நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ்
வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைக்கவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய வேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்புவைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம் ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.
“ஸலவாத் பொருள்”
நம்மில் சிலர் ஸலவாத் என்றால், “நபிகள் நாயகத்திடம் நாம் எதனையோ கேட்கிறோம்” என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம்தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.
“யா அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பேரருள் புரிந்தது போல் முகம்மது(ஸல்) அவர்கள்மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பேரருள் புரிவாயாக! நிச்சயமாக நீயே மகத்துவம் உள்ளவனும் புகழுக்குரியவனுமாவாய்.”
இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப்பொருள். இதில் நாம் தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆசெய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இது போல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் “நபிகளுக்காக துஆ செய்வது” என்பதே பொருள்.
நமக்கென்ன தகுதி உண்டு?
அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலை சிறந்து விளங்குகின்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு “நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டுவிடும்” என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.
“துஆ” என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக செய்ய வேண்டியது” என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை.
உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.
“சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன்” எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்.” அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம். என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.
இன்னொருமுறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது “உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்!” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.
“அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்”) என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக “வஅலைக்குமுஸ்ஸலாம்” என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.
நம்முடைய பெற்றோர்க்கு அருளை கோரும்படி வல்ல அல்லாஹ் நம்மைப்பணிக்கிறான். எத்தனையோ மகான்களின் துஆக்கள் ஏற்கப்படாமல் இருந்ததுண்டு. சாராரண மக்களின் துஆ ஏற்கப்பட்டதுமுண்டு.
அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், “நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது?” என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன் மொழிகளைப் பார்ப்போம்.
இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால், நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும், அதன் தத்துவங்களையும் கண்டோம்.
ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.
அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் “அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்.”
உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்புமீறி உயர்த்தியதைச் சொல்லலாம். இதைப்பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள்.
யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.
யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக்கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும் படியோ, சொல்லாமல் தனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களைவிட மதிப்பில் மிகவும் குறைந்த மற்றவர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப்படி நியாயமாகும்?
நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது அல்லவா?
தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்டவர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைவிட மற்றவர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?
இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட்டங்களும், இணைவைத்தலுக்கும் “ஸலவாத்” என்பதே தக்க மறுப்பாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது மற்றவர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறையிடுதலும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும். என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்றுவிடும்.
ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக்கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல்லித் தந்தார்கள்.
“ஸலவாத்” என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.
நபி(ஸல்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் “உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவது” என்று கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் “ஸலவாத்” கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ‘ஸலவாத்’ என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து, நாமாகப் புதிய ‘ஸலவாத்’ களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக ‘பித்அத்’ஆக அவை கருதப்படும்.
இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் “வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்” என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து, “அவர் மார்க்கத்தை அறியாதவர்” என்றும் முடிவு கட்டியது. நபி(ஸல்) அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது “புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்” என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். ‘திர்மிதி’ என்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் “ஸலவாத்துன்னாரிய்யா” என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.
இதற்கு உதாரணமாக ‘இப்னு அபீ ஜைது’ என்ற அறிஞர் “வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்” என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து, “அவர் மார்க்கத்தை அறியாதவர்” என்றும் முடிவு கட்டியது. நபி(ஸல்) அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது “புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்” என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். ‘திர்மிதி’ என்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் “ஸலவாத்துன்னாரிய்யா” என்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.
இந்த “ஸலவாத்துன்னாரியா” என்ற ஸலவாத்தை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை. மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட “ஸலவாத்துன்னாரியா” மக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது.
இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர்(ஸல்) அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த “ஸலவாத்” ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு!
இந்த “தீனை” வைத்து சம்பாதிப்பவர்கள் தான், திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானானக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள், அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.
“ஸலவாத்துன்னாரிய்யா” என்றால் நெருப்பு ஸலவாத் என்று பொருள். அந்த ஸலவாத்தில் நார் (நெருப்பு) என்ற சொல் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. பிறகு ஏன் “நாரிய்யா” என்று பெயர் வைத்தார்கள்? என்று நாம் ஆராயும்போது ஒரு செய்தி நமக்குத் தெரிய வந்தது.
