"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

5/30/2015

பிதுஅத் தை அலசுவோம்

இன்று மதசார்ப்பற்ற எல்லா மதத்தவர்களும் கலந்து வாழும் ஒரு சூழலில் நாம் வாழ்வதால் நம்மையும் அறியாமல் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ செயல்கள் நம்மோடு சேர்ந்திருக்கின்றன. அதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் ..அதை நாம் இன்றுவரை உணர்ந்துகொள்ளவில்லை.

இதைத்தான் .இந்தியாவில் எந்தளவு இஸ்லாம் வேகமாக பரவியதோ அதே அளவு இஸ்லாத்தில் மாற்றுமத செயல்பாடுகளும் புகுந்தன. இதையே இந்தியாவிற்கு இஸ்லாம் second hand ஆகத்தான் வந்தது என்று பண்முக சிந்தனையாளர் மெளலானா அபுல்ஹஸன் அலீ நத்வீ (ரஹ்)கூறுகிறார்கள்.

அவர்களின் வார்த்தை எவ்வளவு நிதர்சனமானது என்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மோடு இருக்ககூடிய இஸ்லாம் அனுமதிஅளிக்காத அந்த புதுமையான நடைமுறையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

1 நம்முடைய கலாச்சாரம். பண்பாட்டை இழப்பது.

عن حسان بن عطية رحمه الله قال ما ابتدع قوم بدعة في دينهم ألا نزع الله من سنتهم مثلها ثم لا يعيدها إليهم إلى يوم القيامة ( رواه الدارمي)

ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள,; மார்க்கத்தில் யார் புதினங்களைப் (பித்அத்களை) புகுத்துகின்றார்களோ, அவர்கள் புகுத்திய அளவு சுன்னாவை, மறுமை நாள் வரையில் அவர்களுக்கு திரும்பக் கிடைக்காமல் இறைவன் செய்து விடுவான்.


سئل الإمام مالك رحمه الله تعالى : يا ابا عبد الله ! من اين أحرم؟ قال : من ذى الحليفة من حيث أحرم رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد أن أحرم من المسجد من عند القبر قال : لا تفعل وإني أخشى عليك الفتنة فقال : وأي فتنة في هذه؟ إنما هى أميال أريدها قال : واي فتنة أعظم من أن ترى أنك سبقت فضيلة قصر عنها رسول الله صلى الله عليه وسلم؟ إني سمعت الله بقول : فـليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب اليم. (رواه في الاعتصام الشاطبى)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் கேட்டார், ஓ!!! அபூ அப்துல்லாஹ்!! எந்த இடத்திலிருந்து நான் என்னுடைய இஹ்ராமைக் கட்ட வேண்டும் என்றார். அதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், துல் ஹுலைஃபா என்னும் இடத்தில் இருந்து தான் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களது இஹ்ராமைக் கட்டினார்கள் என்று பதில் கூறினார்கள்.

அந்த மனிதர், முஹம்மது (ஸல்) அவர்களது பள்ளியிலிருந்தும், அவர்களின் அடக்கத்தலத்திற்கு அருகில் இருந்தும நான் இஹ்ராம் கட்ட விரும்புகின்றேன் எனக் கூறினார். இமாம் செய்யக் கூடாது. நீ ஒரு தீங்கில் உன்னை உட்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றாய் என நான் அஞ்சுகின்றேன் எனக் கூறினார்கள்.

அந்த மனிதர் மீண்டும் சில மைல்களுக்கு அப்பால் நான் கட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன் என்று கூறினார். இமாம் அவர்கள் என்ன கைசேதம் உனக்கு! முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த நன்மையின் அளவு குறைவாக இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டு அவரையே நீங்கள் மிஞ்சப் பார்க்கின்றீர்களா? அல்லாஹ் கூறியவற்றிலிருந்து நான் ஞாபகப்படுத்திக் கொண்டதைச் சொல்கின்றேன்,

இறைவன் கூறுகின்றான், யார் என்னுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது கட்டளைகளுக்குப் புறம்பாக நடக்கின்றார்களோ அவர்கள் தங்களுக்கு ஏற்படவிருக்கும் தீங்கைக் குறித்துப் பயந்து கொள்ளட்டும் அல்லது கடினமான வேதனையைப் பயந்து கொள்ளட்டும் மாலிக்(ரஹ்) அவர்கள் அவரைப் பார்த்துக் கூறினார்கள், நீ அந்த மாதிரி ஆகிவிடாதே


2. ஈமானை இழப்பது.

عن الفضيل بن عياض رحمه الله تعالى قال : إذا رأبت مبتدعاً فى طريق فخذ في طريق اخر ولا يرفع لصاحب بدعة إلى الله عز وجل عمل ومن أعان صاحب بدعة فقد أعان على هدم ادين . (رواه خصائص أهل السنة)


ஃபுதைல் பின் இயாழ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது, உங்களை நோக்கி ஒரு பித்அத்-தைப் பின்பற்றக் கூடியவன் வந்தால், அவன் வரும் வழியை விடுத்து நீங்கள் மாற்று வழியில் சென்று விடுங்கள். பித்அத் செய்யக் இருந்து இறைவன் எந்த வித நல்ல அமல்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். யார் ஒருவன் ஒரு பித்அத் செய்யக் கூடியவனுக்கு உதவுகின்றானோ அவன் தன்னுடைய மார்க்கத்தையே அழிக்க உதவிக் கொண்டிருக்கின்றான் என்பதாகும்.

