"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

6/04/2013

நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-

நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள்.

ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி(ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.
அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறு கின்றான்:-

 அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக் கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களா வார்கள்.அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள் (அல் குர்ஆன் 16:20-21)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தினருக்குமிடையில் ஒரு திரை யிருப்பதாக அல்லாஹ்கூறுகின்றான்:-
“அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல் குர்ஆன் 39:42)

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)
இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ்  கூறுகின்றான்:-
“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது – (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (அல் குர்ஆன் 27:80)

குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா). அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.” (அல்குர்ஆன் 35:19-22)
இந்த வசனத்தில், ‘உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று கூறிய இறைவன், உயிருள்ளவாகளில் தாம் நாடியவாகளைச் செவியுறச்செய்து நேர்வழிப்படுத்துவதாகக் கூறுகின்றான். மேலும் ‘கப்ருகளில் உள்ள இறந்தவர்ளளைச் செவியுற செய்பராக நீ இல்லை’ என்று இறைவன் கூறுவதன் மூலம் இறந்தவர்களால் செவியேற்க முடியாது என்று திட்டவட்டமாக அல்லாஹ் கூறிவிட்டான். மேலும் அவன் கூறுகையில்,
“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35:14)

“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)
நல்லடியார்களைப் பாதுகாவலாகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்-
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 18:102)
நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.)” (அல்குர்ஆன் 39:43)
நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள், அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவாக்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

நல்ல மனிதராக இருந்தால்
, நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள்.. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்)
என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும் போது, நல்லடியார்கள் அவர் களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்ப வர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் போல் ஆகமாட்டாரா?
நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பா ளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காக வேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக் கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)
இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்)அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.
இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62)  
இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,
இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21)
இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
இறந்த நல்லடியார்கள் புது மணமகணைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் (ஹதீஸ்)
அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18) 
எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்