அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படையைக் கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் ஷிர்க் எனும் இணை கற்பித்தல் ஆகும்.
வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதோருக்குச் செய்தால் அது எந்த வடிவில் இருந்தாலும் அது 'ஷிர்க் ' என்று தான் கூறப்படும். உதாரணமாக பிரார்த்தனை செய்தல் என்பது ஓர் வணக்கமாகும்.
நம் வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும் இன்ன பிற தேவைகளையும் அல்லாஹ்விடம் மாத்திரம் தான் சொல்லி முறையிட வேண்டும். அல்லாஹ்விடம் முறையிடாமல் அல்லாஹ்வின் படைப்பாகிய மகான்களிடமோ அல்லது தர்ஹாக்களில் சென்று முறையிட்டாலோ அதற்கு 'ஷிர்க் ' என்று சொல்லப்படும்.
நேர்ச்சை செய்தல் ,
அறுத்துப் பலியிடுதல்,
சத்தியம் செய்தல்,
பாதுகாப்பு கோருதல்,
சிரம்பணிதல்,
போன்றவைகள் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். இவைகளை அல்லாஹ் அல்லாத
அவ்லியா,
மகான்,
பெரியார்,
விக்கிரக சிலை,
கப்ரு,
கல் ,
மண்,
மரம் போன்றவற்றிற்கு யாராவது செய்தால் அதனை 'ஷிர்க்' என்று இஸ்லாம் சொல்கின்றது.
நம்முடைய சமூகத்தில் அவ்லியாக்களின் அடக்கஸ்தலத்திற்குச் சென்று , நேர்ச்சைகள் செய்து தமது தேவைகளை முறையிடுவோர் பெருந்திரளாக உள்ளதை மறுக்க முடியாது.
'ஷிர்க்' என்ற அரபி வார்த்தைக்கு 'இணை கற்பித்தல்' என்று பொருள். தமது கைகளால் சிலைகளை செய்து விட்டு பின்னர் அதனையே கடவுளாக வணங்கும் பிறமத மக்களின் கலாச்சாரத்தைத் தான் பலர் 'ஷிர்க்' என்று நம்புகிறார்கள். இதனை முஸ்லிம்கள் யாரும் செய்வதில்லை. பின்னர் எதற்காக, முஸ்லிம்கள் மத்தியில் 'ஷிர்க் ஒழிய வேண்டும்' எனப் பிரசாரம் செய்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்பலாம். 'சிலைகளை வணங்குவது மாத்திரம் தான் ஷிர்க்' என்று நம்மில் அதிகமானோர் புரிந்து வைத்திருப்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
(நபியே)நீர் இணைகற்பித்தாலும் உம்முடைய நல்லறங்கள் அழிந்து விடும்.
திருக்குர்ஆன்-39:66