قال سفيان الثوري رحمه الله تعالى : البدعة احب إلى إبليس منالمعصية المعصية يتاب منها والبدعة لايتاب منها (رواه في شرح السنة)

சுஃப்யான் தவ்ரி (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது , ஷைத்தானானவன் மனிதர்கள் புரியும் பாவங்களைக் காட்டிலும், மார்க்கத்தில் பித்அத்-கள் அல்லது புதினங்கள் ஏற்படுவதை அதிகம் விரும்புகின்றான். ஏனென்றால், மனிதர்கள் தங்கள் பாவங்களுக்கு இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோரிக் கொள்கின்றார்கள். ஆனால், அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் பித்அதி-களுக்கு பாவமன்னிப்புக் கோருவதில்லை, என்பது தான்.

(ஏனெனில் பித்அத்-ஆனது மக்களால் நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது என்றே செயல்படுத்தப்படுவதாலும், அவர்கள் தாங்கள் செய்வது குற்றமல்ல என்றும் நினைப்பதாலும், அதற்காக அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதில்லை)

யார் புதினங்களி (பித் அத்) - ன் படி நடக்கின்றார்களோ, அவர்கள் பின்பற்றும் புதினங்களின் அளவுக்கு அவர்களிடம் இருந்து இறைவன் முஹம்மது (ஸல்) அவர்களின் சுன்னாவைத் தூரமாக்கி விடுவான்.


3 நம் நபியின் கோபத்துக்கு ஆளாகுவது.

عن سهل ابن سعد قال قال رسول الله صلى الله عليه وسلم : إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم بظمأْ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدرى ما أحدك فأقول سحقاً سحقاً لمن غير بعدي
(متفق عليه)

1) கவ்தர் தடாகத்தின் முன்பாக நான் தான் முதல் ஆளாக நின்று கொண்டிருப்பேன். யார் யாரெல்லாம் அங்கு வருகை தருகின்றார்களோ அவர்களெல்லாம் அதில் நீர் அருந்துவார்கள்,

யாரெல்லாம் அங்கு ஒரு முறை வந்து நீர் அருந்தினார்களோ அவர்களுக்கு இனி எப்பொழுதும் தாகம் எடுப்பதை உணரவே மாட்டார்கள். அப்பொழுது சில பேர் அங்கு வருவார்கள். அவர்கள் என்னைப் பின்பற்றியவர்கள் என்பதையும் நான் கண்டு கொள்வேன்.

அவர்களும் என்னை (நபி என) க் கண்டு கொள்வார்கள். ஆனால் அவர்கள் என்னை நெருங்கி வருவதனின்றும் (மலக்குகளால்) தடுக்கப்படுவார்கள். (இதன் தொடர்ச்சி அடுத்த பக்கத்தில்)
அப்பொழுது நான் அவர்கள் என்னுடைய சமுதாயத்தவர்கள் அல்லவா! என்னைப் பின்பற்றியவர்கள் அல்லவா! எனக் கூறுவேன். நபி முஹம்மது (ஸல்) அவர்களே உங்களுக்குப் (மரணித்த) பின்பு இவர்கள் என்னென்ன புதினங்களை உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள், என்று எனக்கு அறிவித்துக் கொடுக்கப்படும்.

அதன் பிறகு நான் கூறுவேன், தூரப் போய் விடுங்கள் !! எனக்குப் பின்பு மார்க்கத்தில் புதினங்களைப் புகுத்தியவர்களுக்கும் எனக்கும் தூரம் இருப்பதே சிறந்தது எனக் கூறுவேன், என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக சஹ்ல் பின் சாத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்

2) ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன் ஈத்காவில் ஒருவர் நஃபில் தொழக்கண்டார்கள்.அலி(ரலி) அவர்கள் அவரை நஃபில் தொழவேண்டாம் என்று தடுத்தார்கள்..அதற்கு அவர் அமீருல் முஃமினீன் அவர்களே நீங்கள் தொழவேண்டாம் என்று தடுக்கின்றீர்கள் நான் என்ன கெட்ட செயலா செய்கின்றேன் தொழுதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கமாட்டான் என்று நான் நம்புகிறேன் என்றார்.

இந்த துடுக்கான வார்த்தையைக்கேட்ட அலி(ரலி) அவர்கள் சகோதரரே நபி(ஸல்) அவர்கள் செய்யுமாறு தூண்டாத ஒரு செயலுக்கு அல்லாஹ் எப்படி கூலிதரப்போகிறான் .எனவே இந்த தொழுகை வீண் செயல் .வீண் செயல் ஹராமாகும்.ஆகவே இந்த தொழுகை நற்செயலாக கருதி நீர் நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றம் செய்ததின் காரணமாக அல்லாஹ் உம்மை தண்டிக்க கூடும் என்று கூறினார்கள்.

நூல் : நள்முல் பயான்..பக்கம் 73

4 பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை :

عن أنس بن مالك رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم : إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع تدعته ( رواه اطبراني)

(மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை) யார் புகுத்தினாரோ அவரது அந்தச் செயலிலிருந்து அவர் விடுபடாதவரை அவரது பாவ இறைஞ்சுதலை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை, என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இது போன்ற தீமைகளை பயந்துதான் ஸஹாபாக்கள் புதுமையான விஷயங்களில் கண்டிப்பாக நடந்துள்ளார்கள்.

