"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

8/28/2015

இறுதி நபி இறப்பில்லாதவர்களா?

கப்ரை வணங்கும் பரேலவிகளுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவ்பந்திகளிலும் வழிகெட்ட பரேலவிகள் அதிகமதிகம் ஊடுறுவியுள்ளனர். அதற்குத் தெளிவான சான்றுதான் "மனாருல் ஹுதா மே 2015'' மாத இதழில் "ரவ்ளா கஅபாவை விட புனிதமானது'' என்றும், நபியவர்கள் மரணிக்க வில்லை. அவர்கள் மண்ணறையில் உயிரோடு தான் உள்ளார்கள் என்றும் எழுதியுள்ளனர். இது மிகப்பெரும் வழிகேடும், நிரந்தர நரகத்தில் தள்ளும் இணைவைப்புக் கொள்கையுமாகும்.
"நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடப் புனிதமானது'' என்ற வழிகெட்ட கருத்திற்குரிய தெளிவான மறுப்பை ஜூன் 2015 ஏகத்துவம் மாத இதழில் நாம் தெளிவு படுத்தியிருந்தோம்.
"நபியவர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் கப்ரில் உயிரோடுதான் உள்ளார்கள்'' என்ற இணைவைப்புக் கொள்கைக்கு எதிரான நபிவழிச் சான்றுகளை நாம் இந்த இதழில் விரிவாகக் காண உள்ளோம்.

