"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

5/25/2015

நபியின் சிறுநீர் நரகைத் தடுப்பதா?

நபி (ஸல்) அவர்களின் சிறுநீரை தோழர்கள் பருகினர். நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை தோழர்கள் சாப்பிட்டனர். அவ்வாறு சாப்பிட்டவர்களை நரகம் தீண்டாது என்ற செய்திகள் தான் இந்தப் பரேலவிகளின் சொற்பொழிவுகளில் ஆக்கிரமிப்பு செய்யும்.

சாதாரண ஓர் அடிப்படை அறிவு கூட இல்லாத அறிவீனர்கள் இவர்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்ததும் தண்ணீரால் சுத்தம் செய்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதியிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் (-அனஸா) எடுத்துச் செல்வோம். (தம் தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.   அறிவிப்பவர்: அனஸ் (ரலி),   நூல்: புகாரி 152

மற்றவர்களின் சிறுநீரைப் போலவே தனது சிறுநீரும் அசுத்தம் என்பதால் தான் சுத்தம் செய்திருக்கின்றார்கள். இந்த அசுத்தத்தை அடுத்தவர் சாப்பிடச் சொல்வார்களா? அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் பண்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையான வற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.  (அல்குர்ஆன் 7:157)

உங்களுக்குக்கு நல்லவை அனுமதிக்கப்பட்டுள்ளன என்று பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்.

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. (அல்குர்ஆன் 5:5)

இப்படியிருக்கையில் அசுத்தம் என்று அவர்களே கருதிய தமது சிறுநீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடிக்கச் சொல்வார்களா? என்ற அறிவும் இவர்களுக்கு இல்லை.

அறிவியல் அடிப்படையில் இவை உடலுக்குத் தேவையில்லாத கழிவுகள். இந்தக் கழிவு உடலுக்குள் இருந்தால் உபாதையும் உபத்திரமும் ஆகும். இப்படி உடலுக்குத் தீங்கிழைக்கும் ஓர் அசுத்தத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடுத்தவரை, அதிலும் தனது தோழர்களைக் குடிக்கச் சொல்வார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 13

இவ்வாறு இறை நம்பிக்கையாளரின் இலக்கணத்தைக் கூறும் நபி (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது தொடர்பாக அவர்கள் சில ஹதீஸ்களைக் கூறுகின்றார்களே என்று கேட்கலாம். இந்த ஹதீஸ்களின் லட்சணம் என்ன என்பதைக் கடந்த   இதழ் தோலுரித்துக் காட்டியது. எனவே இது பரேலவிகளின் பயங்கர அசுத்தமான, அசிங்கமான, அபத்தமிகு வாதமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்