عَنْ نَافِعٍ أَنَّ
رَجُلًا عَطَسَ إِلَى جَنْبِ ابْنِ عُمَرَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ قَالَ ابْنُ عُمَرَ وَأَنَا أَقُولُ الْحَمْدُ لِلَّهِ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ وَلَيْسَ هَكَذَا عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَنَا أَنْ نَقُولَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ

ஹஜ்ரத் இப்னு உமர்(ரலி) அவர்களின் மாணவர் நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்களின் அருகில் தும்மிய ஒருவர் அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் என்று கூறினார்.

இதை கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் இந்த முபாரக்கான அழகான கண் குளிர்ச்சியான மனநிறைவான இந்த வாசகத்தை நானும்தான் மொழிகிறேன் எனினும் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு கற்பிக்கவில்லை. நீர் சொன்னவாறு இச்சந்தப்பத்திற்கு நபு(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. மாறாக எல்லா நிலையிலும் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்ல கற்றுத்தந்தார்கள்.     நூல் : திர்மிதி. 2662


عَنِ الْحَسَنِ قَالَ
دُعِيَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ إِلَى خِتَانٍ فَأَبَى أَنْ يُجِيبَ فَقِيلَ لَهُ فَقَالَ إِنَّا كُنَّا لَا نَأْتِي الْخِتَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نُدْعَى لَهُ

ஹஜ்ரத் உஸ்மானிப்னு அபில் ஆஸ் (ரலி) அவர்களை ஒருவர் கத்னாவிற்காக அழைத்தார். அதை ஏற்க மறுத்துவிட்டு கூறினார்கள். நபி(ஸல்) காலத்தில் கத்னாவிற்காக அழைப்பு கொடுக்கப்பட்டதுமில்லை. அதிலே நாங்கள் கலந்து கொள்ளவுமில்லை.
நூல் : அஹ்மத் ஹதீஸ் எண். 17232


عن (محمد) ابن سيرين قال لم يكويوا يسألون عن الإسناد فلما وقعت الفتنة قالوا سموا لنا رجالكم فينظر إلى أهل السنة فيؤخد حديثهم وينظر إلى أهل البدع فلا يؤخد حديثهم (رواه مسلم)

முஹம்மது பின் சிரீன் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது, இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் சுன்னாவைப் பற்றி எந்தக் கேள்விகளையும் கேட்காமல், சுன்னாவைப் பின்பற்றினார்கள்.

பிற்காலத்தில், சுன்னாவில் ஏகப்பட்ட பித்அத்-கள் புதிதாகப் பரவ ஆரம்பித்தவுடன் மக்கள், அந்த சுன்னாவின் அறிவிப்பாளர்களின் வரிசையைப் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். முதலில் அவர்கள் அந்த சுன்னாவை அறிவித்தவர் சுன்னாவைப் பின்பற்றக் கூடியவரா என்பதை அறிந்து கொண்ட பின்பு தான் அவர்கள் அந்த சுன்னாவைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.

அதுவல்லாமல், அந்த அறிவிப்பாளர் தொடரில் ஒருவர் பித்அத் அல்லது புதினங்களைப் புகுத்துபவர் அல்லது அவற்றைப் பின்பற்றுபவர் எனத் தெரிந்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவார்கள்.

ما رواه البخاري عن طارقِ بنِ عبدِ الرّحمنِ قال:
انْطَلَقْتُ حَاجًّا، فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ، قُلْتُ: مَا هَذَا الْمَسْجِدُ ؟ قَالُوا: هَذِهِ الشَّجَرَةُ حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم بَيْعَةَ الرِّضْوَانِ ! فَأَتَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ سَعِيدٌ: حَدَّثَنِي أَبِي أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلّم تَحْتَ الشَّجَرَةِ، قَالَ: فَلَمَّا خَرَجْنَا مِنْ الْعَامِ الْمُقْبِلِ نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا، فَقَالَ سَعِيدٌ: إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلّى الله عليه وسلّم لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ ؟! فَأَنْتُمْ أَعْلَمُ.

தாரிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது ஒரு இடத்துக்கு அருகே ஒரு கூட்டம் தொழுது கொண்டிருந்தனர்-இது என்ன இடம்?என்று நான் கேட்டேன் –இது ஹுதைபிய்யாவில் நபி ஸல் அவர்களிடம் அருமை தோழர்கள் பைஅத் செய்த புனித மரம் இருந்த இடம் என்று கூறினர் –

இந்த செய்தியை ஸஈத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்களிடம் கூறினேன்-அதை கேட்ட அவர்கள்-என் தந்தை நபியுடன் அந்த பைஅத்தில் கலந்து கொண்டவர்,அவருடன் மறு ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றபோது-அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம் என்று கூறினார்.

இதை கூறிய ஸஈத் ரஹ் அவர்கள் –நபித்தோழர்களுக்கு தெரியாத இடம் உங்களுக்கு தெரிந்துவிட்டதா?என்றார்கள்.