அதாவது மலேஷியாவின் சில பகுதிகளில் மிகப்பெரும் நெருப்பு குண்டத்தை வளர்த்து அதைச்சுற்றி இருந்துகொண்டு அதில் நெய்யை ஊற்றிக் கொண்டு ஓதி வருகிறார்களாம். நெருப்பு வளர்த்துக் கொண்டு அது ஓதப்படுவதால் தான் அதற்கு “நாரிய்யா” என்று பெயர் வந்ததாக ஒரு மலேசியா நண்பர் ஒருவர் நம்மிடம் கூறினார். (மலேஷியா நண்பர்கள் இதைப் பற்றிய உண்மை விபரங்கள் எழுவதை வரவேற்கிறோம்)
இந்த தகவல் உண்மையாக இருக்குமேயானால், பிற இனத்தவர்கள் அக்னி பூஜை நடத்துவதைப் பார்த்து அதுபோல் இங்கேயும் சிலர் திட்டமிட்டு உருவாக்கி விட்டனர்; மாபெரும் பாதகச் செயலை உருவாக்கி விட்டனர் என்பது தெளிவாகும்.
ஆக இந்த “ஸலவாத்துன்னாரிய்யா” என்பது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டதால் அது முதல் குற்றம். அதற்கு (மிகப்) பெரும் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தது இரண்டாவது குற்றம் ஆகின்றது. அதற்கு உலக நோக்கம் கற்பிக்கப்பட்டது மூன்றாவது குற்றம். அதன் பின்னணியில், நெருப்புக் குண்டம் வார்க்கப்படுவதை ஏற்படுத்தி அதற்கு “நாரிய்யா” என்று பெயர் சூட்டியது உண்மையானால் அது நான்காவது மாபெரும் குற்றம்.
இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக “ஸலவாத்துன்னாரிய்யா” வின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண் படுகின்றது. அதை அலசுவோம்.
“ஸலவாத்துன்னாரிய்யா” என்பது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல, மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் மேலே கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்-அத்” -பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது – என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் மேலே பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதை இனி காண்போம்.
“கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்.(நூல்கள்: புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயிலெ, திர்மிதீ) என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.
“யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள் அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள் பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!” இது தான் ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள்.
திருக்குர்ஆனையும், நபி மொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்க மாட்டார்கள்! இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.
“நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும்” என்று அல்லாஹ்வோ, அவன் திருத் தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை. “அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும்” என்று தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போதனை செய்தார்கள்.
“அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே, நான் நன்மை செய்து கொள்ளவோ, தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லை” என்று சொல்வீராக! (அல்குர்ஆன் 10 :49)
அல்லாஹ் இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சசார வாழ்க்கையில், அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள்! ‘தாயிப்’ நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க் களத்தில் “பல்” உடைக்கப்பட்டது! இது போன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.
அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்! தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள்! பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள்! நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘தன் மூலமாகக் கஷ்டங்கள் விலகும்” என்று கூறிடவில்லை. நபித் தோழர்களில் எவரும் எத்தனையோ தேவைகள் நிறைவேற்றப்பட்டதில்லை.
‘நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் மூலமாகத் தேவைகள் நிறைவேறும்! என்பதும் சரியானதன்று, அல்லாஹ்வும், அவனது தூதரும் இப்படி சொல்லித் தரவில்லை. மாறாக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கே பல தேவைகள் இருந்தன. ஆசைகள் இருந்தன. அவற்றில் எத்தனையோ தேவைகள் நிறைவேற்றப்பட்டதில்லை.
“தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்” என்ற ஆசை, நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். “அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கை சேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்” (அல்குர்ஆன் 18:6) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டும் அளவுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்றுறற பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.
அவர்களின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விடவும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்ற போது, “அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன்” என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றான்.
(2:272) (3:128) (6:17) (6:50) (6:66) (7:188) (10:106,107) (11:63) (28:56) (42:52) (49:9) (72:21,22)
ஆகிய வசனங்களை ஒரவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்)
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட நாரிய்யா, ‘தாஜி’, “ஆயிஷா” என்ற பெயரில் உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்களை விட்டொழிப்போமாக! (ஆமீன்)
ஸலவாத்’ சொல்வதனால் ஏற்படக் கூடிய சிறப்புகளையும், ஸலவாத்தின் பொருளையும், அதன் காரணத்தையும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ‘ஸலவாத்’ எவை? பிற்காலத்தில் உருவாக்கப்பட்டட ‘ஸலவாத்’ எவை? என்பதையும் இதுவரை நாம் பார்த்தோம்.
ஒரு முஸ்லிம், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். அதற்கு நன்மையும் உண்டு. இதில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் “இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற காரியங்களை நாம் அப்படியே செய்ய வேண்டும். அதில் எந்தவித மாறுதலும் செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.
