முஹம்மது (ஸல்) அவர்கள் தூதராக வருவதற்கு முன்பே மக்கத்துவாழ் மக்கள், மிகைத்தவனான அல்லாஹ்வை பற்றி அறிந்திருந்தார்கள். அவனை நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இதற்கான சான்றுகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் பரவலாக காணப்படுகின்றன. ஆயினும் அந்த மக்களை காஃபிர்கள் என்றே அல்லாஹ் அருள்மறையில் அழைக்கின்றான். காரணம், அவர்கள் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை; அல்லாஹ்விற்கு மட்டும் அடிபணிவதை அங்கீரிக்கவில்லை என்பதுதான். அவர்களின் இந்தஅரைகுறையான நிலைபாட்டினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற நிகழ்வொன்றைக் காண்போம்.
ஹுதைபியா உடன்படிக்கை :
(ஹ‚தைபியா உடன்படிக்கையின் போது) நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர்,
"பேரருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்...' என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல், " "ரஹ்மான்- கருணையன்புடையோன்' என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், "இறைவா! உன் திருப்
பெயரால்...' என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்'' என்றார். முஸ்-ம்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அளவற்ற
அருளாளனும் கருணை யன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப் பெயரால்' என்றுதான் இதை எழுதுவோம்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், " "பிஸ்மிக்க அல்லாஹும்ம - இறைவா! உன் திருப்பெயரால்' என்றே எழுதுங்கள்'' என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "இது
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்' என்று (எழுதும்படிவாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம்என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும்மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, "முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்று எழுதுங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் - அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது' என்றே எழுதுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : மிஸ்வர் பின் மக்ரமா (ர-),நூல் : புகாரி(2731)
மக்கத்து காஃபிர்கள், அல்லாஹ்வின் பண்புகளிலே சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு சிலவற்றை ஏற்க மறுத்தார்கள். அல்லாஹ்வே அகிலத்தை படைத்தான்; அதை அவனே நிர்வகிக்கிறான் என்பது போன்ற பண்புகளை நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நோய்களை தருவதும், குணப்படுத்துவதும், செல்வத்தை தருவதும், வறுமையை வழங்குவதும் அவன்தான் என்பது போன்ற விஷயங்களில் அவனை முழுமையாக நம்பிக்கை வைக்காமல் இருந்தார்கள். அதுபோல் அல்லாஹ்வை நம்பிய அவர்கள், அல்லாஹ்வால்
அனுப்பப்பட்ட இறுதிதூதராக நபி(ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கவில்லை. இதை முன்சென்ற சம்பவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அந்த மக்கத்து காஃபிர்களிடம் இருந்து மோசமான தன்மை இன்றைய முஸ்லிம்களிடமும் தென்படுகிறது. அல்லாஹ்வை நம்புகிறோம்; அவன் ஆற்றல் மிக்கவன் என்று நம்பியிருக்கும் எத்தனையோ முஸ்லிம்கள் தங்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நோய், வறுமை, நஷ்டம் என்று இருந்தாலும் வேலை கிடைத்தல், தொழில் தொடங்குதல், குழந்தை பிறத்தல் போன்ற இன்பமான நிகழ்வுகளாக இருந்தாலும் அனைத்துக்கும் தர்காக்களிலே சென்று வழிபாடு செய்வதை பார்க்கிறோம்.