فقد أخرجه ابن سعد في الطّبقات (2/100) عن نافع قال: كان النّاس يأتون الشّجرة الّتي يقال لها شجرة الرضوان فيصلّون عندها، قال: فبلغ ذلك عمر بن الخطّاب رضي الله عنه، فأوعدهم فيها وأمر بها فقطعت.

உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரத்திற்கு அருகே மக்கள் தொழ ஆரம்பித்து விட்டனர் என்று கேள்விப்பட்ட உமர் ரலி அவர்கள்-அதை வேறுடன் வெட்ட உத்தரவிட்டார்கள்.

இஸ்லாத்தில் புதினங்களைப் புகுத்துபவர்களின் ஸலாமிற்கு அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் பதில் ஸலாம் கூற மாட்டார்கள் :


عن نافع أن ابن عمر رضى الله عنهما جاءهُ رجل فقال إن فلانا يقرأُ عليك السلام فقال له إنه بلغني أنه قد أحدث فإن كان قدْ أحدث فلا تقرءْهُ مني السلام (رواه الترمذيى)

நாபிஊ என்பவர் அறிவிக்கும் இந்த ஹதீஸில் அவர் கூறுவதாவது நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இன்னார் உங்களுக்கு ஸலாம் தெரிவித்தார்கள் என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அவர் மார்க்கத்தில் புதினங்களை உண்டாக்குவதாக நான் கேள்விப்படுகின்றேன். அது உண்மையாக இருக்குமானால் என்னுடைய பதில் ஸலாத்தை அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டாம் , என்று என்னிடம் கூறினார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல பித்அத் இருக்கிறதா ? என்பதை காண இங்கே  கிளிக் செய்யவும் 

பித்அத்’ ஓரு ஆய்வு    காண இங்கே  கிளிக் செய்யவும்
பித்அத் குறித்த ஒரு மாறுபட்ட கேள்வியை காண இங்கே கிளிக் செய்யவும்

குர் ஆணை தொகுத்தது பித்அத் இல்லையா ? என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்

பரலேவிகள் என்போர் யார் ?

பரேல்விய்யா!

பரேல்விய்யா என்பது சூபியிஸத்தைப்  பின்பற்றக்  கூடிவர்களின் ஒரு பிரிவு ஆகும்.
இது இந்தியாவில்  ஆங்கிலேயர்கள்  ஆட்சி செய்து கொண்டிருந்தபோது உருவானது.  இந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள அவுலியாக்கள் என்று சொல்லப்படக் கூடிய இறை நேசர்கள் மீதும் இறைத்தூதர்கள் மீதும் அதுவும்
குறிப்பாக இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அளவு கடந்த நேசம்
கொள்வதன் மூலம் அவர்களுக்கும் இறைவனின் தன்மைகளை ஆற்றல்களை பங்கிடுகின்றனர்.
 பரேல்விய்யாக் கொள்ளையைத்  தோற்றுவித்தவர்: -

இந்தக் கொள்கையைத் தோற்றுவித்தவரின் பெயர் (احمد رضاخان بریلوی‎,)   ‘அஹமது ராஜா கான் இப்னு தகீ அலிகான்’ என்பதாகும். இவர் இந்தியாவிலுள்ள உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி என்ற ஊரில்   (கி.பி). ஜூன் 14 /  1856  அல்லது  (10 ஷவ்வால் ஹிஜ்ரி 1272) ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னைத் தானே ‘அப்துல் முஸ்தஃபா’ என்று அழைத்துக் கொண்டார். (பொருள் : முஸ்தஃபா (முஹம்மது) வின் அடிமை)

அஹமது ராஜா கானின் ஆசிரியர்: -

ஆங்கிலேய  ஏகாதிபத்ய ஆட்சிக்கு எதிராக போராடிய முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சிதைத்து அவர்களின் வலிமையைக் குறைத்திட சதித்திட்டம்
தீட்டி இஸ்லாத்தில் பிரிவுகளைத் தோற்றுவிக்கும் எண்ணத்தில் ஆங்கிலேயர்களின் ஆதரவில் காதியானிய்யா என்றொரு பிரிவைத் தோற்றுவித்த மிர்ஸா‬ குலாம் அஹ்மது அல்- காதியானியின் உடன் பிறந்த மூத்த சகோதரர்  அல்‬-மிர்ஸா குலாம் காதிர் பெக்(g) என்பவர் தான் பரேல்விய்யா பிரிவைத் தோற்றுவித்த அஹமது ராஜா கானின் ஆசிரியர் ஆவார்.
அஹமது ராஜா கான் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவைகள் :

அன்பா அல் முஸ்தஃபா
மற்றும்
காலிஸ் அல்- இத்திகாத்
ஆகியவையாகும்.

பரேல்விய்யாவின் வழிதவறிய கொள்கைகளில் சில : -
»முஹம்மது நபி (ஸல்) அவர்கள் படைப்பினங்களை அனைத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பிக்கை கொள்வது.

»இறை பாதைகளில் தங்களை அர்பனித்த துறவிகளும், இறைநேசர்களும் படைப்பினங்களில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வது.

»முஹம்மது நபி (ஸல்) அவர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்களிடமே தேவையைக் கேட்கும் அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

»முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்வது.

»முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் ஒளி என்று நம்பிக்கை கொள்வது.
 