உதாரணமாக தொழுகையில் ‘ருகூவு’ செய்யும் போதும், ‘சுஜுத்’ செய்யும் போதும் “இதைத் தான் ஓத வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘ஸலவாத்’ ஓதுவது சிறந்தது தானே என்று எண்ணிக் கொண்டு ருகூவில் – சுஜுதில் ஒருவன் ‘ஸலவாத்’ ஓதினால், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அவன் மாறுதலைச் செய்கின்ற காரணத்தினால், அவன் குற்றவாளியாக ஆகின்றான்.
நபி(ஸல்) அவர்கள் “இதைத் தான் இந்த நேரத்தில் ஓத வேண்டும்” என்று காட்டித் தந்திருக்கும் காரியங்களில், மாறுதலோ கூடுதல் குறைவோ செய்ய எவருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு உதாரணம் பார்ப்போம்! தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் ‘பாங்கு’ சொல்வதை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று துவங்கி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிக்க வேண்டும். இது தான் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாங்கு. இன்று சிலர் நன்மை என்று கருதிக் கொண்டு, பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘பாங்கு’ என்று ஒரு முறையை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் போது. அதில் எந்த ஒன்றையும் அதிகமாக்குவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாததாகும். பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதும், ருகூவில் ‘ஸலவாத்’ சொல்வதும் ஒன்று தான்.
பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ கூற வேண்டும் என்று இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். நன்மை செய்வதில் நம்மை விட அதிக ஆர்வம் கொண்டிருந்த நபித் தோழாகள் அதனை செய்திருப்பார்கள். ஆனால் நபியவர்களும் நமக்கு அவ்வாறு சொல்லித் தரவில்லை. நபித் தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை.
இந்தச் செயலை அறிஞர்கள் ஆட்சேபணை செய்யும் போது, பாமர மக்கள் ஸலவாத்தையே மறுப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஒரு சில விஷமிகள் மக்கள் மத்தியில் இப்படிப் பட்ட பிரச்சாரத்தை முடுக்கி விடுகின்றனர். ஸலவாத் அதிகமாக ஓத வேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நிாணயிக்கப்பட்ட எந்த அமலிலும், ஸலவாத் உட்பட எதனையும் அதிகப்படுத்தக் கூடாது என்பது தான் நமது நிலை. இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.
‘ஸலவாத்’ ஓதுவதை விட குர்ஆன் ஓதுவது அதிக நன்மை தரக்கூடியது என்பதில் அறிஞர்களுக்கிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஒருவன் ‘பாங்கு’ சொல்வதற்கு முன்னால் ‘அலம்தர கைப’ என்ற சூராவை ஓதிவிட்டு பாங்கைத் துவக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் இன்னொருவன் பாங்கு சொல்வதற்கு முன்னால் ‘யாஸீன்’ என்ற சூராவை ஓதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நிச்சயமாக அதை ஆட்சேபனை செய்வோம்! “ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஒதுகிறேன்” என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபணை செய்தோமோ. அது ‘ஸலவாத்’ பிரச்சனைக்கு பொருந்தாதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்னும் விரிவாக நாம் பார்ப்போம்! பாங்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிகின்றது, ஒருவன் இப்படி யோசிக்கிறான். ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பது கலிமாவின் ஒரு பகுதி தான், இன்னொரு பகுதி “முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ அதைக் காணோம் என்று கருதிக் கொண்டு பாங்கை முடிக்கும்போது “முஹம்மதுர் ரஹுலுல்லாஹ்’ என்று முடித்தால் எவராவது ஏற்க முடியுமா? அவன் சொன்ன வார்த்தை உண்மையான, நன்மையான வார்த்தை என்பதற்காக நாம் அங்கீகரிக்க மாட்டோம். பாங்கின் கடைசியில் நல்ல ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது எப்படித் தவறு என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வாறே பாங்கு சொல்வதற்கு முன்னாலும் எதையும் அதிகமாக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வது ஆதாரமற்றது என்று நாம் சொல்லும் போதும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தவிர நாமாக உருவாக்கிக் கொண்ட ‘பித்அத்’ தான ஸலவாத்களை சொல்லக் கூடாது என்று நாம் கூறும் போதும், நாம் ஸலவாத்தையே மறுப்பதாக நம்மீது அவதூறு பரப்பப்படுகின்றது . நாம், அவர்கள் சொல்லித் தந்த முறைப்படி சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்கிறோம்.
அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையை உள்ளபடி புரிந்து கொண்டவர்களாக ஆக்குவானாக – ஆமீன். – முற்றும்
முஹம்மது அலி, M.A.
அந்நஜாத்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்