நபியவர்கள் மரணிக்கவில்லை என்ற வழிகெட்ட கொள்கையைத் திணிப்பதற்காக மனாருல் ஹுதா மாத இதழ் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தவறான வாதங்களையும் முன்வைத்துள்ளது. சில சரியான ஹதீஸ்களின் கருத்தைத் திரித்துக் கூறியுள்ளனர்.
அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்குரிய பதில்களைக் காண்பதற்கு முன்னால் நம் உயிரினும் மேலான உத்தம நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய சான்றையும், அவர்கள் கியாமத் நாளில் தான் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள் என்பதற்குரிய சான்றுகளையும் காண்போம்.
நபியும் மரணிப்பவரே! திருக்குர்ஆன் பிரகடனம் 
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள்.  (அல்குர்ஆன் 39:30)
இந்த இறைவசனம் நபியவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நோக்கிப் பேசுகின்ற இறைவசனம் ஆகும்.
இவ்வுலகில் படைத்த அனைத்து மனிதர்களும் எவ்வாறு மரணத்தைத் தழுவக்கூடியவர்களோ அது போன்றே முஹம்மது (ஸல்) அவர்களும் மரணத்தைத் தழுவக்கூடியவர்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
மரணம் என்பதில் பிற மனிதர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
இறைத்தூதர் இறந்தாலும் இஸ்லாம் நிலைத்திருக்கும்
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)
உஹது யுத்தக் களத்தில் நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது சிலர் இஸ்லாத்தை விட்டே வெளியேற நினைத்தனர். நபியவர்கள் கொல்லப் பட்ட பிறகு நாம் எதற்காகப் போர் செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில்தான் அல்லாஹ் மேற்கண்ட இறைவசனத்தை அருளினான்.
முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்தாலும் இஸ்லாம் நிலைத் திருக்கும். எனவே முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவீர்களா? அப்படி வெளியேறினால் அது உங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை நபித்தோழர்களுக்குத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியது.
நபியவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்திலேயே அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான் என்பதை இந்த இறைவசனம் நபித்தோழர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தது.
உண்மையை உணர்த்திய உண்மையாளர் அபூபக்கர்
"எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.
"(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.'' (39:30)
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)    (நூல்: புகாரி 3668)
மேற்கண்ட வார்த்தைகள் நபியவர்கள் மரணித்த நேரத்தில் உண்மையாளர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறிய அற்புத வார்த்தைகளாகும். திருக்குர்ஆன் போதிக்கும் அற்புத உண்மையை நபியவர்கள் மரணித்த வேளையிலே அன்புத்தோழர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
மற்றொரு முறையிலும் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அபூபக்கர் (ரலி) நயமாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பண மாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களைச் சுவைக்கச் செய்ய  மாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.  (நூல்: புகாரி 3667)
"நபி (ஸல்) அவர்கள் இறக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்'' (புகாரி 3667) என்று உமர் (ரலி) அவர்கள் நபி மீது கொண்ட பாசத்தினால் நிலை தவறிப் பேசிய பொழுதான் அபூபக்கர் (ரலி) மேற்கண்ட உண்மையை ஓங்கி உரைத்தார்கள்.
நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பது இணைவைப்புக் கொள்கை என்பதனை இறைத்தூதர் இறந்த நேரத்தில் குகைத்தோழர் ஆற்றிய உரையிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
இறப்பு நெருங்கியதை உணர்த்திய இறைவசனம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்'' என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்'' என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், "(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும் போது...'' எனும் (110:1, 2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், "(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவித்தான்'' என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொண்டதையே நானும் அறிந்து கொண்டேன்'' என்று சொன்னார்கள்  (நூல்: புகாரி 4430)
இறைத்தூதர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் நபித்தோழர்களின் கொள்கையாக இருந்தது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இறைத் தூதர் இறக்கவில்லை என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை என்பதும் தெளிவாகி விட்டது.
மரணம் நெருங்கிவிட்டதை மகளுக்கு உணர்த்திய இறைத்தூதர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப் பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலா வதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான் தான்' என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள். நூல்: புகாரி (3625, 3626)
நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியும் மிகத் தெளிவாக உரைக்கின்றது. இவ்வளவு தெளிவான சான்றுகளைக் கண்ட பின்னரும் அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பவர்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? மக்களே சிந்தித்துப் பாருங்கள்.
மரணம் நெருங்கிவிட்டதை மக்களுக்கு உணர்த்துதல்
நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் தாம் மரணிக்கப் போகிறோம் என்பதையும் தன்னுடைய இறப்பிற்குப் பிறகு நபித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.
உஹுதுப் போர் தியாகிகளுக்குத் தொழுகை நடத்தி விட்டு, தாம் மரணிக்கப் போவதையும் அடுத்த சந்திப்பு மஹ்ஷரில்தான் என்பதையும் நபியவர்கள் தமது தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப் பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழ வைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு "பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது "பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். நூல்: புகாரி (6426)
"எனக்குப் பின்னால்'' என்று நபியவர்கள் கூறியது "அவர்களுடைய இறப்பிற்குப் பின்னால்'' என்பதாகும்.
மேலும் தம்முடைய இறுதி ஹஜ்ஜின் போதும் தாம் விரைவில் மரணித்துவிடக்கூடும்  என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணர்த்தினார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத் துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங் கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) செய்ய மாட்டேனா என்பதை அறியமாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள். நூல்: முஸ்லிம் (2497)
இறக்கப் போவதை உரக்கச் சொன்ன இறைத்தூதர்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், "இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்' என்று சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, "இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்த போது அவர் அல்லாஹ்விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்?' என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று கூறிவிட்டு, "தன் நட்பிலும் தனது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர' என்று சொன்னார்கள். நூல்: புகாரி (466)
இறைச் செய்தியை நிறுத்திய இறைத்தூதரின் இறப்பு
இறைத்தூதர் இறந்து விட்டதால் இனி இறைச் செய்தி (வஹீ) வராதே என்றெண்ணி அருமை ஸஹாபாக்கள் கண்ணீர் வடித்துள்ளனர். 
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்'' என்று கூறினார்கள்.
அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட)  அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள்.
அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழ வில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவரும் அழலாயினர்.  நூல்: முஸ்லிம் (4849)
இறுதித் தூதர் கூறிய இறுதி வார்த்தை
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை என்று நான் நபி (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), "அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்' எனும் (4:69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப் பட்டது' என்று நான் எண்ணிக் கொண்டேன். நூல்: புகாரி (4435)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள். நூல்: புகாரி (4437)
மரண வேதனையை அனுபவித்த மாநபி
நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க் கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது நூல்: புகாரி 4449
இறந்து விட்ட இறைத்தூதர்
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந் திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒரு போதும் நான் வருந்துவதில்லை. நூல்: புகாரி 4446
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4466
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  முப்பது ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். நூல்: புகாரி 4467
குளிப்பாட்டிய நபித்தோழர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். "மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை' என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்' என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்கள்: அபூதாவூத் 2733, ஹாகிம்3/59
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த காரணத்தினால் தான் நபித்தோழர்கள் அவர்களுடைய ஜனாஸாவைக் குளிப்பாட்டினார்கள். இறைத்தூதர் மரணிக்காமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுடைய ஜனாஸாவை ஏன் நபித்தோழர்கள் குளிப்பாட்ட வேண்டும்? என்பதை இவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.
இறுதி நபியவர்கள் இறப்பை எய்திவிட்டார்கள் என்பதைக் கூறும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை இதுவரை பார்த்தோம்.
நபியவர்கள் இறக்கவில்லை என்பதற்கு மாற்றுக்கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

ஆகஸ்ட் ஏகத்துவம் 2015  கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்