» முஹம்மது நபி (ஸல்) அவர்கள்  ஒரே நேரத்தில் பல இடங்களுக்கு சமூகம் தருவார் என்று நம்பிக்கை கொள்வது,

»இறைத்தூதர்களிடத்திலேயும், மற்ற மஹான்களையும் அழைத்து உதவி தேடலாம் என்று நம்பிக்கை கொள்வது.

இந்தக் கொள்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத் தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்
தூதரும் அடியாரும் (மனிதரே) ஆவார்கள்’ என்ற அடிப்படை ஆதாரத்திற்கு முற்றிலுமாக மாறுபடுவதால் இந்த கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இஸ்லாத்தின் அடிப்படைகள்: -

இஸ்லாம் என்பது இரண்டு அடிப்படைகளில்
அமைந்துள்ளது. அவைகள்: -
1. இறுதி வேதமாகிய அல்-குர்ஆன்
2. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை.

பரேல்வியின் மேற்கூறப்பட்ட கொள்கைகள் அனைத்தும் அல்- குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முற்றிலுமாக மாறுபடுவதால் இஸ்லாம் இவற்றை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கிறது.

ஏக இறைவன் தனது இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகிறான்: -
“(நபியே!) நீர் கூறும்: ‘நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.’ கூறுவீராக:
‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.’
கூறுவீராக: ‘நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்கு தலத்தையும் நான்
காணமுடியாது.
‘அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை). எனவே, எவர் அல்லாஹ்வுக்கும்அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்” (அல்- குர்ஆன் 72:20-23)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:
-
“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் ‎புதிதாக‬ உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் ‎வழிகேடாகும்‬.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

source-: http://en.wikipedia.org/wiki/Barelvi
             http://en.wikipedia.org/wiki/Ahmed_Raza_Khan_Barelvi

5/28/2015

இறைநேசர்களை நாமே தீர்மானிக்கலாமா?

(தவறான வாதங்களும் தக்க பதில்களும் - தொடர்: 4)

இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர் என்று சொல்ல முடியாது. அல்லாஹ்வால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும்.

ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், "அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்'' என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, "உங்கüல் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்து தான் ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், "இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக்கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),  நூல்: புகாரி 2662

இந்த ஹதீஸின் அடிப்படையில், ஒருவரை நாம் நல்லவர் என்று சொல்வதாக இருந்தால், என்னிடத்தில், என் பார்வையில் இவர் நல்லவர் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, அல்லாஹ்விடத்தில் இவர் நல்லவர் என்று நாம் யாரையும் கூறக்கூடாது.

"நான் பார்த்த வரையில் அவர் இறையச்சமுள்ளவராகத் தென்படுகிறார். ஆனால் அல்லாஹ்விடத்தில் அவர் இறையச்சமுள்ளவரா என்று எனக்குத் தெரியாது. மாற்றமாகவும் இருக்கலாம். நான் இறையச்சமுடையவராக நினைத்த ஒருவர் அல்லாஹ்விடத்தில் இறையச்சம் இல்லாதவராக இருக்கலாம்' என்று நாம் கூறவேண்டும்.

ஒருவர் தொழுகையில் மூழ்கிக் கிடக்கிறார்; அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசாதவராக இருக்கிறார்; கோள் சொல்லாதவராக இருக்கிறார். இத்தகைய நல்ல செயல்களை அந்த மனிதரிடம் நாம் காண்கிறோம். "இவர் ஒரு நல்ல மனிதர்; இவர் இறைநேசராக எனக்குத் தெரிகிறார். ஆனால் இவர் அல்லாஹ்விடம் நிஜமான நேசராக இருக்கிறாரா  என்று எனக்குத் தெரியாது' என கூற வேண்டும்.

அதை விட்டுவிட்டு, நூறு சதவீதம் அவர் இறைநேசராக இருக்கிறார் என்றோ அவர் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் என்றோ நாம் சொல்லிவிடக்கூடாது. அதைத் தீர்மானிப்பவன் அல்லாஹ் என்று சேர்த்தே கூறவேண்டும். எனவே எந்த மனிதரையும் நல்லவர், மகான் என்று யாரும் தீர்மானிக்க முடியாது.

அதே நேரத்தில் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக வேண்டி ஒருவரை நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும்.  உதாரணமாக நாம் கடை நடத்தி வருகிறோம். அந்தக் கடைக்கு ஒருவரை வேலைக்குச் சேர்ப்பதாக இருந்தால் அவர் நல்லவரா என்று ஆய்வு செய்யக் கூடிய நிலை ஏற்படுகிறது. அதேபோல் நம்முடைய மகளை ஒருவனுக்குத் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவனை நல்லவனா கெட்டவனா என்று நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. அவ்வாறு நல்லவர் கெட்டவர் என்று கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உலகத்தில் நல்லவர் என்று முடிவு செய்யக்கூடிய தேவை நமக்கு இல்லாமல் போய் விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு மணமகளைத் தேர்வு செய்வதைப் பற்றி  கூறும்போது,

"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1. அவளது செல்வத்திற்காக, 2. அவளது குடும்பத்திற்காக, 3. அவளது அழகிற்காக, 4. அவளது மார்க்கத்திற்காக.

