கு எமது சமூகத்தில் விரவிக் காணப்படும் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளும் அறிவிப்பாளர் வரிசைகளே இல்லாத செய்திகளும் மிகக் கடுமையான பலவீனம் கொண்டுள்ள செய்திகளும் போதிய சான்றுகளாக உள்ளன.
ஆக, பலவீனமான ஹதீஸ்களை இமாம்கள் அணுமதித்துள்ளனர் என (மொட்டையாகக்) கூறுவதும் குறைந்த பட்சம் இமாம்கள் விதித்துள்ள நிபந்தனைகளைக் கூடக் கடைப்பிடிக்காமல் பலவீனமான செய்திகளைப் பரப்புவதும் சோம்பேறித் தனத்துக்கு அல்லது மனோ இச்சைக்கு இமாம்களைப் பலிகடாக்களாக மாற்றுவதாக அமையுமே அன்றி வேறில்லை.
எனவே "பலவீனமான ஹதீஸ்கள் அகீதாவிலோ அல்லது சட்டங்களிலோ அல்லது அமல்களின் சிறப்புகளிலோ ஆர்வமூட்டல் அச்சமூட்டல் விடயங்களிலோ எதிலுமே ஆதாரமாகக் கொள்ளக் கூடாது" என்பதை நாம் புரிந்து அதை எமது வாழ்வில் கடைப்பிடிக்க வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

ஆக்கம் : Nowfer Mohammad

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்