மக்கத்து குறைஷிகளின் கோரிக்கை :
இறைவன் ஒருவன்தான் இருக்கின்றான். அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று சொல்லக்கூடியஇஸ்லாம்தான், "மனிதர்கள் அனைவரும் சமம்'' என்ற சமத்துவ கீதத்தை ஒலிக்கவிடுகின்றது. இந்த இரண்டு விஷயத்தையும் ஏற்றுக்கொள்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கவேண்டும். இவற்றில் ஒன்றைஏற்றுக்கொண்டு மற்றொன்றை ஏற்கமறுப்பவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருக்கமுடியாது. அதைஇஸ்லாமும் அனுமதிக்காது. ஆனால் தாங்கள் தான் மனிதர்களிலேயே சிறந்த இனம் என்று குறைஷிகள் மார்தட்டி பெருமையாக பேசிக்கொண்டார்கள். மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே என்பதை ஏற்கமறுத்தார்கள். இதை பின்வரும் சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
தாங்கள் உயர்ந்த குலத்தை சார்ந்தவர்கள் என்று தங்களுக்கு தாங்களே பெருமையாக நினைத்துகொண்டிருந்த மக்கத்து குறைஷிகள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பேரம் பேசியதை நாமெல்லாம் அறிந்து வைத்துள்ளோம். தாழ்ந்த குலத்தவர்கள் என்று கருதப்படக்கூடியவர்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்களை விரட்டியடித்துவிட்டு வந்தால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக பேசினார்கள். நபி(ஸல்) அவர்களும் அந்த குறைஷிகளின் கூற்றுக்கு மதிப்பளித்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அந்நேரத்தில் அங்குவந்த கண்தெரியாத நபித்தோழர் உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கடுகடுத்தவராக நடந்துகொண்டார்கள்.
அப்போது தான் நபிகளாôரின் இந்த காரியத்தை கண்டித்து இறைவன் பின்வரும் வசனங்களை இறக்கினான்.
தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம்
வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். (அல்குர்ஆன் 80 : 1 - 12)
ஆகவே இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டால் அதன் அனைத்து ஏவல்களுக்கும் மறுப்பில்லாமல் மனமுவந்து கட்டுப்படவேண்டும். அதைவிடுத்து, அவற்றில் சிலதை ஆமோதித்து சிலதை அவமதித்து வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த இறைவனின் கண்டனம் பொருந்தும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தெரிந்தே தவறிழைப்பவர்களின் பண்பு :
மக்காவில் வாழ்ந்தபோது முஸ்லிம்கள் முதல் இறையாலயமான கஃபத்துல்லாஹ்வை நோக்கி தொழுதார்கள்.
இதற்கு சான்றாக, மஸ்ஜிதுல் ஹராமிலே தொழும்வேளையில் நபி(ஸல்) அவர்கள் மீது ஒட்டகத்தின் குடல்கள் சுமத்தப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். பிறகு. மதீனாவிற்கு நாடு துறந்து வந்தபோது சுமார் பதினாறு அல்லாது பதினேழு மாதங்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஜெருசலத்திலுள்ள பைத்துல் முகத்திஸை நோக்கி தொழுதுகொண்டிருந்தார்கள். இந்த இரு
கிப்லாவின் விஷயத்திலும் இறைவனின் கட்டளைக்கேற்பவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்துகொண்டார்கள். நபிகளாரை பின்பற்றி முஸ்லிம்கள்களும் அதன் திசையையே முன்னோக்கினார்கள்.
பின்னர், கஃபத்துல்லாஹ்வை நோக்கி தொழவேண்டும் என்ற நபிகளாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அல்லாஹ் வசனத்தை இறக்கினான். அதை நபிகளார் நடைமுறைப்படுத்தும்போது அவர்களை அழகிய வகையில் நம்பிக்கை கொண்ட மக்களும் அதை அமல்படுத்தினார்கள். இந்த வேளையில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி தொழும் திசையை மாற்றிக்கொள்கிறார்கள் என்று குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டு இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிட்டார்கள். இந்த சம்பவத்தை பற்றிய
திருமறை வசனத்தை பார்ப்போம்.
இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடு நிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச்செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே,
ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2 : 143)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தான் என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் அழகிய கட்டளையை நடை முறைப்படுத்துவதற்கு தயங்கினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தவொன்றையும் சுயமாக மனோ இச்சைப்படி செய்ய மாட்டார்கள்; அவர்கள் எதைசெய்தாலும் வஹீயின் அடிப்படையில்தான் செய்வார்கள்; அதன்படி அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வது அனைத்து முஸ்லிம்களின் மீதும்கடமையாக இருக்கிறது என்பதை மறந்து சிலர் செயல்பட்டார்கள். இதன் விளைவு இனிய மார்க்கமானஇஸ்லாத்தை விட்டே புறமுதுகிட்டு சென்று வழிகேடெனும் படுகுழியில் விழுந்தார்கள். இந்தகயவர்களின் தன்மை இன்றைய முஸ்லிம்களிடத்தின் செயல்பாடுகளில் கலந்திருப்பதை கண்கூடாக காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஏற்றுக்கொண்டோம்; அவர்கள் அகிலமக்களுக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை வாய்மொழிகின்ற எத்தனையோ முஸ்லிம்கள், மார்க்க விஷயங்களில் நபிகளாரை மதிக்காமல் செயல்படுவதை பார்க்கிறோம்.
நபிகளாரின் உன்னதமான வழிகாட்டுதலை உதறிதள்ளிவிட்டு, இமாம்களின் சுயகருத்துகளை மத்ஹபு குப்பைகளை மற்றும் மாற்று மதக் கலாச்சாரங்களை தங்களது வாழ்க்கை நெறிகளாக கையிலேந்தி யிருக்கிறார்கள். இவ்வாறு தெரிந்தே மார்க்கத்தில் தவறிழைப்பவர்களின் மற்றொரு பண்பினை அல்லாஹ் திருமறையில் தெரிவித்துள்ளான். அது
தொடர்பான வசனத்தை பார்வையிடுவோம்.
நேர் வழி தங்களுக்குத் தெளிவான பிறகு, புறங்காட்டி திரும்பிச் சென்றவர்களுக்கு ஷைத்தான் அதை அழகாக்கிக் காட்டினான். அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறினான். அல்லாஹ் அருளியதை யார் வெறுத்தார்களோ அவர்களிடம் "சில விஷயங்களில் உங்களுக்குக் கட்டுப் படுவோம்'' என்று இவர்கள்கூறியதே இதற்குக் காரணம். அவர்களின் இரகசியங்களை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 47 : 25,26)
மக்கத்துக் காஃபிர்களை விட்டு தவிர்ந்து தனியாக வந்தபிறகும் அவர்களின் சில காரியங்களை ஆதரிப்பவர்களாக முஃமின்களில் சிலர் இருந்தனர். இதை அல்லாஹ் திருமறையில் பகிரங்கப்படுத்தினான். அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று தவ்ஹீத் சிந்தனைவாதிகளுடன் கைகோர்த்த பிறகும்கூட இதற்கு முன்னால் செய்துவந்த வழிகேடான காரியங்களுக்கு மறைமுகமாக உதவிசெய்பவர்களை இன்றளவும் காணலாம். தர்கா கூடாது என்று விலகிவந்தவர்கள் தர்காவிற்கு வெள்ளையடிப்பதற்கும், கந்தூரி விழா தவறு என்று விளங்கியிருந்தும் பலாச்சோறு தபர்ருக் போன்ற தவறான காரியங்களுக்கு பணஉதவி செய்பவதற்கும் தயாராக இருப்பதை பார்க்கிறோம். எதை விட்டு தவறு என்று தனித்து வந்தார்களோ அதே தவறுக்காக தெரியாமல் உதவிசெய்பவர்களாக காண்கிறோம். இப்படி "ஆற்றில் ஒருகால்; சேற்றில் ஒருகால்' வைக்கின்ற செயல்பாடு மார்க்கத்தை நேசிப்பவர்களிடம் இருக்கவே கூடாது.
தீன்குலப் பெண்மனி
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/deen_kula_penmani/dkp_2011/may-2011-dkp/
Copyright © www.onlinepj.com
thanks: தீன்குலப் பெண்மனிArticle Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/deen_kula_penmani/dkp_2011/may-2011-dkp/
Copyright © www.onlinepj.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்