மார்க்கம் உடைய பெண்ணை மணந்து வெற்றியடைந்து கொள். (இல்லையேல்) உன்னிரு கைகளும் மண்ணாகட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),   நூல்: புகாரி 5090

இந்த நான்கு விஷயங்களில் முதல் மூன்றை நாம் தீர்மானித்து விடலாம். நான்காவதாக இருக்கக்கூடிய மார்க்கப்பற்றை நாம் தீர்மானிக்க முடியுமா? முடியாது. மாற்றுக் கருத்துடையவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுவார்கள். நபி (ஸல்) அவர்கள் மார்க்க பற்றுள்ள பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள் என்று கூறியிருக்கிறார்கள். நாமே நல்ல பெண்ணை முடிவு செய்யலாமே என்று விதாண்டாவாதம் செய்வார்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நல்ல பெண் என்று சொன்னால் நமக்கு அந்தப் பெண் நல்லவளாகத் தெரிகிறாள். ஆனால் அவள் அல்லாஹ்விடத்தில் பெரிய மார்க்கப்பற்றுள்ளவளா என்று எனக்குத் தெரியாது. ஒரு மாப்பிள்ளையை நல்லவன் என்று நினைத்தால் எனக்கு அவன் நல்லவன் என்று தெரிகிறது. ஆனால் அவன் அல்லாஹ்விடத்தில் மார்க்கப்பற்றுள்ளவனாக இருக்கிறானா என்று எனக்கு தெரியாது. இந்த அர்த்தத்தில் நாம் ஒருவரை நல்லவர், தீயவர் நாம் தீர்மானிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் செல்கிறார்கள். போன பிறகும் மக்காவில் சில முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்யாமல் இருந்தார்கள். முதலில் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்ற முஸ்லிம்களின் கை ஓங்கிவிட்டது. நாம் இனி அங்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று தோன்றிய பிறகு அந்த முஸ்லிம்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள். இதைப் பற்றி அல்லாஹ் திருமைறக் குர்ஆனில் கூறும்போது,

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.  அல்குர்ஆன் 60:10

இந்த வசனத்தில், முஸ்லிம்களான பெண்கள், "என்னுடைய கணவன் தவறான மார்க்கத்தில் இருக்கிறார்; நான் சத்திய மார்க்கத்தில் இருக்கிறேன்; அவர் எனக்கு தேவையில்லை' என்று ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை வெளிப்படையாகச் சோதித்துப் பாருங்கள் என்று தான் இறைவன் கூறுகிறான். அவர்கள் நிஜமாகவே விளங்கி இஸ்லாத்திற்கு வந்திருக்கிறார்களா? அல்லது சதித்திட்டத்தோடு வந்திருக்கிறார்களா? என்று கேள்வி கேட்டு விசாரணை செய்து கண்டறியுங்கள். அப்போது உங்களுக்கு, அவர்கள் முஃமின்கள் என்று தெரிந்தால் அவர்களைத் திருப்பி அனுப்பாதீர்கள்.

வெளிப்படையான செயல்களை மற்றும் அடையாளங்களை வைத்து, அதாவது அல்லாஹ் என்றால் யார்?
சொர்க்கம் என்றால் என்ன?
இம்மை மறுமை என்றால் என்ன?
என்று அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர்கள் சரியாகச் சொல்லி விட்டார்கள் என்றால் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால்  அவர்களுடைய உள்ளத்தில் ஈமான்  இருக்கிறதா என்பதை அல்லாஹ் தான் அறிவான்.  அவர்கள் நம்பிக்கைக் கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள் என்று கட்டளையிடுகின்றான்.

வெளிப்படையில் இணைகற்பிக்கும் காரியங்களைச் செய்யாமலும் இஸ்லாமிய ஒழுங்குகளைப் பேணி வாழ்பவர்களை நல்லவர்கள் என்றும் இதற்கு மாற்றமாக வாழ்பவர்களைக் கெட்டவர்கள் என்றும் நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நல்லவர்களுடன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் கெட்டவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் இறைவன் கட்டளையிடுகிறானோ அவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும். இன்னும் இதற்கு நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத் திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்.  அல்குர்ஆன் 2:204

ஒருவன் நல்லதைப் பேசுகிறான் என்று சொன்னால் அவன் ஈமானுடன் இருக்கிறான் என்று நாம் சொல்ல முடியாது. தன்னை மகான் என்று சொல்லக் கூடியவன் பல அற்புதமான விஷயங்களை எடுத்து வைத்து விட்டு, அதுதான் தன்னுடைய உள்ளத்தில் இருக்கிறது என்று சொந்தம் கொண்டாடுவான். அதற்கு அல்லாஹ்வை சாட்சியாக வைத்திருக்கிறேன் என்று சொல்வான் என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான். அவர்களுடைய வாதம் உங்களுக்கு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களை நல்லவர்களாக நினைத்து விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் இறைவன் கூறுகிறான்.

நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?  அல்குர்ஆன். 63:4

இந்த வசனத்தில் இறைவன் முனாஃபிக்குகளைப் பற்றி கூறுகிறான். அவர்களுடைய தோற்றம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் பேசுவார்கள். எனவே அவர்களின் பேச்சை உண்மையென நம்பிவிடாதீர்கள். அவர்களை முஃமீன் என்றும் நம்பி விடாதீர்கள். அவர்கள் தான் உங்களுக்கு முதல் எதிரிகள் என்று இறைவன் கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் முனாஃபிக்குகள் என்று ஒரு கூட்டம் இருந்தது. இவர்கள் யார் என்பதை இறைவன் அறிவித்துக் கொடுத்தால் தான் தெரியும். அவர்கள் ஐவேளையும் தொழுகைக்கு வந்து விடுவார்கள். போருக்குச் சரியாக வந்து விடுவார்கள். நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதலில் வந்து நிற்பார்கள். இப்படியெல்லாம் முஸ்லிம்களின் அனைத்துக் காரியத்திலும் அவர்கள் பங்கெடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது. அதில் யார் நடிக்கிறார்கள்? யார் அதில் நிஜமாக இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் நம்முடைய கடமை வெளிப்படையாகப் பார்ப்பது தான். முஃமின் என்று சொல்கிறாயா? அப்படியானால் வந்து சேர்ந்து கொள் என்றுதான் சொல்ல முடியும். இதைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.  அல்குர்ஆன்  2:8

இந்த வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி இறைவன் கூறுகின்றான். அவர்களுடைய உள்ளத்தில் இறை நம்பிக்கை கிடையாது. அவர்கள் வெளிப்படையில் அல்லாஹ்வை நம்புகிறோம் என்று சொல்கிறார்கள். வெளிப்படையில் மறுமையை நம்புகிறோம் என்று சொல்கிறார்கள். உங்களுடன் இருப்பதால் அவர்களை ஈமான் கொண்டவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்களுடைய உள்ளத்தில் ஈமான் இல்லை. இப்படிப்பட்ட ஆட்களும் உங்களில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் நபியவர்களுக்கு எச்சரிக்கை செய்கிறான்.

எனவே வெளிப்படையான செயல்களை வைத்து நாம் ஒருவரை நல்லவர் என்று தீர்மானிக்கக் கூடாது. இன்னும் சொல்வதென்றால், மறுமை நாளில் அல்லாஹ் சொர்க்கம், நரகம் என்று தீர்ப்பளிப்பான். தீர்ப்பளித்த பிறகு சில பேர் நரகத்திற்குச் சென்று விடுவார்கள். சிலபேர் சொர்க்கத்திற்குச் சென்று விடுவார்கள்.

இவ்வுலகத்தில் தங்களை நல்லவர்கள், சொர்க்கவாதிகள் என்றும், மற்றவர்களை தீயவர்கள், நரகவாதிகள் என்றும் நினைத்திருப்பார்கள். ஆனால் மறுமை நாளில் யாரை நரகவாதிகள் என்று எண்ணினார்களோ அவர்கள் சொர்க்கவாசிகளாகவும், இவர்கள் நரகவாசிகளாகவும் இருப்பார்கள். அப்போது நரகவாசிகள், சொர்க்கவாசிகளைப் பற்றிக் கூறுவதாக அல்லாஹ் கூறுகிறான்.

தடுப்புச் சுவர் மேல் இருப்போர், (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை; அல்லாஹ் அருள் புரிய மாட்டான் என (சொர்க்க வாசிகளான) இவர்களைப் பற்றியா சத்தியம் செய்தீர்கள்?'' என்று கூறுவார்கள். (இதன் பின்) "சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள்' (என தடுப்புச் சுவரிலிருப்போரை நோக்கிக் கூறப்படும்.)  (அல்குர்ஆன். 7:48, 49)

இந்த வசனத்தில் அல்லாஹ், நீங்கள் யாரைக் குழப்பவாதிகள், பிரிவினைவாதிகள், புதுக் கொள்கையைப் புகுத்துபவர்கள், இவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்கள், இவர்கள் தான் நரகத்திற்குரியவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். நீங்கள் யாரை சொர்க்கத்திற்கு உரியவர்கள் என்று நினைத்தீர்களோ அவர்கள் நரகத்தில் கிடக்கிறார்கள் என்று இறைவன் நரகவாசிகளிடம் கூறுகிறான்.

ஆக, ஒருவனை நாம் நல்லவன் என்று தீர்மானித்திருப்பது பொய்யாகி விடுகிறது. அதேபோல் யாரை நாம் மகான், அவ்லியா என்று நினைக்கிறோமோ அவன் நரகத்தில் கிடக்கிறான். அந்த நினைப்பும் பொய்யாகி விடுகிறது. 

அதேபோல் இன்னொருவன் நரகத்தில் கிடப்பான். அவன், நாம் நரகத்திற்கு வந்துவிட்டோம். இன்னும் சில கெட்டவர்கள் இருந்தார்களே அவர்களைக் காணோமே! என்று புலம்பிக் கொண்டிருப்பான். அதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

"தீயோர் என்று நாங்கள் கருதி வந்த மனிதர்களை (நரகில்) ஏன் காணாமல் இருக்கிறோம்? (அவர்கள் நல்லோராக இருந்தும்) அவர்களை ஏளனமாகக் கருதினோமா? அல்லது அவர்களை விட்டும் (நமது) பார்வைகள் சாய்ந்து விட்டனவா?'' என்று கேட்பார்கள். நரக வாசிகளின் இந்த வாய்ச் சண்டை உண்மை!  (அல்குர்ஆன். 38:62-64)

அதுபோன்று, மனிதனுடைய தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும்  விதமாக ஒரு விஷயத்தை அல்லாஹ் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.   (அல்குர்ஆன் 49:11)

இந்த வசனத்தில் நாம் ஒருவரை மட்டமாக நினைப்போம். ஆனால் அவர் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராக உயர்ந்தவராக இருப்பார். எனவே இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் கூறும் செய்தி என்னவென்றால், நாம் இந்த உலகத்தில் ஒருவரை நல்லவர் என்று தீர்மானிக்க முடியாது. அல்லாஹ் மட்டும் தான் அனைத்தையும் அறிந்தவன்.

அதுபோக சில வரலாற்றுச் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போதும் நல்லடியார்களை நபியவர்களால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஸஹாபாக்களாலும் நல்லடியார்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வஹியின் மூலம் அல்லாஹ் அறிவித்துத் தான் தெரிந்து கொண்டார்களே தவிர அவர்களால் சுயமாக அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒருவரை நல்லடியார் என கருத அவர் நல்லடியாராக இல்லாமல் போயிருக்கிறார். அதேபோல் ஸஹாபாக்களும் ஒருவரை நல்லடியார் என நினைக்கிறார்கள். அவர் நல்லடியாரா? இல்லையா? என்பதை நபியவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, நாம் யாரையெல்லாமோ அவ்லியாக்கள் என்று நினைத்து வைத்திருக்கிறோம். அவருடைய வரலாறும் தெரியாது. நாம் அவருடைய காலத்தில் வாழவுமில்லை. அவருடன் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கொடுக்கல் வாங்கல் எதுவும் கிடையாது. அவர் ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர். அவர் இறந்து, அவரை அடக்கம் செய்து விட்டார்கள். அவரைப் பற்றி நூல் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதை நாம் படித்துத் தெரிந்து கொள்கின்றோம். இதை வைத்து நாம் அவரை அவ்லியா என்று நம்புகிறோம்.

ஸஹாபாக்கள் தங்கள் கண்முன்னால் பார்த்த ஒருவரை நல்லடியார், மகான் என்று சொல்கிறார்கள். அதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமானவற்றை ஹதீஸ்களில் பார்க்க முடியும்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்துகின்றார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெüப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக்குரியவராக்கி கௌரவித்துக் கொள்வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகின்றாரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; அவரை நம்பவுமாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி),   நூல்: புகாரி 2641

இந்தச் செய்தியின் மூலம், வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் நாம் ஒருவனை நல்லவனா கெட்டவனா என்று தீர்மானிக்க முடியும் என்பது தெளிவாகின்றது. அதே போல் யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. தவறே செய்யாத ஒரு குழந்தையைக் கூட சொர்க்கவாசி என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இதை இறைவனுடைய அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களை அவன் படைத்துவிட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காகவே அவர்களைப் படைத்துவிட்டான்'' என்று கூறினார்கள்.  நூல்: முஸ்லிம் 5175

ஒன்றுமே அறியாத சிறு குழந்தையைக் கூட நாம் சுவர்க்கவாசி என்று கருதி விடக்கூடாது எனும் போது பெரியவர்களை அவ்லியாக்கள் என்றும், அல்லாஹ்வின் இறைநேசர் என்றும் நாம் எவ்வாறு கருத முடியும்?

உஸ்மான் பின் மள்வூன் (ரலி) அவர்களின் மரணம்
நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக்கொண்டிருந்தபோது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), "ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்'' எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் "அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத் தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?'' என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், "இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.'' நூல்: புகாரி 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிக நல்லவராகவும். வணக்கசாலியாகவும் வாழ்ந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் எனும் தியாகப் பயணத்தையும் மேற்கொண்டவர்கள். அன்னார் மரணித்த போது அவர்களோடு பல காலம் நட்பு கொண்ட, அவர்களுடைய நல்லொழுக்கங்களை அவர்களோடு இருந்து அறிந்து கொண்ட உம்முல் அஃலா அவர்கள், "அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன்' எனக் கூறும் போது நபியவர்கள் அதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

நம்முடைய பார்வைக்கு நல்லவராக இருந்தாலும் அவர் நிலை என்னவென்று நாம் தீர்மானிக்க இயலாது என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். நபியவர்கள் கூட ஒரு ஸஹாபி இறந்த பிறகு அவர்களின் நிலையை அவர்களாக அறிய முடியாது என்று சொன்னால் இன்று நாம் யார் யாருக்கெல்லாமோ அவ்லியாக்கள் என்று பட்டம் சூட்டுகின்றோமே இது எந்த வகையில் சரியானது? உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த ஸஹாபி; ஹிஜ்ரத் செய்தவர்; அவர் மரணித்த பிறகு அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான் என்று தீர்மானிப்பதை நபியவர்கள் கண்டிக்கிறார்கள். ஒருவன் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நிலை என்னவென்பதை அல்லாஹ் ஒருவன் தான் அறிவான். அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது.

நம்முடைய பார்வைக்கு ஒருவன் நல்லவனாக வாழ்ந்தாலும் அவன் மரணித்த பிறகு அவன் நல்லவன் தான் என நாம் தீர்மானிக்க முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 (ஏகத்துவம் இதழிலிருந்து .... )